பறவையைக் கண்டுணர்தல்

>> Thursday, January 22, 2009


அலைவுகளுக்குப் பின்னால்
தணிவு கொண்ட நதிபோல் இருக்கிறேன்
சிறுமி எறிந்த கூழாங்கல்லென
விழுந்து தளும்புகிறாய் என்னுள்
வட்டவட்டமாய்
கிளர்ந்து பரவுகின்றன
காதலின் பெருங்கரங்கள்.
மரத்திலிருந்து மீன் பார்க்கிறது
ஆழத்தில் நீந்தும் மீன்கொத்தியை.
மிதக்கும் தக்கையின் ஏற்ற இறக்கத்தில்
துயில்கிறது காலத்தின் நிசப்தம்.
உற்றுநோக்கும் கடவுளின் கண்களை விலக்கி
நிறுத்திவிடவேண்டும்
அதிர்வுகளோடு பரவும் பேரலைகளை,
முடிந்தால்
பெருங்கடல்களில் கலக்கும் நதிகளை.

* அய்யனாரின் அடர்நீலத்தீற்றல் கொண்ட பறவைக்கு



தரிசனம்

>> Wednesday, January 21, 2009


அன்றாடம் வாய்க்கிறது
புலியைக் காணும் தருணங்கள்
தீராத வன்மத்தோடு சிரிக்கும் காடுகள்
எனக்கும் புலிக்கும் பரிச்சயமானவை
சமயங்களில் புலிமேல் நான்
சில நேரங்களில் என்மேல் புலி
வால் பிடித்து தலை பிடித்து
புலி வேட்டையில் நான்
மனித வேட்டையில் புலி
சுழலும் சக்கரவியூகம்.
அகத்தில் பார்க்கின்
நான் என்றொரு திரிபு
புலி என்றொரு நிழல்.

*ரமேஷ் - பிரேமிற்கு



About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP