கதைமாந்தன் கதை
>> Monday, November 12, 2007
இரகசியங்களால் கட்டமைக்கப்பட்ட உனது இந்த உலகத்தின் தனிமையில் இருந்து தப்பிப்பதற்காகவும், கொண்ட சுய கழிவிரக்கத்தின் பெயரிலுமாய் என்னை நீ புழுக்கம் தாளாத இப்பகற்பொழுதில் எழுதத் தூண்டுகிறாய். இருள் கவிந்த இந்த அறையினுள் உனக்காக நான் கடந்த இரண்டு மாதங்களாய் காத்திருக்கிறேன், ‘நான் வருவதற்கான வாய்ப்புகளை உண்டாக்குவது உனது கையில் இருக்கிறது’ என நீ சொல்லிச் சென்றதை நம்பி இருளுக்குள் நடமாடுவதாய் உருவகித்துக் கொண்ட இந்த பிசாசுகளுக்கு உன் மீதான காதல் கவிதைகளை வாசித்துக் காட்டிக்கொண்டிருக்கிறேன். இவை நிச்சயம் உனக்கு பரிச்சயமானவையாய் இருக்கக்கூடும், உனக்கு பிசாசுகளின் மொழி தெரியும் என நான் உறுதியாய் நம்புவதால்.
என்னை நான் படைத்துக் கொள்கிறேன், எவ்வாறு படைத்துக் கொள்கிறேனோ அவ்வாறே சுயபரிசோதனைகள் தோல்வியுறும் பட்சத்தில் அழித்துக்கொள்ளவும் தயங்கியதில்லை. எனது உள்வெளி அரங்கங்கள் ஜியோமிதி கோணங்களுக்கு உட்படாமல் முட்டிக்கொள்ளும் போதெல்லாம் கடவுளின் தந்தை உன்னைப் புணர்வதில் தோல்வியுற்று தற்கொலைக்கு முயல்கிறார். அன்றைய தினங்களில் மனதின் விகாரங்கள் நீண்டு இராப்பொழுதைக் கழிக்க முடியாமல் நீ தெருவில் உலா வரும் தருணங்களில் நான் மீண்டும் உன்னைப் படைக்கிறேன் ஆனால் எத்தனை முறை படைத்தாலும் நீ திரும்பவும் சாத்தானாகவே உருக்கொள்கிறாய்.
தேவதைக் கதைகள்- பாகம் 7 எழுதிக் கொண்டிருக்கும் ஒரு கதாசிரியனின் நாவலில் 118 ஆம் பக்கத்தில் வாழ்கிறான் பிசாசுகளுக்குக் கவிதை வாசிப்பவன். தன்னை மறந்து காதலில் மூழ்கியிருக்கும் அந்தப் பேடியிடம் இந்நாவலைப் படித்துக் கொண்டிருக்கும் நீ தயவுசெய்து சொல், 60 நாட்களுக்கு முன் அவனுண்ட உணவு அவன் தங்கை தன் உடலை சிலருக்கு தின்னக்கொடுத்துப் பெற்ற பணத்தில் சமைத்தது என்பதை. கதையின் முடிவில் அவனை மனநல மருத்துவமனையில் வைத்துப் பேணச்சொல்லி கதாசிரியன் பரிந்துரைக்கிறான் என்பதையும் கூறிவிடு.
மனநலம் காப்பது சமூகத்திற்கு நல்லது என்று சொல்லும் புனிதர்களையும், யூஜெனிக்ஸ் மற்றும் யூதெனிக்ஸ் வகையறாக்களை வீட்டிற்குள் பின்பற்றும் தந்தைகளையும், சாடிசம் என்ற ஒற்றை வார்த்தையில் உனது அடிமனது ஆசைகளை இச்சமூகத்தின் முன் கேலிப் பொருளாக்கி வேடிக்கை பார்க்கும் மனநல மருத்துவர்களையும் கூண்டோடு கழுவில் ஏற்ற நான் சமூகநல வழக்கு தொடுத்தால் உன் கடைக்கண் பார்வை கிட்டக்கூடும் என பிசாசுகளின் தலைவனானது எனக்கு குறி சொல்லிற்று. அன்பே, தொடர்ந்து இருளில் இருப்பதால் பார்வை மங்கி வருகிறது, கதையின் முடிவில் நான் கொல்லப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதால் அதற்கு முந்தைய பக்கத்திலாவது உனது பிரவேசம் இவ்வறையில் நிகழட்டும்.
பெண் என்ற பெயர்ச்சொல் கொண்டு அவர்கள் உன்னைப் புரிந்துகொண்டதில் எனக்கு மகிழ்ச்சியே, உன்னளவில் உனக்கு கொடுக்கப்பட்ட இலக்குகளைக் காட்டிலும் நீ அதிகமாகவே கடந்த காலங்களில் அடைந்து வந்திருக்கிறாய், இந்த நொடி வரையிலும் உலகின் தவிர்க்கமுடியாத உந்துசக்தியாக உன்னை முன் நிறுத்தும் இப்பொழுதில் விலக்கப்பட்ட கனியை உண்பதற்கு உன்னைத் தூண்டியதன் நோக்கம் நிறைவேறி விட்டதாகவே தோன்றுகிறது. நான் உன்னை எந்த ஆணின் விலா எலும்பிலிருந்தும் படைக்கவில்லை,மாறாக உன்னை என் கொம்புகளில் ஒன்றை உடைத்துப் படைத்தேன். கடவுளின் தொன்மங்களைக் கண்டறிந்து இப்புவியின் கடைசி பிரஜையிடம் இருந்தும் நீ அதை நீக்கும் வரை நான் மரிக்காதிருப்பேன். நீ இங்கு வந்து போவது குறித்து கடவுளின் தந்தையிடம் கூறாதே, மீறினால் உன் மீதான வன்புணர்வு தாக்குதல்கள் அளவின்றி கட்டவிழ்த்து விடப்படும்.
நீ என் கால்களில் தரித்துவிட்ட சங்கிலிகளை அறுக்க முடியாததால் என் கணுக்கால் எலும்பும், பாத எலும்பும் ஒன்றுசேரும் இடத்தை உடைத்துவிட்டேன். எலும்புகள் அற்ற சதை இலகுவாக வளையத்தின் வழியே சென்று வருகிறது. ஏதாவது காலடிச்சத்தம் கேட்டால் நானே சங்கிலியில் என்னைப் பிணைத்துக்கொள்கிறேன், அயர்ந்து தூங்கும் போது வரும் கனவில் நான் உறங்குகிறேன், அருகில் சில கழுகுகள் என் தங்கையின் உடலைக் கொத்தித்தின்று கொண்டுள்ளன. திடுக்கிட்டு விழிக்கையில் பிசாசுக் குழந்தை ஒன்று என் கால்களை வளையத்தில் கோர்த்து விளையாடிக் கொண்டிருக்கிறது - அத்தருணங்களின் வேதனை அளவிட முடியாதது மட்டுமல்ல, உன்னால் உணர முடியாததும் கூட.
உடற்காயங்களில் இருந்து வெளியேறிய இரத்தம் இந்த அறைக்கு இளஞ்சிவப்புடன் கூடிய கவிச்சித்தன்மையானதொரு புதிய வசீகரத்தை ஏற்படுத்தியிருக்கிறது கருப்பையைப் போல. உன் நினைவு அலைகளின் தூண்டுதல் இன்றியே இன்னும் சரியாக 78 பக்கங்கள் கழித்து நான் தற்கொலை புரிந்து கொள்வேன்,மன்னித்து விடு, நீ இக்கதையில் மீண்டும் வருவதற்கான வாய்ப்பை வழங்காமைக்கு. நீண்ட காத்திருப்பின் முடிவாக நினைவு தப்பி மயங்குகையில் உண்டாகும் வெளியில் சூல் கொள்ளும் வெற்றிடத்தைப் பற்றி கவிதை செய்ய எண்ணி சில குறிப்புகளை மயங்கும் முன் நினைவில் பதிப்பிக்கிறேன். எப்படியும் இறக்கும் முன் என் தங்கைக்கு மட்டுமே உரித்தான கருப்பொருளில் இந்த இரங்கல் கவிதையை எழுதிவிடுவேன்.
நன்றி : சுஜி, மீரா, செல்வி, சத்யா, அனுராதா மற்றும் கற்பகம்
7 comments:
ஒன்னும் புரியவில்லை என்றெல்லாம் சொல்லி சிக்கல்களின் மெல்லிய முடிச்சுகளுக்கும், அறியாமையின் கட்டுகளுக்குள்ளும் என்னை நான் பிணைத்துக் கொள்ளப் போவதில்லை.
சுயம் தொலைந்துபோன எழுத்துகள் நிறைந்துள்ள இவ்வெளியில், உள்ளிலும் கூட அந்தகாரத்தில் துளிர்க்கும் மெல்லியதான ஒளிக்கீற்றைப் போல் உந்தன் விரல்கள் சொடுக்கிய எழுத்துகள் மந்தநிலைக்குப் பின்னான பிரகாசத்தை என் காதுக்குக் காட்டிவிட்டுப் போகின்றன.
யாதொன்றும் சுளுவாகப் பதிந்துவிடாத்தாய் அமையும் கீறல்கள், மேதமையின் குறியீடுகளாகப் போற்றப்படும் போதுகளில், உனக்கான தீட்சண்யமான வெளி விரிந்துகிடப்பதான கனவை என்னுள் தோற்றுவிக்கிறது. அன்று உன் தலையில் நீ கிஞ்சிற்றும் எதிர்பாராத தேவதையிடமிருந்து ஆசீர்வதிக்கப்பட்ட இறகுகள் வந்து ஒட்டிக் கொள்ளும். அதில் பட்டுத் தெறிக்கும் காற்றின் வாசத்தை இப்பெருவெளியின் யாதாகிலும் ஒரு மூலையில் என் நாசிகள் உறிஞ்சிக் கொண்டிருக்கும்.
#@%%&*~!$%%&*$#@@#$(><) ~&&~!
தமிழ் மொழிபெயர்ப்பு:
(ஆகா! இதுதான் pin நவீனத்துவமா? இப்பவே கண்ணைக் கட்டுதே!)
நல்லா வந்திருக்குங்க சந்திரசேகர்
இதுகுறித்து மெதுவா பேசுவோம்..
வருகைக்கு நன்றி அய்யனார். எல்லாம் உங்க வழிகாட்டல்தான்...!
சேஃடி pin கண்ணை குத்தாது பிரின்சு, என்னை நம்பு :)
அய்யனாரய்யா! நெசமாலுமே நெசந்தான் சொன்னீங்களா?
சிறுவர்கள் வாசிக்க வேண்டிய இடுகையில்லை என்று முதல் வரியில் சொல்லியிருந்தால் படிக்காமல் போயிருப்பேன்.
தலை சுத்துறது இன்னும் நிக்கல...
Post a Comment