மழை – சில நினைவுகள்

>> Sunday, October 7, 2007


நம்மிருவருக்கும் பொதுவான
மரத்தடி இருக்கை அது
அன்று பெய்த மழை இன்றும் என் அறைக்குள்
மண்வாசனையை நிரப்புகிறது
மரத்தில் பட்ட மழை சடசடத்தபோது
நம்மிருவரின் சந்திப்பிற்காய்
கைதட்டுவதாய் புதுக்கவிதை கூறி சிரித்தாய்.
ஏதோவொரு ஆசிர்வதிக்கப்பட்ட கணத்திற்கு
அப்போது நாம் தயாரானதாய் ஞாபகம்
திடீரென என் பார்வை விலக்கி பிரிந்து
மழையில் நடந்து மறைந்தாய்.
இறுதி வரை வாய்க்கவில்லை
அப்படியொரு மழைக்கணம்
பிறிதொரு நாள்
கோடைமழையில் தனியே நனைந்தேன்
இப்போதும் நாம் சந்திக்கையில்
தவறாமல் அரங்கேறுகிறது
போலி திரைச்சீலைகளுக்குப் பின்னே
ஓர் மழை நாடகம்.



கடற்கன்னி குறித்த கவிதை

ஒரு யுகம் வேண்டும் உன்னைப் பின்தொடர…
இரவில் அலைகளின் மடியில் நீ விளையாடுவதை
கலங்கரை விளக்கின் வெளிச்சத்தில் கண்டபோது
அப்படித்தான் தோன்றியது எனக்கு…
எவரையும் எளிதில் வீழ்த்தும் கண்கள்
பாறையின் பின்னே நீ மறைகையில்
அலைகளில் தெரிந்தது
ஒரு மந்தகாசப் புன்னகையுடன்.
மேற்கே தீவுகளில் இருந்து வரும் நாவாய் மாலுமிகள்
இரகசியமாய் கிசுகிசுக்கின்றனர்
உன்னோடு சல்லாபிக்க ஆசைப்பட்ட ஒரு மாலுமி
மறுநாள் பிணமாய் மிதந்தானாம்.
கொற்கை துறைமுகத்தின் மதுவிடுதிகளில்
கிழவர்கள் உளறிக்கொண்டுள்ளனர்
உன்னைப்பற்றிய ஏதாவதொரு கதையை.
குறிப்பாய் கூந்தல் புரளும்
உன் மார்பின் பேரழகு குறித்த கதை.
ஆளற்ற தனித்தீவில் ஒதுங்கியிருக்கும் நான்
அது குறித்து பேசலாகாது, ஆனால்
என்னிடம் ஒரு பெருவலை உண்டு
நிச்சயமாய் ஒருநாள் வருவேன்
ஆமையின் முதுகிலேறி கடலின் அடியாழத்திற்கு
உன் தங்கநகரைத் தேடி...



சில எதிர்வினைகள்

>> Saturday, October 6, 2007


நீ தனியே செல்
நீ தவிர்க்கப்பட வேண்டியவள்
இது நீ வெளியேற வேண்டிய தருணம்.
வண்ணத்துபூச்சிகளின் பிரதிநிதியாய்
இனியும் உன்னை காட்டிக் கொள்ளவியலாது.
நானும் விடை பெறுகிறேன்,
அழிந்த நாகரிகத்தில் வாழும் உன் தலைநகரில்
என்னால் செய்யப்பட வேண்டிய
கடமைகள் சில மீதமிருக்கின்றன.
இந்நகரில் மழை நாளின் நினைவை புகைப்படமாக்குவது
எதிர் வீட்டுக் குழந்தைக்கு “அ”வை இடமிருந்து
வலமாக கற்றுக்கொடுப்பது
நான் சந்தித்த முதல் துரோகிக்கு மன்னிப்பு
ஒரு நல்ல கவிதைக்கான கடைசி முயற்சி
மற்றும் சில காதல்கள், இறுதியாய் ஒரு கொலை.
பிறகு நான் விடைபெறுவேன் பால்யத்திற்கு
அதுவரை இந்நகரம் பத்திரமாய் இயங்கட்டும்
கடல் கொள்ளாமல்.



About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP