அடையாளம்

>> Wednesday, July 18, 2007

கண்மாய்க்கரையோரம் நிற்கிறது ஒற்றைப்பனை
தண்டட்டி பெருசுகளுக்கு பாண்டிமுனியாய்
மஞ்சுவிரட்டுக்கு மாடு அவிழ்ப்பிடமாய்
பொட்டல் வெளிச் சூரியனின்
ஒற்றைப் பார்வையாளனாய்
வயல் கூலிகளுக்கு நிழல் கடிகாரமாய்
சோறுண்ணா குழந்தைகளுக்கு
கிலியூட்டும் பேய் பனையாய்
மேலத்தெரு பேச்சிக்கும்
கீழத்தெரு இசக்கிக்கும் சந்திப்பிடமாய்.
புழுதிக் காட்டின் இடையர்களுக்கு புகலிடமாய்
இன்னும் எத்தனையோ உண்டு அடையாளங்கள்…
ஆனாலும் அய்யா சொல்கிறார் பேரனுக்கு
“ஒடஞ்சு போன கள்ளுக்கலையத்தோட நிக்குது பாரு
அதான் ஒத்தப்பனை”Read more...

வாழ்வை ஊடுருவி….

>> Saturday, July 14, 2007

அவனுக்கு என்னவாயிற்று?
அவனுக்கு சரியாய் நினைவில் இல்லை
நேற்றுதான் நிகழ்ந்தன யாவும்
என்பதாய் நினைப்பு அவனுக்கு
அவனை பாதித்த ஏதோ ஒன்று…
உண்மையில் நேற்றேதான் நிகழ்ந்திருக்குமோ?
எதிர்படும் எவரிடமும் மன்னிப்பு கேட்கும் அவனை
அயர்ந்தோய்ந்த பெருநகரின் இரவு தெருக்களில்
நீங்கள் சந்தித்திருக்கக்கூடும்.
அவனது மன்னிப்பிற்கான இரைஞ்சலை
யாரும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை
மறுதலிக்கவும் இல்லை.
யாரும் அற்ற இராப்பொழுதில்
மரணத்தை அவன் துரத்துவதை
நான் எதிரில் நின்று பார்த்தேன்.
அதை அவன் உணர்ந்திருக்கக்கூடும்-
மெளனமாய் என்னை கடந்து சென்றான்
என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை அல்லது
எனக்கு சொல்ல அவனிடம் சேதி இல்லை.
விசாலமான பறவையின் கூடொன்று
அவனது வருகையை எதிர்பார்த்திருக்கிறது-இன்னும்
அவன் மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்கிறான்
காலத்தின் வேர்களை இறுகப் பற்றியபடி.Read more...

பாதசாரி

>> Thursday, July 5, 2007

துயரின் மீது பயணிக்கும்
விதியின் பயணி நான்.
எல்லைகளற்று தனியே
நீள்கிறது என் பயணம்
வழித்துணையாய் தொடர்வது
உன் தேவதைகளும் என் சாபங்களும்.
பாதை நெடுக படர்ந்திருக்கின்றன
வலி மிகுந்த ஞாபகங்கள்.
நெறி பிறழ்ந்த விளக்குகள் என் மீது
கருமையை உமிழ்கின்றன,
இரவின் மடியிலிருந்து கசியத் துவங்குகிறது
உனது இசை…
என் நடை வேகப்படுகிறது.
மெல்லிய சிறகு போல
உன் கானம் என் மேல் படர்கிறது…
பாரம் தாங்காமல் ஓடத்துவங்குகிறேன்
எட்டாத்தொலைவில் எங்கோ கேட்கிறது உன் கானம்…
பாதைகள் அற்ற முடிவில்
உன் பேரன்பின் முன்னே மண்டியிடுகிறேன்.
நீ என்னுள் நிரப்ப முயன்ற
பரிவின் இசை வெளியில் கரைகிறது.
முன்னும் பின்னும் அற்ற விதியின் கரம்
என்னைச் சுட்டுகிறது-உனக்கு தேவனாய்...!
பின்னும் வியாபித்திருந்த அமைதி
அறுந்த யாழின் நரம்பை மீட்டியது.Read more...

ஒரு காதல் தோற்றபோது…...

>> Monday, July 2, 2007

தேடிய பொழுதுகள் அனைத்தும்
வீணாக இன்னும் அலைந்து கொண்டிருக்கின்றன -
கடந்த காலத்தில்.
அவைகட்கு சொல்லியாக வேண்டும்…
முரண்பட்ட வாழ்க்கைச் சங்கிலியின்
கண்ணிகளாய் நாம் இருப்பதை.
அழிந்த நகரின் எச்சமாய் நிற்கின்றது
இடியில் சிதைந்த கல் உரு.
உனக்கு சுவர் தேவலாம்…
எனக்கு எது தேவலாம்? நீயே சொல்…!
அவைகட்கு சொல்லியாக வேண்டும்…
நாம் இல்லாதிருப்பதை..! *


* என் உயர்ந்த நண்பனுக்குRead more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP