நிறப்பிரிகை

>> Tuesday, August 28, 2007


பனி படர்ந்த இக்காலைவேளையில்
ஊருக்கு வெளியே
நெடுஞ்சாலையில் நடப்பது
இதமாய் இருக்கிறது.
ஆத்ம சிநேகிதனைப் போல்
கூட வரும் காற்று
சாலையில் இருமருங்கிலுமுள்ள
கொன்றை மரங்களை அசைக்கையில்
இருந்த ஒன்றிரண்டு பூக்களும் உதிர்கின்றன.
ஒரு பூவைக் கையிலெடுக்கையில்
அது பூவாய் இல்லை
நிறமாய் இருக்கிறது.
மஞ்சள் காவி வெளிர் மஞ்சள்
நிறமற்றுப் போனபோது வெண்மை.
கடைசி முத்தத்தின் போது உதிர்ந்த மல்லி
என் ஆய்வுக்குறிப்பேட்டினுள்
காவியை எட்டியிருக்கிறது
இருத்தலின் நிறம் கருமை
பிரிவின் நிறம் காவி.



எனக்கு தெரிந்த வானத்தின் கதை…

>> Saturday, August 25, 2007

பறவைகளை தொலைத்துவிட்ட வானம்
ஒன்று என் அறையில் உள்ளது.
காலநிலை மாற்றங்களுக்கு இச்சிறிய அறை
உட்பட்டது இல்லையெனினும்
பகலும், இரவும் வரும்.
அவ்வப்போது மழையும் புயலும் கூட உண்டு.
இடியும் மின்னலும் வானத்திற்கு பிடிப்பதில்லை
இரைச்சலற்ற மழை தன்னை
மோட்சத்திற்கு இட்டுச் செல்வதாய் வானம் திடமாய் நம்பியது
இருள்வேளைகளில் வரும் வெளவால்களை
கண்டால்தான் வானத்திற்கு பயம்.
என் காதலியிடம் எங்கள் திருமணத்திற்கு
இரைச்சலற்ற மழையை பரிசளிப்பதாய் சத்தியம் செய்திருக்கிறது.
பகல் முழுதும் தொலைந்த பறவைகளுக்காக காத்திருந்து
மாலையில் சிவந்த கண்களுடன்
வீடு திரும்பும் வானத்தை எதிர்கொள்வது கடினம்.
ஒட்டடையும் பல்லியின் எச்சமும் படிந்த வானம்
வெவ்வேறு சிறகுகளை அடையாளமாய் வைத்துக் கொண்டு
இழந்த பறவைகளை தேடிக் கொண்டிருக்கிறது.
ஒருபோதும் புதிய பறவைகளை அனுமதித்ததில்லை.



மனிதனை நம்பிய பறவை…

எனக்கு அந்த ஊர் புதியது.
அங்கே பறவைகளை வேட்டையாடும் பழக்கம் இருக்கிறது
எனக்கொதுக்கப்பட்ட அறையின் சன்னலோரம்
மரக்கிளையில் ஒரு பறவை அமர்ந்திருந்தது
தப்பிப்பிழைத்த பறவையாய் இருக்கலாம்.
மெல்ல பேச்சு கொடுத்தேன்
தப்பிக்கையில் காதலியைப் பிரிந்த ஆண் பறவை அது
குண்டடியில் பிய்ந்த இறக்கை முளைப்பதற்காய் காத்திருக்கிறது
பிறகு காதலியை தேடவுள்ளது
கிடைக்கவில்லையேல் தற்கொலை புரியவுள்ளது.
உங்கள் காதலுக்கு வந்தனம்
இரவு உணவிற்குப் பின் சந்திக்கிறேன்,விடை பெற்றேன்.
யாரிடமும் தன்னைப் பற்றி பேசாமலிருக்குமாறு கேட்டுக்கொண்டது
சரியென்று தலையசைத்தேன்.
விருந்துண்டு திரும்பி வந்து பார்த்தபோது
வெறுமை பறவையிருந்த இடத்தை நிரப்பியிருந்தது…
என்னவாகியிருக்கும்?
இறக்கை முளைத்து பறந்திருக்குமோ
காதலி வந்து கூட்டிச் சென்றிருப்பாளோ
போகுமுன் எனக்கான நன்றியை
காற்றில் எழுதி கரைத்திருக்குமோ?
இல்லையேல்,
வேதனை தாங்காது தற்கொலை புரிந்திருக்கலாம்
மதுவிருந்தில் நான் அதைப் பற்றி
உளறியதைக் கேட்டிருக்கலாம்.
துரோகி என தன் இறுதிகணத்தில் என்னை சபித்திருக்கலாம்.
எதுவாயினும் சரி…
இனி இவ்வூருக்கு வரக்கூடாது என முடிவு செய்தேன்.



படைப்பின் பெருவெளி

>> Tuesday, August 7, 2007

அன்று அவளுக்கு நல்ல நாள்…
அதிகம் சிரமப்படவில்லை அவள்,
கடவுளை சிருஷ்டிக்க ஒரு துளி அமிர்தம் போதுமானதாயிருந்தது.
தொப்பூழ்க்கொடியறுத்து சுத்தப்படுத்த தேவைப்பட்டது
ஒரு குவளை கண்ணீர் மட்டுமே.
அவள் சிருஷ்டியின் தகிப்பில்
வெளியில் மூர்ச்சையாகி
சிதைந்து கொண்டிருந்தது காலம்…
உள்ளிருந்து பெருவெடிப்பின் ஓசை
பிரசவித்தவள் கல்லாய் கிடந்தாள்…
கடவுள் பேசத்தொடங்கியிருந்தார் –
“ஆதியும் அந்தமும் அற்றவனாகிய
‘நான்’’’ என.
எல்லாம் ஒன்றாகி, ஒன்றும் இல்லையென்றாகும்
ரசவாதம் நிகழ்ந்து கொண்டிருக்க
வெறித்துப் பார்த்தவாறு கிடந்தது காலத்தின் சடலம்.



About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP