அணில் கதை
>> Friday, November 27, 2009
ஒன்றிலிருந்து ஒன்றாக
கண்ணிகளின் மீது
தாவுகிறது அணில்
நீண்ட புசுபுசு வாலுடன்
அழகாய் இருகரம் குவித்து
நின்று... ஓடி...
வானம் பொய்த்துப்போன
நாட்களை சபித்து
இரைதேடி நகர்புகும்
நெல்மணி தொடங்கி
பழங்கள் வரை தேடும்.
ஒன்றும் கிடைக்காத வெறுமையில்
நெளிந்த கோக் டின்னை
ரட்டரட்ட ர்ர்ர்ரட்டவென
உருட்டி விளையாடும்
தொடர்தேடல்கள்
அயர்ச்சியூட்டும்போது
காட்டில் - பொந்தில்
கீச்கீச்சென்றிருக்கும்
பிங்க் நிறக்குட்டிகளை
நினைத்துக்கொள்ளும்
இறுதியாய் கிடைத்ததை
சேகரித்துக்கொண்டு
மாலையில் திரும்பும்.
கண்ணிகளைத் தாண்டி
எல்லை தொடுகையில்
சுடப்பட்டு செத்துவிழும்.
*எழுதியது-2006ல். பதிவிட்டது - இன்று