நிசப்தத்தில் கலத்தல்/ மழைக்கான காத்திருப்பு

>> Friday, July 30, 2010



*நிசப்தம் மேவிய
கடல்
கவிழ்ந்து மிதக்கும்
படகு


*தீராத வன்மத்தின்
இசை அளபெடைகளைத்
தொகுத்துக் கொண்டிருக்கிறேன்
எதனுள்ளும் அடங்காமல்
திமிறுகிறது
உன் காதல்


*என்னை
மிருகம் என்றழைக்கிறாய்
பேரன்பின்
பெயரால்
என்னைப் புசிக்கிறாய்.
உன் பெயெரென்ன சகி?


*மீண்டும் தித்திப்பாய்
இருக்கிறது
நுரைக்கும் மதுவும்
பொங்கும் இசையும்
பெருகும் காமமும்
ஒழுகும் குருதியும்
முத்தமிட்டுத் தீராத
உன் இதழ்களும்.


*வெடித்துவிழும்
காமத்தின்
விதையிலிருந்து
துளிர்க்கிறது
உனக்கான பிரத்தியேக
முத்தத்தின்
சுட்டுவிரல்.


*நிசப்தத்தின்
பேச்சொலியில்
எரிமலையின்
அமைதியெனத் தளும்பும்
கண்களில் இருந்து
பறக்கிறது
பெயர் தெரியாப் பறவை
நீ இருக்கும் திசை நோக்கி.


*மிதக்கும் தக்கையின்
ஏற்ற இறக்கத்தில்
துயில்கிறது
காலத்தின் நிசப்தம்^

^ ஏற்கனவே எழுதிய கவிதையிலிருந்து ஒரு வரி.



Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP