:) அழகிய தமிழ்மகன் – a deep view (?) :) எவ்வளவோ பண்றிங்க, இதப் படிக்க மாட்டிங்களா?

>> Tuesday, November 27, 2007

தீபாவளி அன்னிக்கு ஒரு பச்சை…சரி, வேணாங்க,நம்மள மாதிரி ஒரு அழகிய(?!)கலர்ஃபுல் தமிழன் என்னவெல்லாம் செய்வான்?! கருக்கல்ல எந்திரிக்குறது கொஞ்சம் சிரமம்தான். இருந்தாலும், காலங்காத்தால நாலு மணிக்கெல்லாம் எந்திருச்சு நறுக்குன்னு நாலு நாசகார வெடிகளப் போட்டு தெருவையே எழுப்பிடணும்,அதுல தெருவுக்கு ஒரு துன்பம், நமக்கு ஒரு சின்ன சந்தோசம், அம்புட்டுதேன்.

அப்புறமா நல்லா எண்ணை தேய்ச்சுக்கிட்டு, சீயக்காய்க்கு பதிலா அம்மா பாத்திரம் தோய்க்க வச்சுருந்த சபீனா பவுடரை எடுத்துட்டுப் போய் தேச்சுக் குளிச்சு அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு வெளில வந்து (அன்னைக்கு மட்டும் பனியன்,ஜட்டி முதற்கொண்டு புதுசுதான்!) லுங்கிய லூஸ் பண்ணி உக்காந்து மட்டன்,சிக்கன்னு போட்டு தாக்கிட்டு எந்திரிச்சா அடுத்த வேலை என்ன? அப்பாகிட்ட அடைப்பப் போடுறதுதான..தாத்தா,பாட்டி,மாமா,அத்தைனு அப்படி இப்படி தீபாவளி கலெக்சன தேத்திக்கிட்டு புது ட்ரெஸ்ஸை எடுத்துப் போட்டு வண்டியக் கெளப்பினாக்க… தெருவுக்குத் தெரு பட்டறைதான், வீட்டுக்கு வீடு பலகாரம்தான். இதுதாங்க,வருஷா வருஷம் நாங்க (எல்லாம் எங்க செட்டுதான்…!) கொண்டாடுற தீபாவளி.

இந்த வருசமும் கிட்டத்தட்ட இதே மாதிரிதாங்க தீபாவளி ஸ்டார்ட் ஆச்சு, ஆனா ஃபினிஷிங்தான் சரியில்லை,எப்படின்னு கேக்கறிங்களா? எல்லாம் நம்ம இளைய தளபதி, இதய தளபதி, டாக்டர்.விஜய் (அப்டிதாங்க டைட்டில் கார்டுல போட்டாங்க..!) நடிச்ச “அழகிய தமிழ் மகன்” படத்த பார்த்ததுனாலதாங்க. தீபாவளி அன்னிக்கு ராத்திரி 8 மணி வரைக்கும் எல்லாம் ஸ்மூத்தா போயிட்ருந்துச்சு.

வில்லனா வந்தான் நம்ம நண்பன் ஒருத்தன், ‘மச்சான் ஏ.டி.எம் டிக்கட் இருக்கு,போவோமாடா’னு கேட்டான்.என்னாடா இது? வழக்கமா ஏ.டி.எம் க்கு கார்டுதான,இவன் என்ன டிக்கட்டுன்றான்னு,ஒரு விசாரணையப் போட்டா அது அழகிய தமிழ் மகனோட அப்ரிவேசனாமாம். அட, இங்கே பார்றா, டைட்டிலே பலப்பல மேட்டர கொட்டுதே,அப்ப படம் எப்டி இருக்கும்னு நெனச்சு தின்னுக்கிட்டு இருந்த அஞ்சாவது புரோட்டாவையும், ஆர்டர் பண்ண ஆம்லெட்டையும் கேன்சல் பண்ணிட்டு எந்திருச்சுட்டேன்.

கூடவே நம்ம செட்டு பசங்க ஒரு பத்து பேரும் கெளம்பிட்டாய்ங்க, அப்போ பார்த்து இன்னொருத்தன் வந்து மாப்ள, ஏ.டி.எம் ரிசல்ட் தெரியல (அவரு ‘தல’ அஜீத் ரசிகர்),வாங்கடா, வேல் இல்லாட்டி பொல்லாதவன் போவோம்னு கூட்டத்துல ஒரு சலசலப்ப உண்டாக்கிட்டான், விட்ருவோமா நாங்க, அங்க விட்டேன் ஒரு டயலாக் ‘டேய்,ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா அப்புறம் என் பேச்சை நானே கேக்க மாட்டேன்’னு. டயலாக் விட்டதுதான் தாமதம் பசங்க உய் உய்னு விசிலடிச்சுட்டே போய் நேரா தியேட்டர்லதான் வண்டிய நிப்பாட்டுனாய்ங்க. சத்தியமா அப்போ தெரியலீங்க, சொந்த செலவுல சூன்யம் வைச்சுக்கப் போறோம்னுட்டு.



டிக்கட் கவுன்டர்ல கூட்டம் அப்டி ஒண்ணும் பெருசா இல்ல,சரி ஒருவேள செகண்ட் ஷோ அப்படிங்கறதாலயோ இல்ல நம்ம லேட்டா வந்ததாலயோ கூட இருக்கலாம்னு உள்ள போய் உக்காந்தா பஞ்சரான ட்யூப் மாதிரி தியேட்டர் தொஞ்சு போய் கெடக்கு…மொத்தமே நூறு பேரைத் தாண்டாது. இளைய தளபதி படத்து ரிலீஸ் அன்னிக்கு இந்த தமிழக ஆடியன்ஸ் கொடுக்குற ரெஸ்பான்ஸ் இவ்ளோதானா? என்ன கொடும சார் இது? அப்படின்னு உக்காந்தா ஒரு வழியா படம் ஸ்டார்ட் ஆயிடுச்சு. (டேய் இப்போதான் நீ மேட்டருக்கே வர்றியானு கேக்கறிங்களா? என்ன பண்றது, படத்துல சரக்கு ரொம்ப கம்மி!)

படத்துல விஜய் பேரு குரு, அவர் ஒரு ஓட்டப்பந்தய வீரர் (ச்ச்சூ..! சிரிக்காம கதை கேக்கணும்),ஒரு ரன்னிங் மீட் போறார், அந்த மீட்ல அவர ஓட விடாம தடுக்குற கும்பலோட ஓப்பனிங்லயே ஒரு சண்டை, நடுவுல ‘டேய்,நான் ஒரு தடுக்கமுடியாத காட்டாறு’ அப்டின்னு ஒரு பஞ்ச் டயலாக், அப்புறம் வழக்கம்போல நூறு பேரோட சேர்ந்து ஆடற பாட்டு…..ஹாவ்வ்வ்வ்வ்வ்வ்..! ஆரம்பமே எனக்கு கண்ணக் கட்டிருச்சு. ஏம்பா, இந்த ஃபார்முலாவ மாத்தவே மாட்டிங்களா?

சரி, அப்படின்னு விதிய நொந்துக்கிட்டு படத்த பார்த்தா, படத்துல வழக்கத்துக்கு மாறா ஷகீலா வீட்டு ஓனரா வர்றாங்க, ஷகீலாகிட்ட விஜய்,சந்தானம் கோஷ்டி பேசுற டயலாக்ஸ் எல்லாம் டூமச் ரகம். தேவையே இல்லாத சீன்ஸ், அறுவை டயலாக்ஸ்னு தாங்கவே முடியாத மொக்கை படத்துக்கான சகல தகுதிகளையும் டைரக்டர் பரதன் முதல் முப்பது நிமிசத்துலயே உண்டாக்கிடறார்.அதுலயும் கீழ் வீட்டு குழந்தைக்கு விஜய் எழுதிதர்ற கவிதை, ஆஹா,சூப்பரப்பு…(காயத்ரி, அய்யனார், தமிழ்நதி மற்றும் இன்னபிற ‘கவிதை’ அன்பர்கள் இந்த சீனை தவிர்த்தல் நலம்).அதுக்கு முதல் பரிசு வேற கெடைக்குது. அந்த சங்கப்பலகைக் கவிதை இதோ…

“நீயும் நானும் ஒண்ணு,காந்தி பொறந்த மண்ணு !
டீக்கடையில் நின்னு தின்னு பாரு பன்னு..!”

இந்த வரிகளுக்கு டீச்சரம்மா கொடுக்கும் விளக்கம்…அய்யோ, கொடுமைடா சாமி. தமிழ்நாட்டு ரசிகர்களோட ரசனைய ரொம்ப நல்லா மதிக்கிறிங்க கிரியேட்டர்களே.! சந்தோசம்.

ஸைமல்டேனியஸா ஹீரோயின் இண்ட்ரொ இருக்கணுமே! கரெக்ட், ஸ்ரேயா இனிதே என்ட்ரி ஆகுறாங்க, உண்டக்கட்டி வாங்கி எறும்புக்கு வைக்கிற அளவுக்கு தாராள மனசு அவங்களுக்கு.(நம்மளுக்கு எறும்பு கூட்டத்த க்ளோசப்ல காட்டி கிராபிக்ஸ்ல கொலை பண்றாரு கிரியேட்டர்.) கடவுள்கிட்ட,தோழியோட அண்ணன் ஜெயிக்கணும்கறதுக்காக குரு தோக்கணும்னு சத்தமா(!) வேண்டிக்குறாங்க ஸ்ரேயா. இத பார்த்த விஜயும், சந்தானமும் அவங்கள கலாய்க்கிறாங்க. அப்புறமா விஜய் அந்த பையனுக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டால வேலை கெடைக்கணும்கறதுக்காக வேணும்னே தோத்து போறார். இத எலக்ட்ரிக் ட்ரெயின்ல போறப்ப போன்ல அவுரு அம்மாட்ட சொல்றாரு, பின்னால இருந்து இத கேக்கற ஷ்ரேயாவுக்கு லவ் வந்துருது. ஹாவ்வ்வ்வ்வ்வ்...! முடியல…

பிறகு அறிமுக படலம், காதல்னு இவங்க வண்டி ஓடிட்டு இருக்கு. ஸ்ரேயா அவங்களுக்கு சொந்தமான ரெசார்ட்ல விஜய் கூட இருக்கும் போது ட்ரெஸ்ல தண்ணி பட்ருது,அத மாத்துறதுக்காக ரூமுக்கு போறாங்க,கூடவே விஜயும் போறார். அப்போ பார்த்து அப்பா ஆசிஷ் வித்யார்தி அங்க வந்துர்றார். தன்னோட மகளோட ஒழுக்கத்த அவுரு சந்தேகப்பட்டு பேச காதலன் விஜய் பொங்கி எழுந்துர்றார். மன்னிப்பு கேட்டாதான் விடுவேன்னு சொல்லி ஸ்ரேயா அப்பாகிட்ட போர்க்கொடி தூக்கிர்றார்(இங்க பார்றா..!), அட, பெத்த பொண்ணுகிட்டயே அப்பாவ மன்னிப்பு கேட்டாதான் விடுவேன்னு சொல்ற ஒருத்தன் இருக்கானானு நெனச்சு பூரிச்சு போய், மன்னிப்பு கேட்டு லவ்வுக்கு பச்ச கொடி காட்டிட்டு யு கேரி ஆன்னு சொல்லிட்டு போயிடுறார். அடப்பாவிகளா! பொதுவா நாங்க தமிழ் படத்துல லாஜிக் பாக்கறதில்லை, பூ சுத்துங்கப்பா, அதுக்குனு ஒரு லிமிட் வேணாமா…!

என்னப்பா,ஒரு த்ரில்லே இல்லாம திரைக்கதை போயிட்ருக்கே அப்படின்னு நம்ம நினைக்கிற செகண்ட்ல இருக்கு ஒரு கொண்டை ஊசி திருப்பம்..!
விஜய்க்கு ESP அப்படின்னு சொல்லப்படற Extra Sensory Perception சக்தி இருக்கு, அதாகப்பட்டது பின்னால் நடக்கக்கூடிய மேட்டர்கள் இவுருக்கு முன்கூட்டியே தெரிஞ்சுடும். முதல் சம்பவமா தனக்கு கீழ் வீட்ல இருக்கற குட்டி பொண்ணு செத்துப்போற மாதிரி காட்சிகள் இவரு மனசுல விரியுது, அதே மாதிரி அந்த பொண்ணு இறந்தும் போயிடுது. சோ, நம்ம ஆளு ரொம்ப அப்செட்,ஆனாலும் ஸ்ரேயா கூட லவ்வ கண்டின்யூ பண்றார்.

அப்பா அம்மாகிட்ட நேர்ல பேசறதுக்கு பயந்து லெட்டர் விடு தூது நடத்துறார்.உடனே அவங்க அப்பா, பையன தூக்கிட்டு வர்றேன்னு கீதாகிட்ட(சிவகாசிய தொடர்ந்து ரெண்டாவது அம்மா கேரக்டர் அவங்களுக்கு, பாவமே! ) சொல்லிட்டு ஊரையே பஸ்ல அள்ளிக்கிட்டு நேரா ஆசிஷ் வீட்டுக்கே வந்துர்றார். ஸ்ரேயாவும், விஜய் அப்பாவா வர்றவரும் யேய், யேய்னு கத்திக்கிட்டு இருக்க நமக்கு காது ரிங்குது. ஒரு வழியா கல்யாணத்துக்கு அப்பா சம்மதிச்சிறார், சந்தோசமா, வந்த ஊர் மொத்தமும் பேக் டு பெவிலியன் ஆகுது.

அந்த நேரத்துல ஊருக்குப் போன மொத்த கூட்டமும் ரயில் விபத்துல சிக்கிக்கற மாதிரி காட்சிகள் விஜய் மனசுல தோணுது. விஜய் அவங்கள எப்படி காப்பாத்துறாரு அப்படின்னு பாக்கற ஆர்வத்துல நான் சீட்டோட நுனிக்கே போய் முன்னாடி இருந்த ஆள் தலையிலே மோதிட்டேன், அந்த அளவுக்கு ஒரு விறுவிறுப்பு… ஆனா பாருங்கண்ணா,இந்த பாழாப் போன லாஜிக் அங்கயும் உதைக்குது. பஸ்ச பின்னாடியே விரட்டிட்டு வர்ற விஜய் எப்படி முன்பக்க கண்ணாடிய உடச்சுட்டு வரமுடியும்? டைரக்டருக்கே வெளிச்சம்.

அப்புறம் டாக்டர் ருத்ரன சந்திக்கிறது, ஸ்ரேயாவ கூட்டிட்டு போய் கிராமத்துப் பொண்ணாக்கி அம்மாகிட்ட சம்மதம் வாங்குறது, கழுத்து நெறய மாலைய போட்டுக்கிட்டு பொட்டல் காட்டுல கூட்டத்தோட பாடிக்கிட்டே நடந்து வர்றதுனு கி.பி ரெண்டாம் நூற்றாண்டுலருந்து தொன்று தொட்டு வர்ற மொக்கைகளை பார்த்து வெறுத்துப்போய் உக்காந்திருந்த நேரத்துல வீட்டுலயிருந்து இந்தியா பாகிஸ்தான் மேட்ச்சோட ரன்னிங் கமெண்ட்ரி வேற வந்து வெறுப்பேத்துது.


சரி,படத்தோட டோட்டல் வால்யூ என்னான்னு ஃபர்ஸ்ட் ஹாஃப்லயே தெரிஞ்சுடுச்சு, பொத்துனாப்புல வண்டியக் கட்டிக்கிட்டு வீடு போய் சேருவோம்னு நெனச்சா திரைக்கதைல அடுத்த ட்விஸ்ட்… அதாகப்பட்டது, விஜய் தன்னோட கையாலேயே ஸ்ரேயாவ கொல்ற மாதிரி கனவு காண்றார், உடனே தன்னால காதலிக்கு ஆபத்து வந்துடக்கூடாதுன்னு நெனச்சு ஸ்ரேயா கூட சண்டை போட்டுட்டு மும்பை போயிடறார்.

அங்க இன்னொரு ட்விஸ்ட், மும்பை போனவுடனே அச்சு அசலா தன்னை மாதிரியே இருக்கற இன்னொரு விஜய் ரவுடித்தனம் பண்ணிட்டு இருக்கறத நேர்ல பாக்கிறார். உடனே புரிஞ்சுடுது, நம்ம ஆளுக்கு,இவந்தான் காதலிய கொல்லப்போறான்னுட்டு. அவன தடுக்கப்போற நேரத்துல தலையில அடிபட்டு மயக்கமாகிடுது. கெட்டவனான இன்னொரு விஜய் மும்பைலருந்து சென்னை போறார்.அப்போ பார்த்து இன்டெர்வெல் விட்டாங்க (சஸ்பென்ஸாம்!). ஆஹா,இது என்னடா புது கரடியா இருக்கு,ட்விஸ்டுக்கு மேல ட்விஸ்ட்டா இருக்கே.சரி ஆனது ஆச்சு, முழு படத்தையும் பார்த்துருவோம் அப்படின்னு சீட்ட விட்டு எந்திரிச்சவன் நம்பி உக்காந்துட்டேன்.


அதுக்கப்புறம் பார்த்தா ஒண்ணுமே சரியில்லிங்க, இஸ்கூல் பசங்க நாடகம் கணக்கா ஆயிடுச்சு ரெண்டாவது பாதி. பூர்வஜென்மத்து மேலயும், அதுல செஞ்ச பாவங்கள் மேலயும் நமக்கு நம்பிக்கை வர்ற அளவுக்கு கொடுமைப்படுத்துறாங்க. ரயில்ல நமீதா, சின்னபுள்ளயா இருந்தப்ப எடுத்த டிரெஸ்ஸ போட்டுட்டு வர்றாப்பல.ஒரு பாட்டு பாடிட்டு காணாமாப் போயிர்றாப்பல.இதுக்கு பேசாம ஷகீலாவையே அந்த கேரக்டர்ல நடிக்க விட்ருக்கலாம்.நமீதா ரசிகர் மன்றத்தினர் யாராச்சும் போராட்டம் பண்ணினாத்தான் தமிழ் சினிமா உலகம் நமீதாவோட அருமைய உணரும்.

பாட்டு முடிஞ்சவுடனே வழக்கமான பல்லவிதான்…கெட்டவனான விஜய் உண்மையான குருவோட இடத்துக்கு போறது,அவரோட கையெழுத்து மற்றும் பழக்கவழக்கங்களை டைரி மூலமா தெரிஞ்சு அதே மாதிரி செய்றது, ஸ்டேஜ்ல ஆன் தி ஸ்பாட் கவிதை சொல்லி நம்மள கொல்றது, உண்மையான குருவோட வருகை, தான்தான் ஒரிஜினல் அப்படிங்கறதுக்கான போராட்டம், ஓட்டப்பந்தயம்-அதுல போலியான அத்லெட்டக் கூட கண்டுபிடிக்க முடியாத உயிர் நண்பர்கள் மற்றும் காதலி… இப்படி அமெச்சூர்தனமா பயங்கர ஸ்லோவா…சாரி.. ஸ்லோவா பயங்கரமா நகருது திரைக்கதை.

இறுதில ஸ்ரேயா போலியை எப்படி அடையாளம் கண்டார்? காதலர்கள் ஒண்ணு சேர்ந்தாங்களா? போலி என்ன ஆனார்? பதில் வேணும்னா மீதியை வெள்ளித்திரையில் காண்க. இவ்வளவு சொன்னதுக்கப்புறமும் படம் பார்த்திங்கன்னா, அந்த நீளமான க்ளைமேக்ஸையும், அதுக்கப்புறம் வரும் அட்வைஸையும் மிஸ் பண்ணிராதிங்க மக்களே!

படத்துல பாராட்டப்பட வேண்டிய நபர்கள் விஜய்யும், கேமராமேன் பாலசுப்ரமணியெமும் தான். விஜய் அழகா வர்றார், பாடி லாங்வேஜ்ல வித்தியாசம் காட்றார். மொத்ததுல தன்னோட வேலைய மட்டும் கரெக்டா செய்துருக்கார். வழக்கத்துக்கு மாறா மத்தவங்கள கண்டுக்கல போல.! கேமராவும் பின்னி பெடலெடுக்குது. இசை a.r.ரஹ்மானாமே..? ரெண்டு பாட்டுதான் தேறுது. BGM வேற ஆள் செஞ்சாங்களா சார்? உங்கள ஸீன்ல தேட வேண்டியிருக்கு?அல்லி அர்ஜுனா,தாளம்,ஸ்டார்னு பழைய சரக்கு நிறையவே கேட்கக்கிடைக்குது! அதான் கேட்டேன். ஸ்ரேயா பாடல்கள் எல்லாத்துலயும் கொள்ளை அழகு, ஆனா தொடர் கவர்ச்சி தமிழ் ரசிகர்களுக்கு சீக்கிரமே சலிப்பு தட்டிரும்னு நினைக்கிறேன்.

எடிட்டிங் ஏரியா டோட்டலா காலி! எடிட்டர் என்ன செய்வார் பாவம், எடுத்துக் கொடுத்தத்தான எடிட் பண்ண முடியும்! டைரக்டர் பரதன், விஜய் மாதிரி ஒரு வசூல் கில்லிய சுத்தமா வேஸ்ட் பண்ணிட்டார்.விஜய் நடிச்ச பகவதி, மதுர, புதிய கீதை போன்ற உன்னத காவியங்களோட வரிசைல இந்தப் படத்தையும் சேர்த்துட்டார். அஜீத்துக்கு ஆற்றும் உதவி்?

மொத்ததுல இந்தப் படத்தோட ரிசல்ட்னா… ரியல்லி சாரி டு ஸே திஸ்…‘உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக..!’ போன்ற குரல்களை ‘கலைஞர் டிவி’லயோ அல்லது ‘சன் டிவி’லயோ சீக்கிரம் எதிர்பார்க்கலாம்…

வலைப்பூ அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

Final Destination-part 1, 2 & 3 படங்கள் மாதிரியோ அல்லது மலையாளப் படமான அய்யர்-தி கிரேட் மாதிரியோ இந்தப் படம் இருக்குன்னு உங்க நண்பர்கள் யாராச்சும் சொன்னா அவுங்கள உங்க முதலாவது எதிரியா பாவிச்சு ஃபிரெண்ட்ஷிப்ப கட் பண்ணிருங்க.
எல்லாத்தையும் மீறி படம் பார்த்தே தீருவேன்னா என்னைய மாதிரி தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு நைட் ஷோ போகாதீங்க !

இளைய தளபதிக்கு ஓர் வேண்டுகோள்:

இளைய தளபதி,உஷாராயிருங்க, உங்க மார்க்கெட்டை காலி பண்ண ஒரு கூட்டமே அலையுது போல! பில்லா வேற ரிலீசாவுது, அஜித் பஞ்ச் டயலாக், கார் ரேஸையெல்லாம் மூட்டை கட்டிட்டு நல்ல புள்ளயா நடிக்க ஆரம்பிச்சுட்டாரு, தலைவி நயன்தாரா இந்த படத்துல டூ-பீஸ்ல வர்றாப்லயாம். யுவன் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் கொடுத்துருக்காராம், கொடுக்கற பில்டப்பப் பார்த்தா பில்லா எப்படியும் கல்லா கட்டிரும்னு நினைக்கிறேன். போனது போகட்டும், நீங்க சீக்கிரம் “குருவி”ய பறக்கவிடுங்க,இல்லாட்டி டீல்ல விட்ருவாய்ங்க!



Read more...

கதைமாந்தன் கதை

>> Monday, November 12, 2007


இரகசியங்களால் கட்டமைக்கப்பட்ட உனது இந்த உலகத்தின் தனிமையில் இருந்து தப்பிப்பதற்காகவும், கொண்ட சுய கழிவிரக்கத்தின் பெயரிலுமாய் என்னை நீ புழுக்கம் தாளாத இப்பகற்பொழுதில் எழுதத் தூண்டுகிறாய். இருள் கவிந்த இந்த அறையினுள் உனக்காக நான் கடந்த இரண்டு மாதங்களாய் காத்திருக்கிறேன், ‘நான் வருவதற்கான வாய்ப்புகளை உண்டாக்குவது உனது கையில் இருக்கிறது’ என நீ சொல்லிச் சென்றதை நம்பி இருளுக்குள் நடமாடுவதாய் உருவகித்துக் கொண்ட இந்த பிசாசுகளுக்கு உன் மீதான காதல் கவிதைகளை வாசித்துக் காட்டிக்கொண்டிருக்கிறேன். இவை நிச்சயம் உனக்கு பரிச்சயமானவையாய் இருக்கக்கூடும், உனக்கு பிசாசுகளின் மொழி தெரியும் என நான் உறுதியாய் நம்புவதால்.

என்னை நான் படைத்துக் கொள்கிறேன், எவ்வாறு படைத்துக் கொள்கிறேனோ அவ்வாறே சுயபரிசோதனைகள் தோல்வியுறும் பட்சத்தில் அழித்துக்கொள்ளவும் தயங்கியதில்லை. எனது உள்வெளி அரங்கங்கள் ஜியோமிதி கோணங்களுக்கு உட்படாமல் முட்டிக்கொள்ளும் போதெல்லாம் கடவுளின் தந்தை உன்னைப் புணர்வதில் தோல்வியுற்று தற்கொலைக்கு முயல்கிறார். அன்றைய தினங்களில் மனதின் விகாரங்கள் நீண்டு இராப்பொழுதைக் கழிக்க முடியாமல் நீ தெருவில் உலா வரும் தருணங்களில் நான் மீண்டும் உன்னைப் படைக்கிறேன் ஆனால் எத்தனை முறை படைத்தாலும் நீ திரும்பவும் சாத்தானாகவே உருக்கொள்கிறாய்.

தேவதைக் கதைகள்- பாகம் 7 எழுதிக் கொண்டிருக்கும் ஒரு கதாசிரியனின் நாவலில் 118 ஆம் பக்கத்தில் வாழ்கிறான் பிசாசுகளுக்குக் கவிதை வாசிப்பவன். தன்னை மறந்து காதலில் மூழ்கியிருக்கும் அந்தப் பேடியிடம் இந்நாவலைப் படித்துக் கொண்டிருக்கும் நீ தயவுசெய்து சொல், 60 நாட்களுக்கு முன் அவனுண்ட உணவு அவன் தங்கை தன் உடலை சிலருக்கு தின்னக்கொடுத்துப் பெற்ற பணத்தில் சமைத்தது என்பதை. கதையின் முடிவில் அவனை மனநல மருத்துவமனையில் வைத்துப் பேணச்சொல்லி கதாசிரியன் பரிந்துரைக்கிறான் என்பதையும் கூறிவிடு.

மனநலம் காப்பது சமூகத்திற்கு நல்லது என்று சொல்லும் புனிதர்களையும், யூஜெனிக்ஸ் மற்றும் யூதெனிக்ஸ் வகையறாக்களை வீட்டிற்குள் பின்பற்றும் தந்தைகளையும், சாடிசம் என்ற ஒற்றை வார்த்தையில் உனது அடிமனது ஆசைகளை இச்சமூகத்தின் முன் கேலிப் பொருளாக்கி வேடிக்கை பார்க்கும் மனநல மருத்துவர்களையும் கூண்டோடு கழுவில் ஏற்ற நான் சமூகநல வழக்கு தொடுத்தால் உன் கடைக்கண் பார்வை கிட்டக்கூடும் என பிசாசுகளின் தலைவனானது எனக்கு குறி சொல்லிற்று. அன்பே, தொடர்ந்து இருளில் இருப்பதால் பார்வை மங்கி வருகிறது, கதையின் முடிவில் நான் கொல்லப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதால் அதற்கு முந்தைய பக்கத்திலாவது உனது பிரவேசம் இவ்வறையில் நிகழட்டும்.

பெண் என்ற பெயர்ச்சொல் கொண்டு அவர்கள் உன்னைப் புரிந்துகொண்டதில் எனக்கு மகிழ்ச்சியே, உன்னளவில் உனக்கு கொடுக்கப்பட்ட இலக்குகளைக் காட்டிலும் நீ அதிகமாகவே கடந்த காலங்களில் அடைந்து வந்திருக்கிறாய், இந்த நொடி வரையிலும் உலகின் தவிர்க்கமுடியாத உந்துசக்தியாக உன்னை முன் நிறுத்தும் இப்பொழுதில் விலக்கப்பட்ட கனியை உண்பதற்கு உன்னைத் தூண்டியதன் நோக்கம் நிறைவேறி விட்டதாகவே தோன்றுகிறது. நான் உன்னை எந்த ஆணின் விலா எலும்பிலிருந்தும் படைக்கவில்லை,மாறாக உன்னை என் கொம்புகளில் ஒன்றை உடைத்துப் படைத்தேன். கடவுளின் தொன்மங்களைக் கண்டறிந்து இப்புவியின் கடைசி பிரஜையிடம் இருந்தும் நீ அதை நீக்கும் வரை நான் மரிக்காதிருப்பேன். நீ இங்கு வந்து போவது குறித்து கடவுளின் தந்தையிடம் கூறாதே, மீறினால் உன் மீதான வன்புணர்வு தாக்குதல்கள் அளவின்றி கட்டவிழ்த்து விடப்படும்.

நீ என் கால்களில் தரித்துவிட்ட சங்கிலிகளை அறுக்க முடியாததால் என் கணுக்கால் எலும்பும், பாத எலும்பும் ஒன்றுசேரும் இடத்தை உடைத்துவிட்டேன். எலும்புகள் அற்ற சதை இலகுவாக வளையத்தின் வழியே சென்று வருகிறது. ஏதாவது காலடிச்சத்தம் கேட்டால் நானே சங்கிலியில் என்னைப் பிணைத்துக்கொள்கிறேன், அயர்ந்து தூங்கும் போது வரும் கனவில் நான் உறங்குகிறேன், அருகில் சில கழுகுகள் என் தங்கையின் உடலைக் கொத்தித்தின்று கொண்டுள்ளன. திடுக்கிட்டு விழிக்கையில் பிசாசுக் குழந்தை ஒன்று என் கால்களை வளையத்தில் கோர்த்து விளையாடிக் கொண்டிருக்கிறது - அத்தருணங்களின் வேதனை அளவிட முடியாதது மட்டுமல்ல, உன்னால் உணர முடியாததும் கூட.

உடற்காயங்களில் இருந்து வெளியேறிய இரத்தம் இந்த அறைக்கு இளஞ்சிவப்புடன் கூடிய கவிச்சித்தன்மையானதொரு புதிய வசீகரத்தை ஏற்படுத்தியிருக்கிறது கருப்பையைப் போல. உன் நினைவு அலைகளின் தூண்டுதல் இன்றியே இன்னும் சரியாக 78 பக்கங்கள் கழித்து நான் தற்கொலை புரிந்து கொள்வேன்,மன்னித்து விடு, நீ இக்கதையில் மீண்டும் வருவதற்கான வாய்ப்பை வழங்காமைக்கு. நீண்ட காத்திருப்பின் முடிவாக நினைவு தப்பி மயங்குகையில் உண்டாகும் வெளியில் சூல் கொள்ளும் வெற்றிடத்தைப் பற்றி கவிதை செய்ய எண்ணி சில குறிப்புகளை மயங்கும் முன் நினைவில் பதிப்பிக்கிறேன். எப்படியும் இறக்கும் முன் என் தங்கைக்கு மட்டுமே உரித்தான கருப்பொருளில் இந்த இரங்கல் கவிதையை எழுதிவிடுவேன்.

நன்றி : சுஜி, மீரா, செல்வி, சத்யா, அனுராதா மற்றும் கற்பகம்



Read more...

பின்பனி

>> Tuesday, November 6, 2007


நீண்ட இரவோடு
பயணித்து அடைந்தாய்
என் அறை வாசலை கனவின் வழி.

அடர்ந்த பனிக்காற்றின்
குளுமையுடனும்
ஊதா நிறத்தில் பேசிய வார்த்தைகளாலும்
நிரம்பத் தொடங்கிற்று அறை.

வெளியேறுகையில்
விட்டுச்சென்ற வார்த்தைகளின்
படிமங்கள் சாளரத்தில்
காணக்கிடைக்கின்றன
பனித்துளிகள் போல்…

அந்தக் குளிர்வு வெகுகாலம்
அகலாமல் இருந்தது உறைந்த
புன்னகையுடன் கூடிய என்
புகைப்படத்துள்.



Read more...

மீண்டும் சந்திக்கலாம்…

நாம் மீண்டும் சந்திக்கலாம்…

வழக்கமாய் தேர்ந்தெடுக்கும்
இருள் மூலை மேசையைத் தவிர்த்து
பொதுவில் அமரலாம்.

நிரப்பப்பட்ட தேநீர் கோப்பைகளில்
நம் நாவின் வன்மம் கலந்துவிடாமல்
இதழ்களில் வைத்துப் பருகலாம்.

விட்டுச்சென்ற மற்றும்
எடுத்துப்போன ஆடைகளை
பரிமாறிக்கொள்ளலாம்.

பிரிந்த பின், நம் உரையாடலில்
சாதுர்யமாய் நீக்கப்பட்ட
வார்த்தைகளைக் கொண்டு
ஒரு கவிதையைப் படைக்கலாம்.



Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP