தசாவதாரம் - விமர்சனங்கள் - தேவை மீள்பார்வை

>> Monday, June 23, 2008

புகுமுன்: இது தசாவதரம் படத்திற்கான விமர்சனம் இல்லை

தசாவதாரம் படத்துக்கு போதும் போதுங்கிற அளவுக்கு நம்ம பதிவர்கள் விமர்............சனம்.............! எழுதி ஏற்கனவே துவைச்சு காயப்போட்டுட்டாங்க! இதுல நாம வேற எழுதி மக்கள்கிட்ட வாங்கிக் கட்டிக்கணுமான்னு ஒரே யோசனை. இவ்வளவுக்கும் நான் படம் பார்த்தது மூணாவது நாள்தான்,அது வரைக்கும் விமர்சனம் எதுவும் படிக்கலை. பார்த்துட்டு வந்து எதாவது கருத்து சொல்லலாமேன்னு தமிழ்மணத்தப் பார்த்தா டவுசர் கிழிஞ்சிடுச்சு [ sincere thanks to : லக்கிலுக் J ]. பார்ப்பன மலம்கிறாங்க, தலித்துக்கு பூ’வராகன்’ அப்படின்னு எப்படி பேர் வைக்கலாம்கிறாங்க, நுண்ணரசியல்கிறாங்க...இன்னொரு பக்கம் தசாவதாரம் உலகத்தரமா? இந்தியத்தரமா ?... “நடுவர் அவர்களே, உலக சினிமா என்பதற்கான வரையறை என்னவென்றால்...” அப்படிங்கற ரேஞ்சுல பெரிய பட்டிமன்றமே நடக்குது. தசாவதர விமர்சன சுட்டிகளுக்கே தனிப்பதிவுன்னு தாவு தீர்ந்துடுச்சு போங்க, அப்போ முடிவு பண்ணினேன் நாம எதுக்கும் படத்த ரெண்டாவதுவாட்டி பார்த்துட்டு கருத்து சொல்லலாமேன்னு. நேத்து பார்த்துட்டேன், இப்போ சொல்றேன்... படம் நல்லா இருக்கு, நல்லா இருக்கு, நல்லா இருக்கு..!


படத்த பார்க்கப்போறதுக்கு முன்னாடி ஒரு விசயத்த நீங்க கண்டிப்பா மறந்துடணும் அது என்னன்னா கமல் பத்து வேசத்துல நடிச்சுருக்கார் அப்படிங்கறதைத்தான். (கஷ்டம்தான்,இருந்தாலும் முயற்சி செய்யுங்க ). ப்ளாங்கா உள்ள போய் உக்காந்திங்கன்னா ஒரு pure entertainer பார்த்த திருப்தி இருக்கும். அத விட்டுட்டு வண்டிக்கு டோக்கன் போட்றவர்ல ஆரம்பிச்சி கோன் ஐஸ் விக்கிறவர் வரைக்கும் இது கமலான்னு ஆராய்ச்சி பண்ணிங்கன்னா குழப்பம்தான் மிஞ்சும், படத்த follow பண்ண முடியாது.

இந்தப் படத்தை பொறுத்த வரை கமல் ஒரு நடிகனாக வெற்றி பெற்றதைவிட, நல்ல திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாக வெற்றி பெற்றுள்ளார் என்ற லக்கியின் கருத்தை நான் வழிமொழிகிறேன். மற்றபடி படத்தின் கேரக்டர்கள், கேயாஸ் தியரி, (இந்த தியரி இப்போது வரைக்கும் புரியாதவர்கள், அந்நியன் படத்தில் அம்பியின் அப்பா ஃப்ளாஷ்பேக்கில் அந்த குட்டிப்பெண் இறந்த பின்னர் கோர்ட்டில் வைக்கும் வாதங்களைக் கேட்கவும், ஒரு மரணத்தை புற உலகில் சமுதாயத்தின் மற்ற நிகழ்வுகளோடு தொடர்பு படுத்தும் அந்தக் காட்சி சாமான்யனுக்கும் புரியக்கூடும்) பாடல்கள்,ஒளிப்பதிவு,வசனங்கள், அசின் மற்றும் முக்கியமாக மல்லிகா ஷெராவத் பற்றி ஏற்கனவே தேவைக்கும் அதிகமாக பதிவர்கள் துவைத்து விட்டதால் நான் துவைப்பதற்கு ஒன்றுமில்லை.




ஆனால்,எனக்கு மிகவும் உருத்திய விஷயம் மேக்கப். பாதி கெட்டப்களுக்கு மேக்கப் சரியில்லை, கண்களை உறுத்துகிறது. படம் பார்ப்பவர்களுக்கு ஏதோ பிளாஸ்டிக் சர்ஜனிடமிருந்து அரைகுறை ஆப்பரேஷனில் தப்பி வந்த பேஷண்டை பார்க்கிற உணர்வு. என்னயக் கேட்டா கமல் சார், நீங்களே பத்து கேரக்டர்லயும் நடிச்சுருக்க வேண்டாம், அப்புறம் எப்படி தசாவதாரம்னு பேர் வைக்கமுடியும்னு கேக்கறிங்களா, அதுவும் சரிதான். வைச்சாச்சு, நடிச்சாச்சு. nothing to do, enjoy J. ரப்பர் முகமூடிகள மாட்டிக்கிட்டு உணர்ச்சிகளக் காட்ட முடியாததால் ஒவ்வொரு கெட்டப்பயும் பேச்சுலயும் உடல்மொழியிலயும் வித்தியாசப்படுத்தியிருக்கார். அதுலயும் அந்த ஜப்பானியனின் உடல் மொழி சிறந்த வெளிப்பாடு.

//பல காட்சிகளின் மொழி, மாஸுக்குப் பிடிபடாமல் போகும் சாத்தியம் இருக்கிறது - பினாத்தல் சுரேஷ் // அப்படின்னு சொன்னத நிரூபிக்கிற மாதிரி படத்துல சில காட்சிகள் இருக்குது. சாம்பிளுக்கு ஒன்னு - புஷ் வரும் சீன்களில் என் முன்னால இருந்த நபர்கள் “என்ன ஜார்ஜ் புஷ் இப்படியா மடத்தனமா பேசுவார்? சும்மா சொல்றானுங்க.” என்றனர். Michael moore-ன் Fahrenheit 9/11 படத்த பார்த்தால் புஷ்ஷோட அறிவும், சாதனைகளும் எத்தகையது என்பது அனைவருக்கும் தெரியவரலாம். புஷ் பற்றி அமெரிக்காவுலய அந்த ஓட்டு ஓட்றாங்க நம்மள கண்டுக்கமாட்டாங்கன்னு கமல் நெனச்சுருப்பார் போல! பொதுவா தெரியிற ஒரு சில குறைகள தவிர்த்துட்டு பார்த்தால் ஒரு மேல்தட்டு ரசிகனுடைய பார்வைக்கு என்ன தேவையோ அது கிடைக்கிறது அதே நேரத்தில் ஒரு கடைக்கோடி ரசிகனுக்கு இப்படத்தில் என்ன புரியவேண்டுமோ அது நிச்சயம் புரிந்துவிடும்.

இந்தப் படத்துக்கு வந்த விமர்சனங்களக் காட்டிலும் விமர்சனங்களுக்கு வந்த பின்னூட்டங்களால்தான் பயங்கர சென்சேஷன் ! அதப்பத்தி கொஞ்சம் சொல்லலாம்ணு நெனைக்கிறேன். எல்லா விமர்சனங்களும் நேர்மையா எழுதப்பட்டிருக்கான்ன்னா இல்லைன்னுதான் சொல்லணும். சில பேர் படத்த மொக்கைனு லேபிள் குத்தியே தீருவேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு எழுதியிருந்தாங்க, இத வழிமொழிஞ்சு நெறய பின்னூட்டங்களும் ! யாரும் சொல்ற அளவுக்கு இந்தப்படம் மொக்கயோ மொண்ணயோ அல்ல. பரமக்குடியிலிருந்து வந்த ஒரு தமிழன் (தமிழர்களில் திராவிடத் தமிழன், ஆர்யத்தமிழன்னு ரெண்டு பிரிவு இருக்கறதா நான் நெனக்கல..! ) தமிழ்ப்படங்களுக்கான சந்தையை உலக அளவுல திறக்க முயற்சி பண்றப்போ நாம உதவி செய்யலனாலும் உபத்திரவம் செய்யக்கூடாது. கனடாவில் இந்தப்படத்த வால்ட் டிஸ்னி வெளியிட்டதா ஒரு செய்தி படிச்சேன், எத்தன இந்தியப் படங்கள் இதைப்போன்ற அயல் நாட்டு நிறுவனங்களால் வெளியிடப்பட்டிருக்கு? விரல் விட்டு எண்ணிடலாம். நண்பர்களே “சொல்லுதல் யார்க்கும் எளியவாம்” அப்படின்னு இனியாவது புரிஞ்சுக்கங்க.


Biological weapon- chasing, சப்பையான ஒரு வரிக்கதை, இதுக்கு இந்த பில்டப் அப்படிங்கற ரேஞ்சுல ஒரு fwd மெயில் வந்துச்சு, உங்கள்ள சில பேருக்கும் வந்திருக்கலாம். அந்த நண்பர்கிட்ட நான் கேட்கறது life is beautiful அப்படின்னு ஒரு படம்...செகண்ட் வேர்ல்ட் வார் டைம்ல ஒரு யூதக்குடும்பம் ஜெர்மன் சிறைக்கூடத்துல படற அவஸ்தைகள், ப்பூ இது ஒரு கதையா? அப்படின்னு சிம்பிளா மெயில் அனுப்புவீங்களா? சைக்கிள தொலச்சுட்டு வேலவெட்டி இல்லாம ஊரெல்லாம் தேடுறான்யா, bicycle thiefனு இத ஒரு படமா வேற எடுத்திருக்கானுங்கன்னு பேசுவீங்களா? ஏன் ஒரு தமிழன் உலக சந்தைக்கான ஒரு படத்தைக் கொடுத்ததுக்கு இப்படி கொலவெறி காட்றீங்க? (மேற்கூறிய இரண்டு படங்களையும் நான் தசாவதரத்தோடு ஒப்பீடு செய்யவில்லை,நான் கூற விழைவது அனைத்து திரைப்படங்களுக்கும் ‘one line story’ என்கிற ஒன்று உண்டு என்றுதான்)

ஒரு பதிவர் தன்னோட பதிவுல, ரங்கராஜ நம்பி ‘ஓம் நமோ நாராயணாய’ என்று கத்தும்போது Brave heart படத்துல Mel Gibson சுதந்திரம் அப்படின்னு கத்துறத ஞாபகப்படுத்துனதா எழுதிருக்காரு. அதனால இப்ப என்ன? கமல் அப்படி சொல்லக்கூடாதா? ஸ்காட்டிஷ் விடுதலை வீரனுக்கும் பிரிட்டிஷ் இராணுவத்துத்துக்கும் நடக்குற போராட்டத்துல கத்துனா மட்டுமில்ல, சைவ வைணவ போராட்டத்துல காட்டுனாலும் அது வீரம்தான், நண்பர்களே, அடக்குமுறை வெவ்வேற வடிவங்கள்ல இருக்கலாம் ஆனால் சுதந்திரம் எல்லாருக்கும் ஒன்னுதான். ஒத்ததிர்வுகள் கலையுலகத்துல எப்பவுமே இயற்கைதான், கமல் நடிப்பில் யாரையும் காப்பி அடிக்கவேண்டிய அவசியமில்லை.

வேறொரு பதிவோட பின்னூட்டத்தில பத்து ஆங்கில படங்களப் பார்த்து எடுக்கப்பட்ட படம் அப்படிங்கற கமண்ட் ரொம்ப வருத்தப்படவச்சது, ஆனால் கடைசி வரைக்கும் அந்த நபர், பத்து படங்களோட பேர சொல்லவேயில்லை, சார், அந்த பத்து படங்கள் என்னென்னனு சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோம். ஒரு வெகுசன படைப்பு பார்வைக்கு வரும்போது எதிர்மறை விமர்சனங்கள் வரத்தான் செய்யும்,வரணும். வந்தால்தான் சீர் தூக்கிப்பார்க்கும் தன்மையும் வளரும், எவ்வளோ குப்பையா படம் எடுத்தாலும் மக்கள் ஏத்துப்பாங்க அப்படிங்கற மோசமான நம்பிக்கையும் ஒழியும். ஆனா, கருத்து சொல்றவங்க யாரும் நானும் பேசுறேன் பேர்வழின்னு குருட்டுப் பூனை விட்டத்துல பாய்ஞ்ச மாதிரி பேசக்கூடாது. முடிஞ்சா ஆதாரங்கள எடுத்து வைங்க, நம்மளே கமல் சார்கிட்ட போய் உண்மையக் கேட்போம். என்னங்க, நான் சொல்றது சரிதான?

சமீபத்தில் ஒன்பது அல்லது பத்து வருடங்களுக்கு முன்னர் என நினைக்கிறேன் (இந்த வரி டோண்டு சார் பதில்கள் மாதிரி இல்லையே..?) த.மு.எ.ச கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த ஒரு எழுத்தாளர் சொன்னார். கதை எழுதுவதற்கு 24 அல்லது 28 (எண்ணிக்கை சரியாக நினைவிலில்லை) story knots மட்டுமே உள்ளன, நாம் எத்தகைய படைப்பைக் கொண்டுவந்தாலும் அது இதற்குட்பட்ட கலவையாகத்தான் இருக்க முடியும் என்றார். இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் நண்பர் கூறிய பத்து ஆங்கிலப்படங்கள் மட்டுமல்ல தசாவதரமும் இவற்றுக்குள் அடக்கம் என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டுமென்பதால்தான்.

கமல்கிட்ட இருந்து அன்பே சிவம், விருமாண்டி போன்ற படங்கள் மாதிரிதான் எதிர்பார்க்கிறதா நெறயப்பேரு கருத்து சொல்லிருந்தாங்க, நல்லது நானும் ஒத்துக்குறேன். ஆனால் அந்தப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியடையவில்லையே. அதுவும் தமிழ்நாட்டுலதான ரிலீஸ் ஆச்சு? கமல் சார் தொடர்ந்து கலைப்படமே கொடுத்துக்கிட்டு இருந்தா வடபழனில பொட்டிகடை வைச்சு உக்கார்ந்து ஸீன் பண்ண வேண்டியதுதான். கண்ணாடிப்பூக்கள், குட்டி, மல்லி திரைப்படங்கள் தரத்துல மேம்பட்டு இருந்ததா சொல்ற நாம அந்தப் படங்களுக்கு என்ன மரியாதை காட்டினோம்? பார்த்திபன் சார் “குடைக்குள் மழை”னு ஒரு படம் எடுத்தார். கிட்டத்தட்ட A beautiful mind மாதிரி, ஆனால் என்ன ஆச்சு? கலெக்சன் லெவெல்ல அந்தப் படம் பப்படம் ஆயிடுச்சு! தப்பு யார் மேல? அந்தப் படம் சரியில்லயா? இல்ல வழக்கமான சினிமாவுக்கு பழகுன நம்ம மூளை ஏத்துக்கலயா?

நேத்து விஜய் டிவி ல ஒளிபரப்பான மதன்ஸ் திரைப்பார்வைல K.S.ரவிக்குமார், யூகி சேது, மதன் மற்றும் பார்வையாளர்கள் கலந்துக்கிட்டாங்க, நெறயப்பேர் பாத்திருப்பீங்க. அதுல கவனிக்க வேண்டிய விசயம் ரவிக்குமார் சாரோட முகத்தைதான். ரொம்ப திருப்தியா, சிரிச்சுக்கிட்டே இருந்தார். இவ்ளோ பெரிய பட்ஜெட் படம் படுத்திருந்தா டைரக்டர் இப்படியா சிரிச்சுக்கிட்டு இருப்பாரு? படத்தோட ரிசல்ட் என்னங்கிறது அவர் முகத்துல தெரியுது. பேச்சின்போது யூகி சேது சொன்ன முக்கியமான பாய்ண்ட் - ‘ஆங்கிலம், இந்தி திரைப்படங்களுக்கான ஆடியன்சும், மார்க்கெட்டும் ரொம்ப பெருசு. ஆனா நாம ஆறு கோடி பேர மட்டுமே நம்பி படம் எடுக்கிறோம், ஹாலிவுட்ல எதாவது ஒரு உணர்ச்சிய மையப்படுத்தி எடுக்கப்படற படங்கள் ஒரே சுவை கொண்டது, ஆனால் தமிழ்நாட்டு ரசிகனுக்கு ஒரே படத்துல நெறய சுவைகள் தேவைப்படுது, இது தலைவாழை விருந்து, தமிழ்நாட்டுல வேர்களை வச்சுக்கிட்டு உலக மார்க்கெட்டுக்கு எடுக்கப்பட்ட படம்’ அப்படின்னு சொன்னார். கரெக்ட்தான!




இன்றைய தேதியில் டெக்னிக்கலான முன்னேற்றத்துக்கு இந்தியாவில் தற்போதைய சிறந்த படம் தசாவதரம்தான். இன்னும் பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வரக்கூடிய மாற்றங்களுக்கு இந்தப்படம் ஒரு விதை..! இப்படத்தோட வெற்றி பன்னாட்டு சினிமா கம்பெனிகளின் கவனத்தை தமிழ் படங்கள் மேல திருப்பும். தமிழ் சினிமா ஹாலிவுட் மாதிரி ஒரு கார்ப்பரேட் செக்டாராக மாறும். நிதி பெருத்த நிறுவனங்களின் வருகை புதிய முயற்சிகளுக்கான அடித்தளத்தை உண்டாக்குவது மட்டுமின்றி ஹாலிவுட் மாதிரி ஸ்கிரிப்ட் ரைட்டிங், ஸ்க்ரீன்ப்ளே மேக்கிங் போன்றவற்றை புதிய, தனிப்பட்ட துறைகளா மாற்றலாம். தொழில்நுட்பமும் படங்களின் பட்ஜெட்டும் வளரும் அதே நேரத்தில் நாம் நமது மண்ணையும், மக்களையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கிற தரமான படங்களை கொடுப்பதின் மூலமாக ஈரானிய திரைப்படங்களைப்போல் தமிழ்ப் படங்களையும் உலக சந்தையில் நிலைநிறுத்தலாம்.

இந்தப்படம் முடிந்தவுடன் கமலுக்காகவும் மற்றும் படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்காகவும் நான் கைதட்டினேன். நீங்களும் தட்டுங்கள், அது கமல் போன்ற சிறந்த கலைஞனின் உழைப்புக்காக மட்டுமல்ல, எந்தவொரு கலைஞனும் விருதுகளுக்கும் மேலாக எதிர்பார்ப்பது ரசிகர்களின் அங்கீகாரத்தைதான்..!



Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP