
இன்று அலுவலகத்தில் எனது கடைசி தினம். ஏற்கனவே நான்கு ‘last day in office’ பார்த்தாயிற்று என்றாலும், அயல் நாட்டில் - சிங்கப்பூரில் இதுவே நான் பார்க்கிற/த்த முதல் வேலை. எல்லாவற்றிலிருந்தும் தப்பி ஓடிக் கொண்டிருந்தபோது அல்லது அவ்வாறான ஓர் நினைவைக் கொண்டிருந்தபோது - இடப்பெயர்வு மட்டுமே என்னை ஆசுவாசப்படுத்தும் என்று நான் உட்பட அனைவரும் நம்பியபோது கிடைத்த வேலை. ஊரில் இருந்து கிளம்புவதற்கு உண்மையில் ‘குறைந்தபட்ச’ துறவறத்துக்கான பாவனைகள் தேவைப்பட்டன. ‘நினைவுகளை வேட்டையாடித் திரியும் விலங்கு’ என்பன போன்ற பிரகடனங்கள், ஆழ்ந்து நோக்குகையில் மனச்சிதைவின் ஆரம்ப அறிகுறியாய் இருக்கக்கூடும்.
வெகுவான சுவாரசியங்கள் ஏதுமின்றியே இவ்வேலையை ஏற்றுக்கொண்டேன். பணமும், இடமாறுதலும் ஓரளவிற்கு இளைப்பாற உதவின. புதிதாய்க் கிடைத்த நண்பர்களும், அவ்வப்போதான போதையும், பதினைந்து அடி தொலைவுக்குள் அனைத்தும் காணக் கிடைக்கும் இத்தீவின் தெருக்களும் உள்ளிருக்கும் சாத்தானை எழும்பவொட்டாமல் பார்த்துக் கொண்டனர். ஒரு நாளின் முக்கால்வாசி ஆபிஸிலேயே கழிந்தது. சற்றும் சம்பந்தமில்லாத வேலை என்பதால் மிகுந்த பிரயாசையோடுதான் எதையும் அணுக வேண்டியிருந்தது. முதல் மூன்று மாத காலத்தில் உச்சகட்ட நெருக்கடிகளை எதிர்கொண்டேன். எனது பலவீனமான பக்கங்கள் எனக்கே வெளிப்படுத்தப்பட்டன. நிறைய கற்றுக் கொள்வதற்கான, கற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்புகள் தாமாகவே வந்தன.! ஒரு சிலருடன் வழக்கம்போல நேரடியாகவே மோதி (!) ‘நல்லவன்’ மாதிரியான பிம்பங்களிலிருந்து வெகுகவனமாக விலகிக்கொண்டேன்.
திருவல்லிக்கேணி மேன்ஷன்களை சிதிலமாய் நினைவுக்குக் கொண்டு வரும் டார்மட்ரி அறையிலிருந்து, நான்கு சுவர்கள் கொண்ட வீடு போன்ற உறைவிடத்துக்கும், அதன்பிறகு இப்போது இருக்கும் Lakeside - உல்லாசபுரிக்கும் எனது வசிப்பிடங்களை மாற்றிக்கொண்டேன். இப்போது வரைக்கும் எனது தனிப்பட்ட வாழ்வியல் நெருக்கடிகள் எதுவும் தீர்ந்துவிடவில்லை எனினும், இயல்பை ஓரளவிற்கேனும் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறேன்.
உலகின் அழகிய நாடுகளில் ஒன்றாக இருப்பினும் எல்லாப் பெருநகரங்களைப் போலவே இத்தீவின் பிரஜைகள் மாத்திரமின்றி குடியேறிகளும் வாழ்வது இயந்திரகதி வாழ்க்கைதான். இத்தீவில் இருந்துகொண்டு ‘வேண்டி நிற்பது நதிக்கரை நாகரீகம்’ என்று சொன்னால் அவனை விட உலகில் பேராசைக்காரன் யாருமில்லை. விதிக்கப்பட்ட நகர நாகரீகத்தை ஏற்றுக்கொண்டு இன்னும் சில வருடங்களுக்கு இந்நாட்டிலேயே இருக்கலாம் என முடிவெடுத்தாயிற்று. இந்த விநாடி வரை அடுத்த வேலை கிடைக்கவில்லை எனினும்... கையில் இருக்கும் சொற்ப நாட்களில் வேலை தேடியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம். கடந்த காலங்களில் என் வீழ்ச்சியை என் கண்களாலேயே கண்ட பிறகு இப்போதெல்லாம் பெரிதாய் திட்டமிடுவதில்லை. அந்நேர மனநிலைக்கு ஏற்புடைய எதையும் செய்யத் தயாராகவே இருக்கிறேன். நம்புங்கள்! கை விடப்படீர்!
விதிக்கப்பட்ட வாழ்க்கைக்கு பழக்கப்படுத்திக்கொண்ட விலங்கு எல்லா நேரங்களிலும் ஆதி நினைவுகளிலிருந்து விலகி இருப்பது சாத்தியமா? வரும் 20ஆம் தேதி தமிழ்நாடு பயணம். நண்பர்கள் அனைவரையும் சந்திக்கும் ஆவலோடு...
Read more...