2002-2008 டைரிக் குறிப்புகள்

>> Friday, March 20, 2020

ஒர் வேனிற்கால மதிய வேளை...

இப்போதும் சிரித்துக்கொண்டிருக்கிறாயா?
எதிர்ப்படும் எல்லோருக்குமான புன்னகை இன்னும் மீதமிருக்கிறதா?
சடுதியில் மாறும் காட்சிகள் கொண்ட அறைக்கு வண்ணம் பூசியாயிற்றா?
பிடித்த நடிகை இன்னும் சிநேகாதானா?
சாப்பிடுவது அதே மேரி மெஸ்ஸில்தானே?
ரமணி சந்திரன் சிவசங்கரி படிக்கச் சொல்லி தோழிக்கு சிபாரிசு செய்கிறாயா?
கைகளை ஆட்டி அபிநயங்களோடு பேசுவதை நிறுத்தவில்லைதானே?
‘நெஞ்சமொருமுறை நீ என்றது’ பாடலை முணுமுணுக்கிறாயா?
டோனாபோலாவில் எடுத்த குரூப் ஃபோட்டோ சூட்கேசில் இருக்கிறதா?
.
.
.
இப்போது உயிரோடு இருக்கிறாயா?

*****************************
மின்சாரம் தடைப்பட்ட பின்னிரவில்...

புறக்கணிக்கப்பட்ட அன்பின் பொதிகளை
ஒரு குழந்தையென நீ சுமந்து திரிவதை
என்னால் தடுக்கமுடியவில்லை.
கைப்பையைத் திறக்கிறாய்...
விடியவே முடியாத இரவுகள்
வரிசைக்கிரமமாய் மடித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
ஒன்றை எடுத்து உதறுகிறாய்
வானிலிருந்து சில நட்சத்திரங்கள் உதிர்வதை
காப்பாற்ற முடியவில்லை.
வாழ்வின் கசப்பான பக்கங்களை நத்தையின்
வேகத்தில் வாசிக்கத்துவங்கி
பெருங்குன்றொன்றின் மீதேறுகிறேன்
சமவெளிகளின் மகத்துவம் தெரியாமல்
என்னைக் காப்பாற்ற வருபவன் கல்லாய் சமையட்டும்.

*****************************
பருவமழை தொடங்க சில தினங்களே இருக்கும் இன்று...

மிதமிஞ்சிய குற்றவுணர்வுடன்
இதை எழுதிக்கொண்டிருப்பதாய் கூறுவது
நான் கொலையுறுவதற்கு சரியான காரணமாய் இருக்கக்கூடும்.
எனக்கு வாய்த்த சபிக்கப்பட்ட
வாழ்வின் பங்காய்
உனக்கு அன்பைத் தராவிடினும்
காயங்களைத் தராமலிருந்திருக்கலாம்
ஏமாற்றங்கள் அற்ற
துரோகங்கள் அற்ற
பாசாங்குகள் அற்ற
வஞ்சனைகள் அற்ற பெருவெளியில்
அன்பால் நிரம்பிய மேகம் ஒன்றை
இழுத்துச் செல்கிறது சிற்றெறும்பு
கார்காலம் தொடங்குமுன்
புற்றை நிரப்பிவிடும் பேராசையோடு.



Read more...

ப்ரெட்ஆம்லெட்

>> Thursday, June 25, 2015




கடந்த ஒரு வாரமாகவே உடல் நலக்குறைவு.வெயில், அலைச்சல், சளி.காய்ச்சல்.மீண்டும்அலைச்சல்மீண்டும் நேற்றிலிருந்து காய்ச்சல்.அரிசி உணவு எதுவும் உட்கொள்ளவில்லை. பேரீச்சைச்சாறுகலந்தபால், கருப்புதேநீர், ப்ரெட், ரஸ்க், மாரிரொட்டி என்று உயிர் வாழ்ந்தேன். இனியும் தாங்காது என்றாகிவிட்டது.
இன்று மதிய உணவாக ப்ரெட்ஆம்லெட் என்கிற அந்தியந்த தோழனை செய்து சாப்பிட்ட திருப்தியோடு டைப்புகிறேன். கடைசியாக ப்ரெட்ஆம்லெட் சாப்பிட்டது எப்போது என்று யோசித்தேன். இந்நாள்முதல்வர்அவர்கள், நீதியரசர் குன்காவின் தீர்ப்பால் பதவி இழந்த அன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. எப்போதாவது வேலை செய்யும் மூளை அன்று முன்கூட்டியே வேலை செய்தது ‘சரக்கெல்லாம் வாங்கிச் சேர்த்தாய். அந்தோ! தோசை மாவு தீர்ந்துவிட்டால் என் செய்வாயடா செல்வமே, என் செய்வாய்?’ எனக்கேட்டது.
உடனடியாக இரண்டு பாக்கெட் ப்ரெட்டும், டஸன் முட்டைகளும் வாங்கி இல்லம் சேர்ந்தேன். அடுத்த ஐந்து வேளை உணவும் ப்ரெட்ஆம்லெட்தான் .ஐந்து வேளை இல்லை ஐந்து நாட்கள் கூட ப்ரெட்ஆம்லெட் சாப்பிட நான் தயார்.தொண்டி, மதுரை, சென்னை, இராமேஸ்வரம், கோவா, சிங்கப்பூர் என்று பரந்துபட்ட நிலப்பரப்பில் என்னைக் காத்த உணவு இது.
தொண்டியில் ஆராய்ச்சி மாணவனாய் இருக்கையில் அறையில் பிரதிமாதம் 15ஆம் தேதி தொடங்கும் தட்டுப்பாடு. பெட்ரோல், தேநீர், சிகரெட், அயர்ன்செய்தஉடைகள், ஃபெர்ப்யூம், சவரம், உணவுஎனஅனைத்தும்ரேஷன்தான்.காலை- இரவு இரண்டு துண்டு ப்ரெட் + ஒரு முட்டை சேர்த்த ப்ரெட்ஆம்லெட். வயிறு நிறையாது. நைனா டீக்கடை போய் அக்கவுண்டில் டீ குடித்து வருவோம். 25 தேதிக்கு மேல் நிலைமை இன்னும் மோசமாகும். புகைத்து முடித்த ஃபில்டர் சிகெரெட்டுகளின் ஃபில்டர்களை மட்டும் ஒரு தட்டில் பத்திரமாய் பாதுகாத்திருப்பார்கள். அன்று மாலை பொது நிதியில் இருந்து காசு திரட்டி ப்ளைன் சிகரெட் வாங்கப்படும். அணுஉலைக்குள் யுரேனியக் குச்சியை நுழைக்கும்லாவகத்தோடும், எச்சரிக்கையோடும் ஒவ்வொரு ப்ளைன் சிகெரெட்டுக்கும் ஃபில்டர் பொருத்தப்படும். அந்த ஃபில்டரும் நைந்து, புகைந்து, நெஞ்சு காறிய பின்னர் பீடி அமலுக்கு வரும். 1ஆம் தேதிபிறக்கும் – பிறகென்ன?! இட்லிதான், பூரிதான், வசந்தம் ஹோட்டல் சாப்பாடுதான், பீர்தான், ராஜிவ்காந்தி புரோட்டாக் கடை சால்னாதான், கலக்கிதான்!
நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து இருக்கும் அறைகளின் குறுக்குவெட்டுத்தோற்றம்தான் இது. நம்மில் பெரும்பான்மையானோர் கடந்து வந்ததும் கூட. ஆனால் சென்னை, கோவா போன்ற பெருநகரங்கள் வேறுமாதிரியான வரவேற்பையும், வாழ்வியல் நெருக்கடியையும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும். முதல் நாளே விரையில் உதை வாங்கிய வலிதான். வாங்கிக்கொண்டிருந்த இடைப்பட்ட சம்பளத்தில் கேண்டீன் இல்லாத நாட்களில் இரண்டு / ஒரு வேளை உணவு என ஓட்டிக் கொண்டிருந்த நேரம்.
முதுகுளத்தூரிலிருந்து சென்னையில் அபாட்ர்மெண்ட் கட்ட இடம் பார்க்க வந்த கல்லூரித் தோழன் என்னை சந்திக்க அவன் காதலியுடன் மதிய நேரத்தில் வந்தான். மாதக்கடைசியானதால் நான் படோபடமாய் எதுவும் செய்யவியலவில்லை. இரவுணவுக்கு வைத்திருந்ததையும் சேர்த்து இருவரையும் ப்ரெட்ஆம்லெட், தேநீர் என்று உபசரித்தேன். கிளம்பும்போது ‘அப்புறம்மாப்ள, டின்னருக்கு எங்ககூட சேர்ந்து சாப்பிடலாம் வாடா’ என்றான் .நான் நாசூக்காக மறுத்தேன். அவன் காதலி சிரித்துக் கொண்டே ‘அண்ணே, முட்டையும் பாலும் வைச்சிருக்காங்க. அதைதான் சாப்பிடுவாங்க. இல்லண்ணே?’ என்றாள். அவனும்’ வேண்னா பாரு மாப்ள, இப்படி முட்டையும் பாலும் தின்னே நீ ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் பாம்பா மாறிடப் போற’ என்றவாறு பலமாக சிரித்தான். நானும் சிரித்தேன். அது கல்லூரி நட்புக்கே உரிய யதார்த்தமான கமெண்ட் என்றாலும் காயப்பட்டேன். ஆயினும், பெரிதாய் சுயபச்சாதாபமெல்லாம் கொள்ளவில்லை. ஆனால் எப்போது முட்டையையும் பாலையும் ஒன்றாய் பார்க்க நேர்ந்தாலும் நான் இச்சாதாரி பாம்பாக மாறி ‘நீயா’ படத்தின் புகழ் பெற்ற ‘ஒரேஜீவன்ஒன்றேஉள்ளம்’ பாடலுக்கு டான்ஸ் ஆடுவது போன்ற கற்பனை துரத்துகிறது. கற்பனையிலும் “ஸோலாடான்ஸ்’தான் என்பது காவியசோகம்.
பள்ளிக்கரணையில் நான் வேலை பார்த்த நிறுவனத்திற்கு சற்று தள்ளி ஒரு மல்லு டீ & ஸ்நாக்ஸ் கடையும், டாஸ்மாக்கும் உண்டு. நான் மல்லுகடைக்கு நண்பர்களுடன் சென்றாலும் எதுவும்சாப்பிடுவதில்லை .இதே கட்டன் சாயாவும், ப்ரெட் ஆமலெட்டும்தான் ரூமிலும் தின்னப்போகிறேன் என்பதுதான் காரணம்.ஜேக்கப் என்பவர் அக்கடையை நடத்தினார். எப்போது அவர் என்னிடம் ஆர்டர் கேட்டாலும் சிறு புன்னகையுடன் மறுத்து அருகிலிருக்கும் நண்பனிடம் ஆர்டர் எடுக்கச் சொல்வேன். சான்ஸிலர் சிகரெட்மட்டுமே புகைக்கும் ஜேக்கப்பும் புன்னகையுடன் கடந்துவிடுவார்.
எனது முன்னால் காதலியுடன் கிட்டத்தட்ட அனைத்து உணர்வுகளும் பிளவுற்றிருந்த நேரம். ஒரு நாள் மாலை அவளைச் சந்திப்பதற்காக போரூருக்கு, வண்டிக்கு பெட்ரோல் போடக் கூடக் காசில்லாமல் பஸ்சில் சென்றேன். காதலின் கடைசி இரைஞ்சல். வேறென்ன சொல்ல?அன்றுதான் அங்கே டோமினோஸ் பிட்ஸா திறந்திருந்தார்கள். மணி இரவு 7ஐ நெருங்கியிருக்கும். வீட்டில்தான் இருந்தாள்.
‘உள்ளேவாங்க’
‘ஸாரி டு டிஸ்டர்ப் யு’ அவமானப்படும் அல்லது படப்போகும் தருணங்களில் மொழியை மாற்றிக் கொள்வதுதான் வசதி.
‘பரவாயில்ல வாங்க’ சற்று நேரம் மெளனம்.
பிறகு நானே ‘நீ இந்த ப்ரேக் அப் பத்தி கொஞ்சம் யோசிக்கலாம்ல’
‘நத்திங் டூயிங். சும்மா பேசிப்பேசி நீங்களும் டென்ஷனாகி என்னையும் டென்ஷன் பண்றீங்க’
இத்யாதி இத்யாதி பேச்சுகள்.தொடர் புறக்கணிப்புகள், அவமானங்கள்.அனைத்து கடவுளர்களாலும் கைவிடப்பட்டதாய் உணர்ந்தேன்.பின்னாளில்,
“நிசப்தம்மேவியகடல்
கவிழ்ந்தேமிதக்கும்படகு”
என்று இத்தருணத்தைப் பதிந்து வைத்தேன்.
இவ்வளவு உரையாடல்களுக்கு நடுவிலும் டொமினோஸ் பீட்ஸா பார்சல் ஒன்றைப் பிரித்தாள்.‘சே, சில்லி ஃப்ளேக்ஸ் எக்ஸ்ட்ரா சொன்னேன். இப்டியா அரைகுறையா பேக் பண்ணுவாங்க’ என்று சலித்துக் கொண்டாள். உணவின் மணம் வந்ததும் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்த என் வயிறு இயற்கையான தூண்டுதலால் அமிலம் கலந்த திரவத்தை தொண்டை வரைக்கும் அனுப்பி கசப்பால் நிறைத்தது. பாதியில் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ரிமோட் தேடி நியூஸ் சானல் ஒன்றிற்கு தாவியவள் என்னைப் பார்க்காமலேயே ‘சாப்ட்டாச்சா?’ என்றாள். அதுஒருபதில்தேவைப்படாதகேள்வி.
உடலெங்கும் கொதிக்க தொடங்கிய கசப்புடன் நான் அங்கிருந்து கிளம்பி என் கூட்டிற்கு வந்தேன். அருகில் இருந்த டாஸ்மாக் வாசலில் ஒரு கணம் தயங்கி நின்றேன். நிதிநிலையை உத்தேசித்து ரூமுக்கு நடக்கத் துவங்குகையில், எங்கள் வீட்டிற்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் பரணிஅவசரமாய் கடைக்குள் நுழையப்போனார். என்னைப் பார்த்துவிட்டு, ‘தம்பி, என்னஇங்க?’ என்றார். ‘இல்ல சும்மாதான். பார்ப்போம்’. பரணி அருகாமை வீட்டுக்காரர் மட்டுமல்ல அவரின் சொந்த ஊரும் என் ஊருக்குப் பக்கம்தான். ஆதலால் கடன் கேட்க கூச்சமாய் வேறு இருந்தது. விலகினாலும் அவர் விடுவதாயில்லை.‘அடச் சும்மாவாங்க. நான் இருக்கேன்ல’ என்றவாறு உள்ளே அழைத்துப் போனார்.
உள்ளே சென்றதும் சப்ளையரை அழைத்தார். பள்ளியில் மனப்பாடப் பகுதி ஒப்புவிப்பது போல ’ஓல்ட் மாங்க் கோட்டர், ஒரு கப்பு, ஒரு கோக்கு, ஒரு வாட்டர் பாக்கெட்டு, அவிச்ச முட்டை ஒன்னு மொளகு போட்டு’ சப்ளையர் இளைஞன் என்னைப் பார்த்தான். நான் தர்மசங்கடமாய் அவரைப் பார்த்தேன்.‘அட, சாப்பிடுங்கன்னு சொல்லி நான்ல கையைப்பிடிச்சு இழுத்தாந்தேன். சப்ளையர் தம்பி இந்தா ஐநூறு ரூபா.மேக்கோண்டு சில்லறை எதும் இங்க வரவேணாம். அவரு கேக்குற ஐட்டம்லாம் டாண் டாண்ணு வந்துரணும்’ என்றார் .நான் மேஜிக் மொமென்ட்ஸ் வோட்கா க்வார்ட்டர் சொல்லிவிட்டு இலக்கின்றி வெறித்தேன். அவரும் எதுவும் கேட்கவில்லை. எந்த நியமங்களும் இன்றி குடிக்கத் தொடங்கினோம். சற்று நேரத்தில் சிரித்தபடியே ‘கோட்டர்தான் என் கோட்டா. கணக்கெல்லாம் கொடுத்தாச்சு, நீங்க வேணும்ன்றத வாங்கி நல்லா சாப்ட்டு வாங்கதம்பி’ என்று கிளம்பியவர் சட்டென்று திரும்பி ‘தப்பாஎடுத்துக்காதீங்க. தனியா குடிக்கிறது ரொம்ப ஆபத்தான காரியம். பொதசேறு.பார்த்துக்குங்க’ சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
நான் அடுத்த க்வார்ட்டர் சொல்லிவிட்டு காறித் துப்பியவாறே இருந்தேன். திரண்டிருக்கும் மொத்தக் கசப்பையும் வாந்தி எடுக்க முயலும் கற்பனை. குடித்து முடித்து சற்றே தள்ளாட்டத்துடன் எழுந்தவன் ஜேக்கப் கடைக்குதான் சென்றேன். கடை எடுத்து வைக்கும் நேரத்தில் அவர் என்னை எதிர்பார்த்திருக்கவில்லை என்பது தெரிந்தது.
சான்ஸிலர் புகையும் வாயுடனும், நாசியுடனும் ஒரு விநாடி என்னை தீர்க்கமாகப் பார்த்தார். ஊடுறுவும் பார்வை. நான் தலையை திருப்பிக் கொண்டேன். என்ன நினைத்தாரோ, அவரே எதிரில் இருக்கும் மெஸ்ஸுக்குச் சென்று ஒரு தட்டு நிறைய சோறும் மீன் குழம்பும் வாங்கிக் கொண்டு வந்து வைத்தார். பின் ‘ஒருடபுள்ஆம்லட்.ஸார்டேபிளுக்கு’ என உள்நோக்கி குரல் கொடுத்தார். அதற்கு பிறகு வந்த நாட்களில் ஜேக்கப் கடையில் கட்டன் சாயா, ப்ரெட் ஆம்லேட் சாப்பிட்டிருக்கிறேன். அவர் பையனை பைக்கில் ஏற்றிக் கொண்டு அலைந்திருக்கிறேன். கல்லா கட்டி, கடை பாத்திரங்களைக் கழுவும் வரை அரட்டை அடித்திருக்கிறேன். அவர் வழக்கம் போல சிரித்துக் கொண்டுதானிருந்தார். ஆனாலும் அந்தப் பின்னிரவில் நான் கண்ட - நிகோடின் மண்டலத்துக்கு நடுவிலிருந்து கருணையின் புன்னகையை மட்டுமே சூட்டியிருந்த ஜேக்கப்பின் கருப்பு உதடுகளை சித்திரமாகவே என் நினைவில் மீட்டெடுக்க முடிகிறது.



Read more...

அஸ்டக் போராளியுடனான சந்திப்பு

>> Tuesday, March 26, 2013



A: உங்க பேரே # டேக் தானா?
#: இது ஒரு சமூகவிணையரசியலியக்கப்பொருள்முதல்வாதமதசாதியெதிர்ப்புவிழிப்புணர்வுப் புரட்சிப் போராளிகளோட அடையாளம். எங்களால #சமூக மாற்றங்களை #லேப்டாப் #இணையம் மூலமா கொண்டு வந்துட முடியும்னு தீவிரமா நம்புறோம்
A: (தலையை சிலுப்பி தெளிவாகிக் கொள்கிறார்) பேசுறப்போ கூட # போட்டுதான் பேசுவீங்களா?
#:ஆமா. அது எங்க #குறியீடு. அதை நாங்க #நிறுவிதான் ஆகணும்
A: என்ன மாதிரியான போராட்டங்களை நீங்க முன்னெடுக்குறீங்க?
#: பலவகையான போராட்டங்கள், புரட்சிக் களங்கள். #தெருமுக்கு டீக்கடையில் இருந்து, #அமெரிக்க வெள்ளை மாளிகை வரைக்கும் நாங்க மாற்றத்தைக் கொண்டுவந்துருவோம்.
A: சிரிக்காமப் பேசுறீங்களே? சரி, குழுவா இயங்குறீங்களா?
#: ஆமா. #ஃபேஸ் புக், #ட்விட்டர், #ப்ளாக்னு நாங்க இறங்கி அடிக்காத களமே இல்லை. எங்களை அப்போதான் Hash Tag போராளிகள்னு சொன்னாங்க. இந்த Hash Tag – பிற்காலத்தில Aztec னு மருவிடுச்சு. இப்போ எங்களை அஸ்டக் பழங்குடியோட வழித்தோன்றல்கள்னு அடையாளப் படுத்திக்குறோம்.
A: லேசா கண்ணைக் கட்டுதே. பொதுமக்கள்கிட்ட நீங்க போய் சேர்ந்துட்டிங்களா?
#:அப்படி எங்களை சிம்பிளா ஒதுக்கிட முடியாது. #பின்நவீன எழுத்தாளர்களில் இருந்து முன்கற்கால படைப்பாளிகள், தொழில் நிறுவனங்கள் / அதிபர்கள், சமகால அரசியல்வாதிகள்னு – அஸ்டக் போராளிகளைப் பார்த்து நடுங்காத வர்க்கமே இல்லை. #பாஸ்டன் டீ பார்ட்டி, #பிரெஞ்சுப் புரட்சி, #குஞ்சு புரட்சி(பறவைக் காய்ச்சலின்போது கேரளாவுக்கு எதிராக நாமக்கல் ப்ரெளசிங் சென்டரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மூத்த அஸ்டக் போராளியால் முன்னெடுக்கப்பட்டது), மல்லிகை, அந்திமந்தாரைன்னு பல நூற்றாண்டுகளா நாங்க #வரலாற்றில் பதிவாகிருக்கோம்.
A: தமிழ்நாட்டுல நீங்க என்ன செய்றீங்க?
#: எல்லாமே செய்றோம். #ஈழம் தொடங்கி திருவாரூர் தீயசக்தி கருணா, மாண்புமிகு அம்மா, வால்மார்ட், சாதிமறுப்பு / ஏற்பு, கூடங்குளம், காவேரின்னு இது முடிவில்லாத # போர்க்களம். ஆஃபிஸ்ல இருந்தோ, ஆண்ட்ராய்டு ஃபோன்ல இருந்தோ எங்க அஸ்டக் போராளிகள் பொதுவெளில கருத்தை # போட்டு சொல்லிட்டே இருப்பாங்க
A: உங்களால எதாவது மாற்றங்கள் ஏற்பட்ருக்கா?
#: களப்பணில #ரிசல்ட் பத்தி எல்லாம் யோசிக்க முடியாது. தொடர்ந்து இயங்கி இந்த #தமிழ் சமூகத்தை மானமும், அறிவும் உள்ளதா மாத்திடுவோம்
A: அய்யா பெரியாரோட கருத்தை எல்லாம் பேசறீங்களே? அரசியல் ஈடுபாடு உண்டா?
#:நாம வாங்குற ஒவ்வொரு லைக்கிலும், ஒவ்வொரு ஷேரிலும் அரசியல் இருக்குன்னு அஸ்டக் போராளிகள் நம்புறாங்க
A: (ஜெர்க் ஆகி… கிழிஞ்சது போ! லைக், ஷேரா…) சரிங்க, கிளம்புறேன்.
#:இந்த #போஸ்டை எப்போ போடுவீங்கன்னு சொல்லுங்க, அனைத்துலக அஸ்டக் போராளிகளோட மைய இணையப் பக்கத்தில ஷேர் செய்ய சொல்லணும்.
A - ஓடித் தப்பிப்பதா, இல்லை யாரையும் உதவிக்குக் கூப்பிடலாமா என்கிற யோசனையோடு வாசலைப் பார்க்கிறார்.
#: நம்ம போராளிகளை அனுப்பி லைக்கும் போட சொல்றேன்
A - மயங்கிச் சரிகிறார்



Read more...

K - A - D - A - L, கடலா? காதலா?

>> Wednesday, February 13, 2013




‘அப்புறம், புலிய அங்க வச்சுப் பார்த்தேன்’
‘எங்கடே?’
‘கடல்’ கொட்டாயிலதாம்லே’
‘ஆமடே, பொளுதே போவல, சவமாயிட்டு திண்ணைல சாஞ்சுருக்கதுக்கு கொட்டாய்க்குப் போறது பெட்டராயிட்டு கேட்டியா?’
‘படம் எப்படி மக்கா?’
‘லே, சூப்பருல்லா! எங்க ஆச்சிய கொட்டாய்ல தரிசுச்சேம்ல! வேதக்கோயிலுல்ல என்னலா சொல்லுதான்? நீ விரியன் குட்டியா இல்ல, விசுவாசியா? அதையேதான் திருப்பி வாசிக்கானுவ. மன்னிக்குறதுக்கு மனசு மட்டும் போதாதுலே, ஒரு வீரம் வேணும் கேட்டியா?’
‘சண்டியர்ல கமலகாசன் சொல்றமாதிரியாடே?’
‘லே, இது வேறவே, படத்தப் பாரு, அப்புறம் சொல்லு, ஒனக்குப் புடிக்காட்டி காந்திமதிகிட்ட போய் தலய கொடுக்கேன்’
‘ஓந்தலய வச்சு நாங்க என்ன மயிரா புடுங்க? விசயத்துக்கு வால்லே. அந்த ஹீரோயினுப் பொண்ணு ‘தளுக் தளுக்’னு தளும்புறாளே, ஆஃப்பாயில் மஞ்சக்கரு கணக்கா!’
‘யேய், செத்த மூதி! என்னிக்காச்சும் ஆர்யாசுல பஃபே சாப்பிட்ருக்கியாலே?’
‘இல்லியே மக்கா’
‘ம்க்கும், வாயப் புடுங்காமா சொல்றதக் கேளுலே, ஒனக்கு ஐஸ்க்ரீம் புடிக்குந்தான?
‘என்னடே. அனந்தசயனம் ஸார்வாள்ட்டருந்து ரெண்டு பேரும் ஒன்னா படிக்கோம், பொறங்கைல வழிஞ்சாலும் நக்கித் திம்பேன்னு தெரியாதா ஒனக்கு?’
‘தாயளி, நீ நக்கலைனா நான் நக்கப் போறேன், அது இல்லடே விசயம். ஒரு கரண்டி வக்கிற கப்புல, ரெண்டு கரண்டி வச்சா திம்பியா மாட்டியாம்லே?’
‘நல்லா வளிச்சு திம்பேன்’
‘அதாம்லே தொளசி, ராதாக்கா மகளாக்கும்’
‘ஓ, இப்போ வெளங்கிட்டு மக்கா! அது சரி, பாட்டையா(Bharathi Mani) நடிச்சுருக்காராமே?’
‘ஆமாம்லே, அவரு சும்மா வந்து போனாலே கவருமெண்டு கொண்டு வந்து அவார்டா கொட்டுவாம்லே! இதுல எண்ணி பத்து வார்த்தை வேற பேசுதாரு, எளுதி வச்சுக்கோ, வார வருசத்துல அறுவடையே இந்தப் படத்துக்குதாம்லே!’
‘அப்போ கார்த்தி மவன்?’
‘லே, கோட்டியாம்ல புடிச்சுருக்கு ஒனக்கு? கார்த்திக்கு இப்பதாம்லே கல்யாணமாயி அவுரு அலெக்சு மாரி பொட்டி தொளைக்கிற படமா கொடுக்காரு..?!’
‘அவனில்லலே, எப்பவுமே பால் கட்டுன மாரி நெஞ்ச விம்மிக்கிட்டே வருவாருல்லா நடிகரு முத்துராமன், அவுரு மவன் கார்த்தி, கார்த்தி மவன்..’
‘அவனச் சொல்லுதியா! கெளதமு! ஹீரோவாக்கும். ஆளு வாட்டசாட்டமாய் இருக்கான். கொஞ்சம் நடிக்கவும் செய்யுதான், ஒரு மாரி கொள்ளாம் கேட்டியா’
‘அப்ப, கொட்டாய்க்குப் போய் இந்தப் படத்த பாக்கலாந்தானே?’
‘நல்லாடே, போய்ப் பாரு. ஆனா ஒரு விசயம் மக்கா! தாந்தேன்னு ஒருத்தனோட சிறுத்தய வாசல்ல கட்டி வச்சிருப்பாம்லே, அதுல ஏறி ஒக்காந்து படம் பாக்கப் போனே, தாயளி நீ தீந்தேம்ல. ஒளுங்கா கொட்டாய்ல போட்ருக்க சேர்ல ஒக்காந்து பாரு’



Read more...

நவீன எழுத்தாளர் மசாலாப் படம் பார்க்கிறார்

>> Friday, January 18, 2013


இச்சூழல் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடியதுதான்.
எப்படியும் வருடமொருமுறை வாய்த்து விடுகிறது
தனது ஆகப்பழைய விமர்சனத்திற்கு
புதிய விவாதங்களை எழுப்பிய
இயக்குனரின் புத்தம்புதிய படம்.
வழக்கமான இருக்கையை விடுத்து சற்று மாறி அமர்ந்தாலும்
படம் பற்றிய கோணம் மாறிவிடும் ஆபத்திருப்பதால்
தமிழ்ச்சூழலின் இயங்குவெளியை சபித்தவாறே
இருளிலும் கவனித்து அமர்கிறார்.
திரையில் காட்சிகள் நகர்கின்றன
படம் லண்டனில் எடுக்கப்பட்டிருந்தாலும்
காட்சிகள் பார்சன் காம்ப்ளெக்சிலேயே எடுக்கப்பட்டிருப்பது
பத்து நிமிடங்களில் தெரிந்து
சத்தமாகவே விசிலடிக்கிறார்
ஒரு மசாலாப் படத்திற்கு வரநேர்ந்த துக்கவிசாரத்துடன்
காட்டமான மொழியில் குறிப்பேட்டில் பென்சிலை நகர்த்துகிறார்
அவ்வப்போது ஃபெலினியையும், கோடார்ட்டையும்
மழுங்கிய பென்சிலால் கோடி காட்டுகிறார்
அராமிக் மொழியில் வெளிவராத படமொன்றை
மசாலா இயக்குனருக்கு பரிந்துரைக்கவும் தவறவில்லை
சிறுநீர் இடைவேளைக்கு சற்று முன்னர்
முழு விமர்சனத்தையும் தயாரித்துவிட்டு
எதிர் இருக்கையில் கால்வைத்து
கிங்ஸ் பிடித்தவாறே
திரைக்குள் ஆழ்கிறார்.
அவ்வப்போது செல்பேசி
இருள் மூலைகளை வெறித்து
மீதி நேரம் கடத்தி வெளிவருகையில்
தனது மகனுக்கும் மகளுக்குமாக
மாலைக் காட்சிக்கான டிக்கட்களை
மறக்காமல் வாங்கிக் கொள்கிறார்.



Read more...

விட்டு விடுதலையாகி...

>> Tuesday, August 14, 2012


இன்று அலுவலகத்தில் எனது கடைசி தினம். ஏற்கனவே நான்கு ‘last day in office’ பார்த்தாயிற்று என்றாலும், அயல் நாட்டில் - சிங்கப்பூரில் இதுவே நான் பார்க்கிற/த்த முதல் வேலை. எல்லாவற்றிலிருந்தும் தப்பி ஓடிக் கொண்டிருந்தபோது அல்லது அவ்வாறான ஓர் நினைவைக் கொண்டிருந்தபோது - இடப்பெயர்வு மட்டுமே என்னை ஆசுவாசப்படுத்தும் என்று நான் உட்பட அனைவரும் நம்பியபோது கிடைத்த வேலை. ஊரில் இருந்து கிளம்புவதற்கு உண்மையில் ‘குறைந்தபட்ச’ துறவறத்துக்கான பாவனைகள் தேவைப்பட்டன. ‘நினைவுகளை வேட்டையாடித் திரியும் விலங்கு’ என்பன போன்ற பிரகடனங்கள், ஆழ்ந்து நோக்குகையில் மனச்சிதைவின் ஆரம்ப அறிகுறியாய் இருக்கக்கூடும். வெகுவான சுவாரசியங்கள் ஏதுமின்றியே இவ்வேலையை ஏற்றுக்கொண்டேன். பணமும், இடமாறுதலும் ஓரளவிற்கு இளைப்பாற உதவின. புதிதாய்க் கிடைத்த நண்பர்களும், அவ்வப்போதான போதையும், பதினைந்து அடி தொலைவுக்குள் அனைத்தும் காணக் கிடைக்கும் இத்தீவின் தெருக்களும் உள்ளிருக்கும் சாத்தானை எழும்பவொட்டாமல் பார்த்துக் கொண்டனர். ஒரு நாளின் முக்கால்வாசி ஆபிஸிலேயே கழிந்தது. சற்றும் சம்பந்தமில்லாத வேலை என்பதால் மிகுந்த பிரயாசையோடுதான் எதையும் அணுக வேண்டியிருந்தது. முதல் மூன்று மாத காலத்தில் உச்சகட்ட நெருக்கடிகளை எதிர்கொண்டேன். எனது பலவீனமான பக்கங்கள் எனக்கே வெளிப்படுத்தப்பட்டன. நிறைய கற்றுக் கொள்வதற்கான, கற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்புகள் தாமாகவே வந்தன.! ஒரு சிலருடன் வழக்கம்போல நேரடியாகவே மோதி (!) ‘நல்லவன்’ மாதிரியான பிம்பங்களிலிருந்து வெகுகவனமாக விலகிக்கொண்டேன். திருவல்லிக்கேணி மேன்ஷன்களை சிதிலமாய் நினைவுக்குக் கொண்டு வரும் டார்மட்ரி அறையிலிருந்து, நான்கு சுவர்கள் கொண்ட வீடு போன்ற உறைவிடத்துக்கும், அதன்பிறகு இப்போது இருக்கும் Lakeside - உல்லாசபுரிக்கும் எனது வசிப்பிடங்களை மாற்றிக்கொண்டேன். இப்போது வரைக்கும் எனது தனிப்பட்ட வாழ்வியல் நெருக்கடிகள் எதுவும் தீர்ந்துவிடவில்லை எனினும், இயல்பை ஓரளவிற்கேனும் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறேன். உலகின் அழகிய நாடுகளில் ஒன்றாக இருப்பினும் எல்லாப் பெருநகரங்களைப் போலவே இத்தீவின் பிரஜைகள் மாத்திரமின்றி குடியேறிகளும் வாழ்வது இயந்திரகதி வாழ்க்கைதான். இத்தீவில் இருந்துகொண்டு ‘வேண்டி நிற்பது நதிக்கரை நாகரீகம்’ என்று சொன்னால் அவனை விட உலகில் பேராசைக்காரன் யாருமில்லை. விதிக்கப்பட்ட நகர நாகரீகத்தை ஏற்றுக்கொண்டு இன்னும் சில வருடங்களுக்கு இந்நாட்டிலேயே இருக்கலாம் என முடிவெடுத்தாயிற்று. இந்த விநாடி வரை அடுத்த வேலை கிடைக்கவில்லை எனினும்... கையில் இருக்கும் சொற்ப நாட்களில் வேலை தேடியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம். கடந்த காலங்களில் என் வீழ்ச்சியை என் கண்களாலேயே கண்ட பிறகு இப்போதெல்லாம் பெரிதாய் திட்டமிடுவதில்லை. அந்நேர மனநிலைக்கு ஏற்புடைய எதையும் செய்யத் தயாராகவே இருக்கிறேன். நம்புங்கள்! கை விடப்படீர்! விதிக்கப்பட்ட வாழ்க்கைக்கு பழக்கப்படுத்திக்கொண்ட விலங்கு எல்லா நேரங்களிலும் ஆதி நினைவுகளிலிருந்து விலகி இருப்பது சாத்தியமா? வரும் 20ஆம் தேதி தமிழ்நாடு பயணம். நண்பர்கள் அனைவரையும் சந்திக்கும் ஆவலோடு...



Read more...

மாறிலி

>> Saturday, February 25, 2012



நிற்கும் ரயில்வண்டிக்குள்
பறந்து திரிகிறது சிட்டுக்குருவி
ரயில் நகர்கிறது
இப்போது
முழு ரயிலுக்கும்
ஒரே சிட்டுக்குருவி



Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP