இங்கே ஒரு காதல் கதை 7 - 11

>> Wednesday, December 29, 2010




2009ன் இறுதி மாதங்களில் ஒன்று

நீண்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு நெருங்கிய கல்லூரி நண்பனை சென்னையின் புகழ்பெற்ற சனநெருக்கடி தெருவில் யதார்த்தமாய் சந்தித்தேன். பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு ‘ஷீ இஸ் மை வொய்ஃப்’ என குழந்தையுடன் வந்து கொண்டிருந்த பெண்ணைக் காட்டி அறிமுகப்படுத்தினான். ‘வணக்கங்க’ ‘வணக்கம்’. திரும்பி நண்பனைப் பார்த்தேன். ‘ரொம்ப டஸ்டா இருக்கு மாப்ள இந்த தெரு’ என்று கண்களில் தூசு விழுந்த பாவனைகளுடன் திரும்பிக்கொண்டான். கல்லூரி காலத்தில் இருவரும் பகிர்ந்துகொண்ட நேவி கட்டின் சாம்பல் இங்கு வந்திருக்க நியாயமில்லை. ‘ஈவ்னிங் மீட் பண்ணுறோம் மாப்ள’ என்றவாறு எண்களைப் பரிமாறிக்கொண்டோம். ‘அண்ணா, வீட்டுக்கு வாங்கண்ணா” வெள்ளந்தியாய் சிரித்தது அந்தப் பெண். ‘ கண்டிப்பா வர்றேம்மா, இப்போ கொஞ்சம் வேலை இருக்கு.’

மாலை. நான்கு ரவுண்ட் மார்ஃபியஸும் சில சிகரெட்டுகளும் கரைந்து மதுக்கூடத்தின் கூரை வழியே கசிந்துகொண்டிருக்கும் மெல்லிய இசையை உணரத்துவங்கிய நேரம். வந்ததில் இருந்து நிலவிய மெளனத்தை நொறுக்கி உடைந்து மெலிதாய் அழத்துவங்கினான்.

‘மச்சி, என் மேல தப்பு இல்லடா’

‘ங்கோத்தா... முதல்ல இப்டி ஸ்கூல் பையனாட்டம் பேசுறத விட்று. எம்மேல தப்பில்ல. அவதான் காரணம்னு எஸ்கேப் ஆகி ஓடுறத நிறுத்து.’

‘உண்மையிலயே மச்சி. எம்மேல...’

‘கேனக்..., நிறுத்துடா. அவ உன்னை எவ்வளோ லவ் பண்ணானு எனக்குத் தெரியும்’

‘நானுந்தான் பண்ணேன்’

‘அப்புறம் என்ன மயித்துக்கு இன்னொரு பொண்ண...நல்லா வாயில வருது. பாவம்டா அந்தப் பொண்ணு. அப்பாவியா இருக்குடா. அட்லீஸ்ட் அவகிட்டயாது புருஷனுக்கான அன்போட இரு’

‘அப்படிதான் மச்சி இருக்கேன். இன்னொரு லார்ஜ் சொல்லு’

‘தாங்குவியா?’

‘யேய் மயிரு, பரங்கிப்பேட்டைல ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ஃபுல்லை முடிச்சுட்டு நைட்டெல்லாம் சரக்கு தேடி அலைஞ்சதை மறந்திட்டியா?’

‘நான் ஒன்னும் பழச மறக்கிறவன் இல்ல’

‘ இங்க பார்றா. டபுள் மீனிங்ல பேசுறாராம். டேய் பாடு..டேய் இங்க பாரு, நான் ஒன்னும் அவள வேணான்னு சொல்லல. த்தா, அவதான் எதுவுமே வேணாம்னு சொன்னா.’

‘எப்போ?’

‘நீ ஃபாரின் போய்ட்ட. எங்க யாரையும் ஒரு மயிருக்கு மதிச்சுக் கூட போன் பண்ணல. என்ன நடந்துச்சுன்னு எதுவுமே தெரியாம பெரிய புடுங்கியாட்டம் அவளுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டு என்னப் புடிச்சு காய்ச்சுற?’

‘சரிடா. என்ன ஆச்சு? நல்லாதான இருந்தீங்க’

‘தெர்லடா. திடீர்னு ஒரு நாள் வீட்ல கூப்பிடுறாங்கன்னு ஊருக்குப் போயிட்டு வந்தா. டிபார்ட்மெண்டுக்கு காலையிலயே வரச்சொன்னா. போனேன். இது சரியா வராது. வேணாம். விட்ரலாம்னு சொன்னா. செம கடுப்பாயிட்டேன். வாக்குவாதம் முத்திடுச்சு. இனிமேல் என்கிட்ட வரம்பு மீறிப் பேசுனா ஈவ்டீசிங் கம்ப்ளைண்ட் கொடுத்துருவேன்னு சொல்லிட்டு எந்திரிச்சுப் போயிட்டே இருந்தா மச்சி..!’

‘ம்,ம். அப்புறம் என்ன ஆச்சு?’

‘அத்துக்குச்சு. நானும் எவ்வளவோ ட்ரை பண்ணினேன். ஒன்னும் சரியா வரலை. ப்ராஜக்ட் முடிச்ச அடுத்த மாசமே நல்ல வெயிட்டான பார்ட்டி ஒருத்தனை கல்யாணம் பண்னிக்கிட்டு செட்டில் ஆயிட்டா.’

‘ஓஹ்’

‘மாப்ள, ..த்தா அவளுக்காக நான் M.Tech சீட்டை வேணாம்னு சொன்னவன்டா’

‘சரி மாப்ள. ஃப்ரீயா விடு. அதான் நீயும் குடும்பம், குழந்தைனு செட்டில் ஆகிட்டல்ல.
ஓநாயா இருந்து பார்த்தாத்தான் குழந்தையை சாப்பிட்டதுக்கான தர்க்க நியாயங்கள் புரியும்’

‘திரும்ப அவளுக்கு சப்போர்ட் பண்றியா?’

‘மாப்ள, என்னோட கோபம் என்னங்குறது உனக்குப் புரியல. எனக்கு நீயும் ஃபிரெண்ட், அவளும் ஃபிரெண்ட். ரெண்டுபேரும் லவ் பண்ணீங்க. சேர்ந்து வாழ்ந்துட்டு இருப்பீங்கன்னு இவ்வளவு நாள் நம்பிட்டுருந்தேன். “அப்படிலாம் எதிர்பார்க்காத ராசா”னு வாழ்க்கை பொட்டுல அடிச்சுப் புரிய வச்சுருக்கு. ஒன்ஸ் அகைய்ன் ஐ காட் தி ஃப்ரூஃப். நிரந்தரமானது, புனிதமானதுனுலாம் ஒரு மயிரும் கிடையாது. வாழ்க்கையோட நடப்பையும், இயல்பையும் சொன்னா அவளுக்கு சப்போர்ட் பண்றதா அர்த்தமில்லை.’


டிசம்பர் இறுதி, 2003 - நண்பனின் டைரியில் இருந்து...

நூறு மீட்டர் தூரத்தில் ஓவியத்தின் அமைதியுடன் தளும்பிக்கொண்டிருக்கும் கடல். பெயர் தெரியாத கண்டம் தாண்டும் பறவைகளின் கலவையான ஒலியில் மிதக்கும் முகத்துவாரத்தின் அருகிலுள்ள ஆலமரத்தடியில் நின்று கொண்டிருக்கிறேன். தூரத்துக் கடலில் புள்ளியாய் நகர்ந்து செல்லும் சில வத்தைகள். என்னைத் தவிர துறை வளாகத்தினுள் யாரும் இல்லை.

பல்கலைகழகத்தேர்வுகள் முடிந்து விடப்பட்டிருக்கும் ஒரு வார விடுமுறையை ஊருக்குப் போகாமல் ‘ப்ராஜக்ட்’ குறித்தான கலந்துரையாடலில் கழிப்பதாய் வகுப்பு தோழர்கள் யாவரும் முடிவு செய்திருந்தோம். என்னால் அதில் முழுமையாகக் கலந்து கொள்ள முடியாது. GATE நுழைவுத் தேர்வு இருக்கிறது. நாளை இரவு சென்னை கிளம்பவேண்டும். அதற்கு முன்னால் இன்றே வந்து சந்திக்கும்படி உன்னிடமிருந்து திருப்பதி கம்பெனிக்கு போன். நான் வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாயிற்று. இதோ “பறந்து விடுவாளோ!” என எண்ணத் தோன்றும் தேவதையாய், பறக்கும் கூந்தலுடன் கடற்கரை மணலில் பாதங்கள் புதைய புதைய நடந்து வருகிறாய்.

‘சாரிடா குட்டி. லேட் ஆய்டுச்சு’

‘இன்னும் கொஞ்சம் லேட்டா வந்துருந்தேன்னா என்னைச் சுத்தி விழுது விட்ருக்கும்’

‘ஒஹோ, சார் கொஞ்ச நேரம் கூட காத்திருக்கமாட்டீங்களோ?’

‘ரொம்ப சிலிர்த்துக்காதடி, சும்மாதான் சொன்னேன்’

‘அந்த பயம் இருக்கட்டும். நாளைக்குதான சென்னைக்கு?’

‘ஆமா, நாளைக்கு நைட்’

‘தங்குறது கன்ஃபார்மா?’

‘ம், நம்ம சீனியர் நளினி வந்து கூப்பிட்டு போறேன்னு சொல்லிருக்காங்க. ஒன்னும் பிரச்னை இல்ல’

‘அவ வீட்ல தங்குறதோட நிறுத்திக்கோ. அவ கூட சுத்துனதா தெரிஞ்சுச்சு... அறுத்துறுவேன்’

‘ஏய், ஏன்டி அசிங்கமா பேசுற?’

‘ஓ! அவள சொன்னோன்னே சாருக்கு கோபம் வருது? என்ன?’

‘சீ, அப்படிலாம் இல்லை. நீயா ஏன் சும்மா..?’

‘டேய் தெரியும்டா. நீ மெட்ராஸ்ல என்னென்ன ப்ளான் வச்சுருக்கேன்னு.’
‘இப்படி கூப்பிட்டு வச்சு கடுப்படிக்கதான் காலங்காத்தால போன் பண்ணி வரச்சொன்னியா?’
‘ஹேய், சாரிடா குட்டி. சும்மா விளையாட்டுக்கு... வம்பிழுத்தேன்டா. சரி, செலவுக்கு காசு வச்சிருக்கியா?’

‘ 700 ரூபா இருக்கு. போதும்னு நினைக்கிறேன்.’

‘இந்தா. இதையும் வச்சுக்கோ’ என்றவாறு என் கைகளில் 200 ரூபாயைத் திணித்தாய். அது முழுக்க உனது உள்ளங்கை வியர்வையில் நனைந்திருந்தது. சாதாரண பணத்தாளின் மீது கூட உனது பிரத்யேகமான வாசத்தைப் பரிமாற்றம் செய்யும் விரல்கள் நிச்சயம் வரம் பெற்றிருக்கக்கூடும்.

‘இதெல்லாம் வேணான்டி. நீயே வச்சுக்கோ. ஒரு நிமிசம் இரு, முந்தாநேத்து கூட செலவுக்குப் பணம் இல்லைனு சொல்லிட்ருந்த. இப்போ எப்படி?’

‘இல்லடா, அம்மா மெஸ்பில்லுக்கு பணம் அனுப்பிருக்காங்க. அதுலயிருந்துதான் கொடுத்தேன். வார்டன்கிட்ட அடுத்த மாசம் சேர்த்து கட்டுறேன்னு சொல்லிருக்கேன்’

பெண்ணின் சுயநலமில்லாத அன்பு ஒரு ஆணை எப்படி பொறி கலங்கவைத்து பித்தாக்கும் என்பதற்கு அன்று இடம், பொருள், ஏவல் மறந்து உன்னை இழுத்து, திரும்பிப் பார்த்த சில கடற் பறவைகளுக்கு முன்பாக முத்தமிட்டதே சாட்சி.

‘டேய், எக்ஸாம் நல்லாப் பண்ணு. நீ ரெண்டு வருசத்துக்குள்ள M.tech முடிச்சு, காம்பஸ்ல செலக்ட் ஆகணும். நானும் நெக்ஸ்ட் இயர் M.Phil போட்டேன்னா ஒன்றரை வருஷத்தை இழுத்துருவேன். அதுக்கு மேல தாங்காதுடா. ப்ளீஸ், என்னைய கைவிட்றாத. செத்துருவேன். எக்ஸாம் எழுதும் போது என் முகத்தை ஞாபகத்தில வச்சுக்கோ.’

‘ஏய் லூசு ஏன்டி இப்படிலாம் பேசுற. கண்டிப்பா ரெண்டு வருசத்துல நம்ம கல்யாணம் நடக்கும். இப்போ அழுகாம சிரிச்சுக்கிட்டே டாட்டா சொல்லு பாப்போம்’

நவம்பர் 2010

நண்பனுடனான சந்திப்புக்கு சுமார் ஓராண்டுக்குப் பிறகு பெங்களூருவின் இதயப்பகுதியில் அமைந்திருக்கும் உணவகம் ஒன்றில் தோழியைப் பார்த்தேன். என்னைக் கடந்து கணவனுடன் கிட்டத்தட்ட ஓடிக்கொண்டிருந்தாள். பார்த்தாளா இல்லை பார்க்காதது போல் செல்கிறாளா என்கிற சந்தேகத்துடன் திரும்பி பார்த்தபொழுது இரண்டு டேபிள் தள்ளி அமர்ந்திருந்தவள், அந்த கணம் மாத்திரம் கண்களில் ஒரு சிரிப்பை காட்டிவிட்டு சடுதியில் தன்னைப் பூட்டிக்கொண்டுவிட்டாள். அப்போது தோன்றியது, “தேவகுமாரர்களுக்கு மட்டுமில்லை, தேவதைகளுக்கும் ஆயுள் குறைவுதான்.”


செப்டம்பர் 2005, நண்பனின் டைரியில் இருந்து...

பொங்கிப் பரவும் வியர்வை மணத்துடனும், சுமக்கவியலா பாரத்துடனும் ஏதேனும் ரூபாய் நோட்டு உங்கள் பழைய டைரியிலோ, வேண்டுமென்றே சாவி தொலைக்கப்பட்ட மேசை டிராயரினுளோ இருக்குமாயின் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள். உங்களுக்கு ஒருபோதும் இளைப்பாறுதல் கிடையாது.



Read more...

நாவலோ நாவல்

>> Wednesday, December 22, 2010



காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில், மதுரை செல்லும் பேருந்து நிற்பதற்கான மேடை. மழை தூறிக்கொண்டிருந்த அந்த சோம்பேறியான நண்பகலில் மாடுகள் துள்ளல் நடைபோட்டுக் கொண்டிருந்தன. சென்ற வாரம் உள்துறை அமைச்சர் வந்த போது ஒட்டப்பட்டிருந்த தரமான தாளில் அச்சடிக்கப்பட்ட வரவேற்பு போஸ்டரை ஒரு மாடு நக்கி மேய்ந்துவிட்டு உற்சாகமாக ‘ம்ம்ம்மாஆஆஆ’ சத்தம் எழுப்பியபடி இருந்தது. நல்ல நிறைவான மதிய உணவுக்குப் பின்னர் தூக்கம் தூக்கும் நொடியில் நம்மிடமிருந்து ஆசுவாசமான சாந்திப் பெருமூச்சொன்று வருமே, அதன் ஒத்ததிர்வு. காஷ்மீர் கலவரம்- நக்சல் போராளிகள், என்று உரலுக்கும் உலக்கைக்கும் இடையில் தலையைக் கொடுத்து மாட்டிக்கொண்டிருக்கும் அமைச்சருக்கு தான் ஒரு கால்நடைக்காவது உதவியாய் இருப்பது தெரிந்தால் உணவளித்த திருப்தியும், புண்ணியமும் கிடைக்க எல்லாம் வல்ல அன்னையிடம் பிரார்த்திக்கவும் கூடும்.

கலவையான ஒலிகளோடும், அடித்த ஹாரனில் கலவரமாகி சிதறிய மக்களின் வசைகளோடும் மதுரை செல்லும் சோமு வந்து நின்றது.

‘மைய்ரை’ ‘மைய்ரை’ ‘மைய்ரை’...

முன்னால் நின்ற ஆளில்லாத அரசுப்பேருந்தை எக்கித்தள்ளி முழுமையான ஆக்கிரமிப்பு.

நிற்க... ‘மைய்ரை’ என்பது ‘மதுரை’ என்று வழங்கப்படும் மூவாயிரமாண்டு தொல்நகரின் ‘நடத்துனர் மரூஉ’ என்று அறிக. நடத்துனர்களின் மொழி எப்போதும் அலாதியானது. எப்பேர்ப்பட்ட ஊரின் பெயரும் இவர்களிடம் அதன் அப்ரிவேஷனைக் கண்டடைந்துவிடும். ‘கான்ஸ்டாண்டிநோபிள்’ போன்ற நகரின் பெயர்களும் இவர்களுக்கு விலக்காகாது என்பது என் அனுமானம். சமயங்களில் வில்லங்கங்களும் நிகழ்ந்தேறும். தஞ்சாவூர் - ஏர்வாடி தர்ஹா லைனுக்கு புதிதாய் வந்த நடத்துனர் அனுபவமின்மையாலோ, வாலிப முறுக்கை சிலேடைப் பரப்பில் வெளிப்படுத்தும் முகமாகவோ தர்ஹாவை விடுத்து ஊர்ப்பேரை மட்டும் உரத்து அடுக்குமொழியில் விளிக்க செவிட்டில் விழுந்தது அறை.

சோமுவில் ஏறியாயிற்று. பின் இருக்கை முழுவதும் காலியாய் இருந்தாலும், முதுகெலும்பின் நலன் கருதியும், மழைக்கால தமிழ்நாட்டு சாலைகளில் நம்பிக்கை வைத்தும் நடு இருக்கை ஒன்றைத் தேர்வு செய்தேன். சன்னலோரம்,குழந்தைமையின் விருப்பம். ‘நாம் எந்த இருக்கையில் அமரவேண்டும் என நாமல்ல, நமது நடத்துனரே முடிவு செய்கிறார்’ என்கிற தத்துவ அடிப்படையில், அகவை அறுபது கடந்த பெண்மணிக்காக (கவனிக்கவும், உடன் வந்த பேத்திக்காக அல்ல) இரண்டு இருக்கைகள் முன்னால் இடமாற்றம் செய்யப்பட்டேன். அந்த சன்னலோரத்தின் குழந்தைமை ஏற்கனவே அனுபவப் பாத்தியதையில் இருந்தது. ஒன்றைரை நபர்கள் மட்டுமே அமரக்கூடிய அந்த இருவர் இருக்கையில் கம்பியைப் பிடித்தவாறு ஆள் பாதி கால் மீதியாக அமர்ந்த கணம் ஒரு சபிக்கப்பட்ட சர்க்கஸ் தருணம்.

அருகில் இருந்தவருக்கு சுமார் முப்பந்தைந்து வயது இருக்கலாம். நேர்த்தியாய் உடையணிந்து நெடுநெடுவென்று இருந்தார். பேருந்து கிளம்பியதில் இருந்து என் இடது கையையே பார்த்துக்கொண்டிருந்தார். உற்றுநோக்குகையில் அவரது மையல் என் கைக்கடிகாரத்தின் மீது என்பது தெளிவாயிற்று. மெல்ல என்னிடம் பேச்சுக்கொடுத்தார். அப்போது கடிகாரத்தில் நேரம் சரியாகவும் எனது நேரம் சரியில்லாமலும் இருந்ததை நான் உணரவில்லை. பயணங்களில் நிறைய சுவாரசியமான மனிதர்களை சந்திக்க முடியுமென்பதால் பதிலுக்கு நானும் திருவாய் மலர்ந்தருளினேன்.

‘வாட்ச் நல்லாயிருக்கு. எங்க வாங்கினீங்க?’
‘சிங்கப்பூர்ல’
‘எவ்வளவு சார்?’
‘ம்ம்ம், சிங்கப்பூர்ல 140 டாலர் வந்துச்சு’
‘ஐ ஆம் ...........’ என்றவாறு தனது கார்டை நீட்டினார்.
‘ஐ ஆம் சந்திரசேகர்’ என்றவாறு கையை நீட்டினேன். என்னிடம் லைசன்ஸ் மட்டுமே இருக்கிறது.
‘ஓக்கே சார், இங்க இந்த வாட்ச் கிடைக்குமா?’
‘இதே பிராண்ட் கிடைக்குமான்னு தெரியல. டைட்டன்ல மெட்டல் சீரிஸ் இருக்கு. இதே டைப் வாட்ச்தான் அதுவும். ட்ரை பண்ணிப் பாருங்க’
‘அப்படியா, என்ன ஒரு ஃபைவ் ஹன்ட்ரட் தெளஸண்ட் இருக்குமா?’

500ஐயும் 1000ஐயும் பெருக்கி மலைத்தவனாக உஷாரானேன். இவருடனான எஞ்சிய பயண நேரத்தை எண்ணி பீதியுற்றவனாக பேச்சை மேலும் வளர்க்க விரும்பாமல், ‘தெரியலை, விசாரிச்சு பாருங்க’ என்றவாறு திரும்பி பேகில் வைத்திருந்த உபபாண்டவம் நாவலை வாசிக்க எடுத்தேன். அடுத்த நாற்பத்தைந்து மணித்துளிகளுக்கான துன்பியல் நிகழ்வுகளுக்கும், ஒரு வாரத்திற்கான மனக்குமைவுக்கும் அந்த நொடியும், செயலுமே ஆதுரமாய் இருந்தது.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்பது ரசனையாயின் இவர் உரிமையும் உண்டு என்ற கொள்கையாளராய் இருந்தார். கிட்டத்தட்ட என் கையில் இருந்த உபபாண்டவம் பறிக்கப்பட்டது. கையறு நிலையில் பயணத்தின் மன அமைதிக்காக மெளனம் காத்தேன்.

‘நிறைய புக்ஸ் படிப்பீங்களா?’என்றவாறு பதிலுக்குக் காத்திராமல் அந்தப் புத்தகத்தை எடை போடும் தொனியில் உள்ளங்கையில் வைத்துப்பார்த்தார். புத்தகத்தைப் பிரித்து சில பக்கங்களை புரட்டினார். ‘ம்ம்’ என்று ஏதோ சொல்ல வாயெடுத்து மீண்டும் பக்கங்களைப் புரட்டினார். அவ்வப்போது தேர்ந்த நில அளைவைக்காரனின் முகபாவங்களை வெளியிடவும் தவறவில்லை. உபபாண்டவம் நாவல் குறித்து அவர் எந்த தர அறிக்கையும் வெளியிட்டுவிடக்கூடாது என்ற அச்சத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையில் இறங்கினேன்.

‘யாரு இந்த ராமகிருஷ்ணன்?’
‘இவரு தமிழில் முக்கியமான எழுத்தாளர்’
‘ஓஹோ, நமக்கு இவரைத் தெரியாதே’ என்றவாறு ‘பேக்ல என்ன? அதுவும் புக்ஸா?’ சனி ஜாதகத்தில் உச்சமாய் இருக்கலாம், நாவில் இருந்தால்... ‘ஆமாம்’ என்றுதான் சொல்லவைக்கும்.
‘எங்க இப்படி கொடுங்க பார்போம்’ இப்போது எஞ்சிய இரண்டு புத்தகங்களும் அவர் கையில். ‘புயலிலே ஒரு தோணி’ - ப.சிங்காரம் ‘நரகத்திலிருந்து ஒரு குரல்’ - சாரு..!

புயலிலே ஒரு தோணியை அவர் புரட்டத்தொடங்குகையில் ஜப்பானிய துருப்புகள் கெர்க் ஸ்ட்ராட் வழியே இந்தோனேஷியாவுக்குள் நுழைந்தபோது ஹாலந்து நாட்டவர் என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள் என்று ஊகிக்க முடிந்தது. நடுக்கம்! நைசாக ‘ஒரு நிமிஷம்’ என்று சொல்லி சாருவை கவர்ந்தேன். ஏற்கனவே எஸ்.ரா, ப.சிங்காரம் இருவரும் இவரின் தராசில் இடமின்றி நின்று கொண்டிருக்கையில் சாருவையும் அதில் ஏற்ற விருப்பமில்லை.

அட்டையின் தடிமன், அட்டைப்படம், சிங்காரத்தின் வழுக்கை போன்ற சிலபல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ஒருவழியாக புத்தகத்தை திரும்ப தந்தார். எனது தலையைச் சுற்றி பறந்து கொண்டிருந்த பறவைகள் கூடடைந்தன. மாசிப்பச்சைக்கு குலதெய்வத்தை தரிசிக்கலாம்.

‘நான் இந்த மாதிரி புக்ஸ்லாம் படிக்கிறதில்லை. பிசினஸ்தான் நமக்கு. அதனால, நெறய தன்னம்பிக்கை புத்தகங்கள், சுயமுன்னேற்ற புக்ஸ் எல்லாம் படிப்பேன். ஒரு லைப்ரரியே வைக்கலாம்...அவ்வளவு புக்ஸ் இருக்கு, ஹா ஹா ஹா’

‘அவ்வளவு புக்ஸ் படிச்சும் தன்னம்பிக்கையோ, முன்னேற்றமோ ஏற்படலீங்களா?’

‘என்ன?’

‘இல்லிங்க, ஏற்பட்டுருந்தா அடுத்த புத்தகம் வாங்கவேண்டிய அவசியம் இருந்திருக்காதே? அதுக்கு சொன்னேன்’.

லேசான முறைப்புடன் அவர் தலைக்கு மேலே சுட்டிக்காட்டி ‘அந்த பேகை எடுங்க, ஒன்னு காட்றேன்’ என்றார். அங்கே இருந்தது ஹெச்.பி லேப்டாப் கேரிங் கேஸ். ‘அந்த கேரிங் கேஸா’ ‘இல்லிங்க, அந்த ப்ளாக் கலர் லெதர் பேக்’. எனது பொறுமையின் நாணயம் உறைகல்லில் ரத்தம் வர தோய்க்கப்பட்டுக்கொண்டிருந்தது.

உள்ளேயிருந்து ‘பணம் சம்பாதிப்பது எப்படி?’ போன்ற தலைப்பைச் சூடிய ஒரு தமிழாக்கத்தை எடுத்தார். மடித்து அடையாளம் வைத்திருந்த பக்கத்தைப் பிரித்து ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். அஃது நான் செல்லும் பேருந்தில் பில்கேட்ஸ் ஓட்டுனராகவும், லட்சுமி மிட்டல் நடத்துனராகவும் வந்து கொண்டிருப்பது போன்ற ஜிகினாத்தோற்றங்களை உண்டாக்கிற்று. பிரசங்கம் முடிந்தவுடன் சுவிஷேசக்கூட்டத்தின் பிரச்சாரகர் அனைவரையும் கருணை ததும்பப் பார்ப்பாரே, அப்படி ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் பேகிற்குள் கையை விட்டார். இம்முறை பில்கேட்ஸின் வங்கிக் கணக்குப் புத்தகம் வந்தாலும் ஆச்சரியப்படக்கூடாது என்கிற உறுதியுடன் இருந்தேன்.


அவர் கையில் இப்போது ‘ப.ச.எ?’ புத்தகத்தின் ஆங்கிலப்பதிப்பு. எனது கண்கள் ஒருமுறை இருண்டு மீண்டன. ‘இது எதுக்கு சார்?’ ‘இல்ல, எனக்கு இங்கிலீஷ் அவ்வளவா தெரியாது. அதனால தமிழ், இங்கிலீஷ் ரெண்டுமே வாங்கிருவேன்.’
‘இங்கிலீஷ் ஒரு மொழிதான சார். உங்களை மாதிரி ஆட்கள் ஈசியா கத்துக்கலாம்’ என்று சொன்னபின்னரே சொல்லியிருக்ககூடாது எனத் தோன்றியது.
‘ஆமா, அதுக்கும் நிறைய புகஸ் வச்சிருக்கேன்... ... ... ... ... ... ... ... ... ... ...’
‘சார், ஒன் செகண்ட். ஏதோ கால் வருது’ என்று தப்பித்து செல்பேசியில் ஆழ்ந்தேன். எப்படிப்பட்ட உரையாடலும் முடிவுக்கு வரவேண்டுமே, வந்தது. உடன் பருந்தெனப் பாய்ந்து பற்றிக்கொண்டார்.

இம்முறை ப்ரம்மாஸ்திரம் ஏவப்பட்டது. ‘நான் புக்ஸ் (புக் அல்ல புக்ஸ்) எழுதிட்ருக்கேன். இன்னும் ஆறு மாசத்துக்குள்ள முடிஞ்சுடும்’
‘ஓ, நைஸ்’
‘ இந்த மாதிரியான பிசினஸ் புக்ஸ்ல இருந்து நிறைய பாய்ண்ட்ஸ் எடுத்து வச்சிருக்கேன். அப்படியே கோர்த்தம்னா ரெண்டு புக் கூடப் போடலாம்.’
‘நல்லாப் போடலாம்’
‘நான் ஆம்வே பிசினஸும் பண்றேன். அது எப்படி பண்றதுன்னா...‘
‘இல்ல சார். வேணாம். நாட் இன்ட்ரஸ்டட்’
‘பரவாயில்ல. ஆமா,சிவகாசில நிறைய பப்ளிஷர்ஸ் இருக்காங்கள்ல?’
‘ஆமா, தெருவுக்குத் தெரு’. பிரிண்டிங் பிரஸ் ஓனருக்கும் பப்ளிஷருக்கும் ஒரே அந்தஸ்தை நல்கும் அவரை எதில் சேர்ப்பது என்றே புரியவில்லை.
‘இப்போ உங்களைப் பார்த்தோன்னே இன்னொண்னும் முடிவு பண்ணிருக்கேன்’
‘என்னன்னு?’
‘இப்போ நீங்க காட்டுன நாவலும் பார்த்தேன். ஒன்னுமே நல்லாயில்லை. பேசாம நானே அந்த மாதிரி நாவல் எழுதலாம்னு ... ... ....’அடுத்தடுத்த வார்த்தைகள் கேட்கவில்லை. உலகமே தட்டாமாலை சுற்றுவது போல இருந்தது. ஒருமையுள் ஆமை போல ஐந்தடக்கல் ஆற்றுவது இனியும் சாத்தியமில்லை எனத்தோன்றியபோது திருப்பத்தூர் பேருந்து நிலையம் வந்துவிட்டது. திரும்பிப் பார்த்தேன். கடைசி இருக்கை காலியாய் இருந்தது. தெறித்து ஓடிப் போய் அமர்ந்துகொண்டேன். வாந்தி எடுப்பதுபோன்ற பாவனைகளுடன் குனிந்தவன் நிமிர்ந்து பார்க்கவேயில்லை. அது மாட்டுத்தாவணிக்குள் வண்டி நுழையுமுன் வேகத்தடையிலேயே இறங்கித் தப்பியது வரை தொடர்ந்தது.

ஏர்போர்ட் சென்று அண்ணனை வழியனுப்பிவிட்டு ஒன்பது மணிக்கே மாட்டுத்தாவணி வந்துவிட்டிருந்தாலும் நண்பன் அழகுராசாவுக்காக காத்திருந்து அழுது புலம்பிவிட்டு, அவரது விசிட்டிங் கார்டை சுக்கல் சுக்கலாய் கிழித்தெறிந்து தலையை சிலுப்பிக்கொண்டு சொன்னது இது ,” நாமளும் சீக்கிரம் நாவல் எழுதணும்டா”



Read more...

இங்கே ஒரு காதல் கதை 6

>> Monday, December 13, 2010




“எல்லாம் யோசிக்கும் வேளையில் உண்பதும் உறங்குவதுமாக முடியும்” என்கிற தாயுமானவரின் தத்துவத்தில் இன்றைய விடியல் நிலை கொண்டது. நேற்றைய மதுவின் போதை நிகழ்வை ஒத்திவைக்கவில்லை. குரூரமான இரவும்... நீட்சியாய் விடியலும். உண்மையான அன்பு என்றோ ஆத்மாவின் தேடல் என்றோ ‘காதல்’ என்கிற சுயநலத்தை ஒருபோதும் வகைப்படுத்த முனைந்ததில்லை. ஆனால் நீ என்கிற போது மட்டும் புலன்களின்/ அறிவின் கட்டுப்பாடுகள் மயன் நிர்ணயித்த நகரின் பழியெனப் பற்றி எரிகிறது.

நிரந்தரமான கூடு என்றோ அல்லது உண்மையான காதல் என்றோ நான் கூறிக்கொண்டலைவது எனது தோற்றமாயையாய்தான் இருக்கமுடியும். நிரப்பப்படாத இடைவெளி, எதுகொண்டும் சமனாகாத மனதின் வெற்றிடம், இன்னொருத்தனை/ஒருத்தியை தீண்டாத உதடுகள் போன்றவை இப்பேரண்டத்தின் பிரம்மாண்டத்தின் முன்பு போலிப்பிம்பங்கள் அன்றி வேறில்லை.

என்றாலும் சகி, நீளும் கடைத்தெருக்களில் உனது பிரிய விரல் கோர்த்தல்களையும், வெம்முலைகளின் நடுவேயான பனிக்காலத் திளைத்தல்களையும்,இதழ்களினூடாக மேல்தாடையினுள்ளோடித் துழாவும் நாவின் குழைவுத் தீண்டல்களையும், உனக்கேயான கீழ் உதட்டின் சிவப்பையும், அகன்ற நிம்மதியின் ஆலென வீற்றிருக்கும் உன் மடியினையும், கருணையின் யோனியையும் இழந்து நிற்கும் இந்த நாள் நரகமாய் இருக்கிறது. நீ காட்டிச்சென்ற பேரன்பின் நாட்களை ஜனித்த குழந்தையின் நேசத்தோடும், முலைப்பால் பற்றோடும், நன்றியோடும் நினைவு கூர்கிறேன்.

தீர்மானங்களின் நிழலில் வாழும் பூஞ்சையை விருட்சமென கற்பனை செய்துகொள்வது எனது கற்பிதமாய்தான் இருக்க முடியும்...எனினும், எஞ்சிய நாட்களுக்கான புன்னகையை, வன்மத்தை, கிளர்வுகளை, கொடுந்தனிமையை, காதலைத் தந்தவாறு வற்றாத ஜீவநதியென எனக்குள் ஓடிக்கொண்டே இருப்பாய்.

கிரியா ஊக்கிகளால் மாற்றவியலாத நம் வாழ்வின் சமன்பாட்டில், நாம் ஒருபோதும் சந்தித்து விடாதிருக்கவும், அவரவர்க்கு விதிக்கப்பட்ட வாழ்வை வாழவும் எல்லாம் வல்ல இயற்கை ஆசிர்வதிக்கட்டும். அழகே! என்றென்றும் என் காதல் உனக்கு!



Read more...

அக்டோபர் 2 - மழையில் கரைதல்

>> Sunday, October 3, 2010




1.
எனக்கும், பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கும் அவ்வளவாக ஆகாது. அதற்காக அவர் மீதிருந்த காழ்ப்புணர்ச்சியைத் தீர்ப்பதற்கு நான் கால இயந்திரம் ஏறிச்செல்ல முடியாது. ஒளியின் வேகத்தில் முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ சென்று காலத்தை வெல்வதில் ஐன்ஸ்டைனுக்கு இருந்த ஆர்வமும், பிரக்ஞையும் எனக்கு இல்லாததால் திரு.காந்தியை சந்தித்து, சண்டையிட்டு சார்பியல் தத்துவத்தை உலகிற்கு நிறுவும் பாக்கியமும் வாய்க்காமல் போய்விட்டது. ஒருவேளை திரு.காந்தியின் இரத்தம் தோய்ந்த துணிகளைப் பார்த்தால் நான் அவர்பால் கொண்டிருக்கும் முரண்களை சரி செய்துகொள்ள முடியும் எனத் தோன்றியதால், கெளதமின் கிடையில் இருந்து இரண்டு ஆடுகளைத் திருடி எல்.எஃப்.ஆர்.சி ஆசிரியர், ஃபாதர் சற்குணத்திடம் விற்று அந்த பணத்தில் மதுரை காந்தி மியூசியம் சென்றேன். இருந்த 27 கேள்விகளின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துதான் அந்தப் பயணத்தின் பலன். இது நடந்தது பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு. இப்போது இன்னும் வளர்ந்திருக்கிறேன். கூடவே கேள்விகளும், முரண்களும்.

2.
சர்ச்சை ஒட்டியிருந்த பாரின் காம்பவுண்ட் சுவரில் எழுதியிருந்த வாசகம்

‘ஆசிர்வதிக்கப்பட்டவர்களே, நினைத்துப் பாருங்கள். நிறமின்றி, நிறையின்றி மிதக்கும் அறைக்குள் பீறிடும் மதுவோடும், தளும்பும் இசையோடும் நீங்கள் அமர்ந்திருப்பதாய்!
அப்படி ஓர் இரவை உங்களுக்கு அளிக்கவேண்டுமென சித்தம் கொண்டுள்ள...’

இதற்கு மேல் பெயிண்டும் சிமெண்டும் உதிர்ந்து செங்கல் விகாரமாய் தெரிகிறது.

3.
எனக்கும் அவருக்குமான பிரச்னைகளை இங்கேயே எழுதினாலும் எழுதுவேன், அல்லது பிறிதொரு இடத்தில், பிறிதொரு தருணத்தில். இப்போது சல்மாவைப் பற்றி கொஞ்சம்...

மாற்றவியலாத ஆற்றாமைகளின் பட்டியலின் மீதான எரிச்சலை சனநாயகத்தை அடியொற்றி தீர்த்துக் கொள்வதென்று முடிவு செய்தேன். ஆனால் எப்படித் தீர்ப்பது? யோசனையுடன், மழை மேகங்கள் சூழ்ந்து அந்திக்கு முன்பாகவே இருளை பாவிக் கொண்டிருந்த நகரத்திற்கு வெளியே இலக்கின்றி நடந்தபோது எதிரில் தெரிந்தது மதுக்கடை. தீர்வு கிடைத்தாயிற்று. பிரபஞ்சத்தின் எளிய தீர்வு. மூன்று நாட்களாய் பெருகி வரும் குற்றவுணர்ச்சியைக் கொன்றுவிடலாம், அது உற்ற சிநேகிதனைக் கொல்வது போன்ற உணர்ச்சியைத் தருவதாய் இருந்தாலும், செய்யத்தான் வேண்டும். ஹாஃப் ஷட்டர் திறந்து, முழுக் கூட்டத்துடன் இயங்கிக் கொண்டிருந்த அரசு இயந்திரத்தின் ஒரு பகுதி எனக்கும் தன் அரை கதவைத் திறந்தே வைத்திருந்தது. ஹாட்ஸ் ஆஃப் டு மிஸ்டர் காந்தி.

‘ஒரு ஹாஃப் மேஜிக் மொமென்ட்ஸ் வோட்கா’

‘என்னாது? மாமியார் ஊடாட்டம் வெரைட்டி கேக்குற? MC ஹாஃப் மட்டும்தான் இருக்கு, 300 ரூபா’

‘என்னய்யா இது அநியாயம், 300 ரூபாயா?’

‘ப்ளாக்குல வாங்குறதுக்கு வந்துட்டு இன்னா ஸீனு? த்தா, பீக் அவர்ல தொல்ல பண்ணிக்குனு, நவரு’

‘சரி, ஃபுல் ஒன்னு கொடுய்யா’


4.
அறையில் நுழைந்ததும் முதல் வேலையாக புத்தக அலமாரியில் இருந்த இரண்டு புத்தகங்களை கவனமாக பிரித்தெடுத்தேன். இவற்றை அறையில் இருந்து நீக்குவதென்ற முடிவுக்கு அவற்றின் தலைப்பு மட்டுமே காரணம் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்கிறேன். காரணங்களை பொதுவில் தெரிவிப்பது சனநாயகத்தின் தலையாய பண்பும் கூட. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வகித்த சென்ஸார் போர்ட் மெம்பர் பதவி இந்த சூட்சுமங்களைக் கைவரவைத்தது.

காந்தியை கொன்றது தவறுதான் - ரமேஷ் பிரேதன்
My Experiments with Truth - M.K. Gandhi

இரண்டு புத்தகங்களிலும் ‘நேரில் காணுமன்று உங்களை கொலை செய்ய விருப்பம்- முத்தங்களுடன்’ எனக் கையெழுத்திட்டு முகமறியாத் தோழிகளுக்கு பரிசாய் அனுப்பினேன். இப்போது அறை சுத்தமாய், அதன் இயல்பான நிறத்துடன் இருப்பதாய் தோன்றிற்று. சத்தம் போட்டு சிரித்தேன், சிரித்துக்கொண்டிருக்கும் போதே என் மனநிலை குறித்த அச்சம் எழவே சிரிப்பின் இழை பட்டென்று அறுந்து போயிற்று, மீண்டும் ஒட்டவைக்க முடியவில்லை. மனம் புன்னகைத்தாலும் அறிவின் ஓட்டம் புன்னகையை நிறுத்தியது. சல்மாவின் புகைப்படத்தை வெறிக்கத் துவங்கினேன். பெர்ஷிய ஜீன்களின் கொடை அவள்.

5.
மழை ஒர் சகோதரனைப் போல மகிழ்ச்சியோடு நகரைத் தழுவிக்கொண்ட நேற்றைய இரவை பொன்நிற மதுவாலும் வெகு நாட்களுக்குப் பிறகு இசையாலும் நிரப்பினேன்.

நான் தேடும் செவ்வந்திப்பூவிது...
அழகே, அழகா...
உறவுகள் தொடர்கதை...
தெய்வீக ராகம்...
கம்பன் ஏமாந்தான்...

ஐந்து பாடல்களும் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் ஓடின! மறுபடி மறுபடி கேட்டபோதும் தெய்வீக ராகம் பாடலில் ஓர் ரகசியக் கனவைப் போல படிந்திருந்த அமானுஷ்யம் பிடிபடாமலேயே நழுவிக்கொண்டிருந்தது. சற்றே ஏறத்துவங்கிய போதையில் விழிகள் இலக்கில்லாமல் வெறிக்க, கசியும் விழிகளுடன், வாய் பாடல் வரிகளை முணுமுணுப்பது அனிச்சையாய் நிகழ்ந்தது.

ஒரு கட்டத்தில் ‘உறவுகள் தொடர்கதை’ பாடலை பாடியே தீர வேண்டுமென தாங்கவொணா மனவெழுச்சி ஏற்பட்டது. அவ்வாறு பாடாமல் மீதியிரவை கடக்க இயலாதென்றும் தோன்றிற்று. பியானோ இருந்தால் பாடல் முழுமை பெறும். பியானோ இருந்த அறையின் மூலை வெறுமையாய் இருந்தது. அந்தப் பியானோவை விற்று சல்மா தன் சர்வாதிகார நாட்டில் தடை செய்யப்பட்ட இலக்கியங்களை வாங்கியிருந்தாள். வெளவால் தொங்குவது போல பூர்வகுடிகளின் மொழியில் எழுதப்பட்டிருக்கும் அந்தப் பிரதிகளை நான் பார்த்துமிருக்கிறேன். இதுவரையில் புரிந்துகொள்ள முயற்சித்ததில்லை. இந்த ஒன்பது வாரங்களில் அவள் அதைப் பற்றி விளக்கியதுமில்லை. கணிதத்திற்கு டியூஷன் வைப்பது போல இரகசிய இலக்கியத்திற்கு விளக்கம் சொல்வதும் அபத்தமானது என்று ஒரு தேநீர் காலையில் சிகரெட்டின் சாம்பலை தன் உள்ளங்கையில் தட்டியவாறே சொன்னாள். நான் எழுந்துசென்று அவள் இதழ்களைக் கவ்விக் கொண்டேன்.

6.
சுவற்றில் மாட்டியிருந்த கிதாரை எடுத்து, முடுக்கி இசைக்கத் தொடங்கியபொழுது, கொட்டப்படும் முரசின் பரப்பில் விழுந்த மணல் துகள்களைப் போல மனம் திம் திம்மென்று அதிர்ந்தவாறு இருந்தது. பழைய காதலிகளை நினைத்துக் கொண்டேன், குரல் கட்டுப்பட்டது. கடிவாளம் பூட்டப்பட்ட குரலில் ஏற்ற, இறக்கங்கள் எளிதில் சாத்தியப்பட்டது.

உன் கண்களின் ஓரம்
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம், வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்...

கண்களை மூடி குழைவாய் நெகிழ்ந்து பாடிக் கொண்டிருந்தபோது முரசின் ஓசை தலைக்குப் பின்னே வெகு சமீபமாய் கேட்டது. கதவு தட்டப்படும் சப்தம். திறந்தபொழுது, சல்மா முழுக்க நனைந்து வந்திருந்தாள். ’நல்ல மழை’ என்றவாறே உள்நுழைந்து ஆடைகளைக் களைந்து கொண்டிருந்தாள்.

‘விஸ்கி?’
‘சரி, ஆனா இங்கே வேணாம்டா. மாடிக்குப் போயிடலாம்’.
‘யுவர் விஷ்’

நானும் ஆடை களைந்து நிர்வாணமானேன். பிரம்மாண்டமான கருவானத்திலிருந்து பொழிந்து கொண்டிருந்த நீர்ப்பிரவாகத்தின் கீழே இருவரும் அருகருகே படுத்திருந்தோம்.

‘மிக்ஸிங் ஒன்னும் எடுத்துட்டு வரலை. மறந்துட்டேன்’

‘பரவாயில்ல’ என்றவாறு இரண்டு கோப்பைகளையும் மொட்டை மாடி தரையில் வைத்தாள். தூய மழைத்துளிகள் க்ளக் க்ளக் சப்தம் எழுப்பியவாறு கோப்பையில் இருந்த திரவத்தை நீர்க்கச் செய்தது. தனக்கேயுரிய பிரத்யேக சிரிப்புடன் என்னைப் பார்த்தவாறு ‘சியர்ஸ்’ என்றாள். அவள் வெண்ணிறக் கழுத்தின் வழியே அந்த பொன்நிற திரவம் இறங்குவது தெளிவாகத் தெரிந்தது. அரைப்போத்தலுக்குப் பிறகு புரியாத மொழியில் புலம்பத் தொடங்கினாள். அவள் பூர்வீக மொழி. முதன்முதலாக இவளை ஒரு பாரில் சந்தித்த அன்றும் இதைப்போலவே புலம்பிக்கொண்டிருந்தாள். அமைதியாக அவதானித்ததில் அடிக்கடி அவள் ‘ஃபக் யூ ‘ என்று எங்கோ வெறித்த கண்களுடன் முணுமுணுப்பது தெரிந்தது. இன்றும் அதே.

‘ஹி ஸ்பாய்ல்ட் மை நேஷன். அந்த ஆளாலதான் நாங்க இன்னிக்கு இப்படி இருக்கோம். சுரணை இல்லாம! சுய சிந்தனை இருக்குற மக்கள் எங்க நாட்டுல குறைவு தெரியுமா?’ என்றாள்.

‘நோ மோர் பொலிடிகல் டாக்ஸ். நீ நெறய குடிச்சுட்ட. போதும்’

‘சரி,பேசலை. கம் பேபி, லெட்ஸ் மேக் லவ்’

‘இல்ல, வேணாம். யூ ஆர் லுக்கிங் ரெஸ்ட்லெஸ். ‘

‘கமான் மேன். உன்னைப் போல இல்ல நான். உன்னாலதான் தோல்விகளோட சமரசம் செஞ்சுக்க முடியாது. நாங்க தோல்விக்கு எங்களைப் பழக்கிக்கிட்டு 45 வருசம் ஆயிடுச்சு. என்னால தோல்வி, துரோகம் ரெண்டையும் இயல்பா ஏத்துக்க முடியும்’

‘நான் அப்படி சொல்ல வரலை. வீ ஆர் ட்ரங்கன் உனக்கு ஆர்கஸம் வரலைனா நான் கில்டியா ஃபீல் பண்ணுவேன்’

‘உனக்குதான் கில்டி கான்ஷியஸ் பிடிக்குமே’ என்றவாறே வெடித்து சிரித்தாள்.

‘மந்திரிச்சு விட்டமாதிரி வீக்டேஸ் முழுக்க திரிவ, ஃப்ரைடே ஈவ்னிங் வரை புலம்பிட்டே இருப்ப. அதான் எரிச்சலா இருக்கும். கொஞ்சம் பாவமாவும் இருக்கும்’

‘ஆமா, எனக்கு கில்டி கான்ஷியஸ் தேவைப்படுது, அப்போதான் வீக் எண்ட்ல அந்த மைண்ட் செட்டோட குடிக்க முடியும். காரணமில்லாம குடிச்சா அது இன்னும் வேதனைய அதிகப்படுத்துது.’ நானும் சிரித்தேன்.


‘நல்லா ரீஸன் சொல்றடா’ என்றவள் என்னைத் தள்ளிவிட்டு மேலே படர்ந்தாள். “ஆக்சுவலா, பாட்டு நல்லா இருந்துச்சு, நல்லாவே பாடுற. ‘நதியிலே புதுப்புனல், கடலிலே கலந்தது...’ செம லைன்ல. ஐ லைக் தட், தமிழ் ரொம்ப லைவ்வான லேங்வேஜ்” என்றவாறே கழுத்தின் பக்கவாட்டில் வாய் வைத்து உறிஞ்சத் தொடங்கினாள். தொலைவில் ஒரு மின்னல் கிளைத்துப் படர, மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது.



Read more...

நிசப்தத்தில் கலத்தல்/ மழைக்கான காத்திருப்பு

>> Friday, July 30, 2010



*நிசப்தம் மேவிய
கடல்
கவிழ்ந்து மிதக்கும்
படகு


*தீராத வன்மத்தின்
இசை அளபெடைகளைத்
தொகுத்துக் கொண்டிருக்கிறேன்
எதனுள்ளும் அடங்காமல்
திமிறுகிறது
உன் காதல்


*என்னை
மிருகம் என்றழைக்கிறாய்
பேரன்பின்
பெயரால்
என்னைப் புசிக்கிறாய்.
உன் பெயெரென்ன சகி?


*மீண்டும் தித்திப்பாய்
இருக்கிறது
நுரைக்கும் மதுவும்
பொங்கும் இசையும்
பெருகும் காமமும்
ஒழுகும் குருதியும்
முத்தமிட்டுத் தீராத
உன் இதழ்களும்.


*வெடித்துவிழும்
காமத்தின்
விதையிலிருந்து
துளிர்க்கிறது
உனக்கான பிரத்தியேக
முத்தத்தின்
சுட்டுவிரல்.


*நிசப்தத்தின்
பேச்சொலியில்
எரிமலையின்
அமைதியெனத் தளும்பும்
கண்களில் இருந்து
பறக்கிறது
பெயர் தெரியாப் பறவை
நீ இருக்கும் திசை நோக்கி.


*மிதக்கும் தக்கையின்
ஏற்ற இறக்கத்தில்
துயில்கிறது
காலத்தின் நிசப்தம்^

^ ஏற்கனவே எழுதிய கவிதையிலிருந்து ஒரு வரி.



Read more...

இங்கே ஒரு காதல் கதை - 5

>> Thursday, April 22, 2010



பார்வை-1

9

நேற்றைய இரவில் என்றைக்குமான அழைப்பைவிட அவள் குரலில் மகிழ்ச்சி தளும்பியது.

‘ஹேய், கிளம்பி ரெடியா இரு, லெட்ஸ் கோ ஃபார் டான்ஸ்’

‘நானே உனக்கு கால் பண்ணலாம்னு நெனச்சேன்,போகலாம்’

ஒளிரும் நதியின் ஊடாக கைப்பிடித்து நடக்கத் தொடங்கி அதிரத்துவங்கிய இசையில் துடிக்கத் துடிக்க நடனமாடி வியர்த்திருந்தாள்.

இசை சற்றே ஓய்ந்த தருணத்தில் ‘ஒன் டகீலா, ஸ்ட்ரெய்ட் ஷாட்’ என்றவாறு அருகே வந்து அமர்ந்தவளிடம் ‘நேற்றும் கனவில் வந்து இம்சித்த நீலவண்ணச் சிறகு தேவதை நீதானா?’ என்றேன்.

தனிமையின் நீண்ட சுவடுகளை அடையாளமாய்க் கொண்ட என் அவல வாழ்வின் வெளிப்படுத்தலும், அன்பிற்கு ஏங்கும் உச்ச பரிதவிப்பிலுமாய் அவள் கைகளைப் பற்றிக்கொண்டேன். நெகிழ்வின் கைப்பற்றல்களை மென்மையாய் விடுவித்துக்கொண்டவள், பரிதாபமான பார்வையோடு சொன்னாள் ‘ப்ளீஸ்,குழப்பிக்காதடா!’


"மனதைப்பிளக்கும்
அரூப இசையுடன் நெடும்பயணத்தின்
மைல்கல்லில்
அமர்ந்திருக்கிறாள்
சிட்டுக்குருவிகள் பறந்துதிரியும்
இசைக்குறிப்புகளுக்கு சொந்தக்காரி"



Read more...

இங்கே ஒரு காதல் கதை - 4

>> Wednesday, April 21, 2010



7

‘இல்லடா,இது சரியா வரும்ணு தோணலை. விட்ரலாம்’

‘விட்ரலாம்னா... புரியல’

‘விட்ரலாம்னா... விட்ரலாம். அவ்வளவுதான்’

‘..............’

‘முறைக்காத. நிறைய பிரச்சினை வரும், ரெண்டு ஃபேமிலியும் அதிகமான இழப்பை சந்திக்கும்’

‘சும்மா அளக்காத. இத்தன நாள் இது உனக்கு தெரியாதா? உங்கப்பன் நல்லா அழகா, படிச்ச, வசதியான மாப்பிள்ளை பார்த்துருப்பான், அதான?’

‘எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாத’

‘ஏய், நிறுத்துடி...நான் உனக்காக கொச்சின் இன்ஸ்டிட்யூட் M.tech சீட்டை வேணாம்னு சொன்னவன்’

‘நானா உன்னப் போக வேணாம்னு சொன்னேன்’

‘அன்னிக்கு நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணலை? உன்ன ஒரு நாள் பாக்காட்டியும் செத்துருவேன்னு சொல்லலை?’

‘இல்ல, நான் அழலை... அப்படி சொல்லவும் இல்லை ’

‘ங்கோத்தா... பொய் சொல்றியே வெக்கமாயில்லை’

‘ஏய்ய்... மரியாதையா பேசு’

‘மூணு வருசம் காதலிச்சவன்கிட்டயே இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு கூலா சொல்ற... உனக்கென்னடி மரியாதை?’

‘லவ் பண்ணா? கல்யாணம் பண்ணிக்கன்னு சட்டம் சொல்லுதா?’

‘ஓ, சட்டத்தக் கேட்டுதான் மேடம் லவ் பண்ணீங்களா?’

‘என்ன பண்ணனும்கிற இப்போ?’

‘என்னைத் தவிர நீ யாரையும் கல்யாணம் செஞ்சுக்கக்கூடாது’

‘அத சொல்றதுக்கு நீ யாரு?’

‘என்னடி சொன்ன?’

‘இனிமேல், அடி புடின்ன... போலீஸ்ல ஈவ் டீசிங் கம்ளைண்ட் கொடுத்துருவேன்’

8

‘நான் அவன எப்டிலாம் லவ் பண்ணேன் தெரியுமா?’

‘புலம்புறத நிறுத்துறியா?’

‘இல்லடா, என்கிட்ட என்ன குறை கண்டான் அவன்... எப்படி இன்னொருத்திய..சே, நெனைக்கவே கஷ்டமா இருக்குடா’

‘ம்..ம்ம்..’

‘வாய் விட்டுக் கத்தி அழணும் போல இருக்குடா’

‘சரி, அழு’

‘உடனே என்னைய கோழைன்னு நெனைக்காத.... நான் அழுவுறனா?’

‘கண்ல இருந்து தண்ணி வந்தா அதை அப்படி சொல்றதுதான் வழக்கம்’

‘முடியலடா, அடக்க நெனைக்கிறேன், அடக்கிக்க முடியலை’

‘சரி...சரி.. இங்க பார்... என்னயப் பார்’

‘உன் தோள்ல சாஞ்சுக்குட்டா நீ என்னை தப்பா நெனப்பியா? சாஞ்சுக்குறேண்டா ப்ளீஸ்’

‘......’
‘.....’
‘ஏய்ய்ய்... ஏண்டா கன்னத்துல முத்தம் கொடுத்த?’

‘நீ அழறப்போ ரொம்ப அழகா இருக்க... அதான்’

‘அப்படியா?! அப்புறம் ஏண்டா அவன்... இன்னொருத்திய..?’

‘ப்ச், ப்ளீஸ்... வேணாமே’

‘ம், சரி. வேணாம்... நாம இப்படி கட்டிப்புடிச்சுட்டே இருந்துடலாமாடா?’

‘ம்... இருந்துடலாம்.’



Read more...

இங்கே ஒரு காதல் கதை - 3

>> Sunday, April 18, 2010



5

“மழையின் மீதான
பெருவிருப்புகளை
மீட்டெடுக்கிறது
இந்த காதல்
உன் கூந்தல் இழைபற்றி
பறந்து கருவானில் படரும் வேட்கை...”

‘ஏய் நிறுத்து..ஹோல்ட் ஆன்...ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் மேன்’
‘என்ன ஆச்சு?’
‘உனக்கு என்ன வேணும்? ஏன் இப்படி கவிதைன்ற பேர்ல மொக்கை போட்ற?’
‘ஹூம், ஏன் பிடிக்கலையா?’
‘இந்த காதல் - இல்ல அது. க் விட்டுட்ட... ‘
‘புத்திசாலி பொண்ண லவ் பண்ணா இதான் பிரச்சினை’
‘கண்டிப்பா. லவ் பண்றதுன்னு முடிவெடுத்தப்பவே நீ முட்டாளாயிட்ட. அப்புறம் என்ன புதுசா கவலைப்படுற?’
‘உன்கிட்ட நான் முட்டாளாவே இருந்துட்டுப்போறேன்’
‘நீ ஏன் என்கிட்ட இவ்ளோ சப்மிஸிவா போகணும். அடிமை மாதிரி இருக்காத, இயல்பா இரு’
‘அடிமைதான் - உன் அன்புக்கு’
‘இப்படி வசனம் பேசுறத நிறுத்தமாட்டியா? எல்லா முட்டாளும் அடிமையாகிறதில்லை... எல்லா அடிமையும் முட்டாளும் இல்லை’

‘ப்ளீஸ், இந்த வியாக்யானத்தை நிறுத்து’
‘சரி, நிறுத்திட்டேன். வா காதலிக்கலாம்’

6

‘ஏம்பா, இவ்ளோ குளிரா இருக்கு?’
‘ஏசி ஹோட்டல்னா அப்படித்தான் இருக்கும்’
‘நல்லாயிருக்குல்ல’
‘ம்.ம்ம்’
‘ஏம்பா ஒரு மாதிரி இருக்கீங்க?’
‘அதெல்லாம் ஒன்னுமில்லை. என்ன சாப்பிடுற சொல்லு’
‘நீயே சொல்லுப்பா’
‘நீதான இங்க வரணும்னு ஆசைப்பட்ட. நீயே சொல்லு’
‘கோவமா?’
‘அப்டிலாம் இல்ல. சீக்கிரம் ஆடர் கொடு’
‘ம், சரி’
‘எதுன்னாலும்100 ரூபாய்க்குள்ள முடியுற மாதிரி சொல்லு’
‘ம், சரி... என்ன எதுவுமே 45 ரூபாய்க்கு குறைச்சலா இல்ல?’
‘நீதானடி நேத்து குதிச்ச, இங்க திங்க வரணும்னு. இப்ப நொய் நொய்னு கேள்வி கேக்குற?’
‘இல்லப்பா. எனக்கு இவ்ளோ ஜாஸ்தியா இருக்கும்னு தெரியாது’
‘ஹும்ம்ம்...சரி விடு, எனக்கு எதும் வேணாம். நீ நல்லா சாப்பிடு’
‘இல்லப்பா, வாங்க போலாம். சாப்பிட்டா ரெண்டு பேரும் சாப்பிடணும். இல்லாட்டி வேணாம்.’
‘அடி லூசு, கோவிச்சுக்கிட்டியா?’
‘சே, அதெல்லாமில்ல.’
‘சரி, சாப்பிடலாம். ரெண்டு தோசை சொல்லவா?’
‘ம், சொல்லுங்க’
‘வெளில ஜாதிப்பூ விக்கிறாங்க பார். போறப்போ வாங்கிக்கலாம். ம்?’
‘ம், சரி. ரெண்டு முழம்’.



Read more...

இங்கே ஒரு காதல் கதை - 2

>> Friday, April 16, 2010



3

‘இடுப்ப ஆட்டாத’

‘ஏய்... நேரா பாரு. பேலன்ஸ் பண்ணு’

‘’’ப்ச்ச், சொன்னா புரியாதா? நேரா பாரு’

‘சரிடா, திட்டாத’

‘பாவாடை ஒன்னுதான் குறச்சல். ஏத்திக்கட்டிக்கோ’

‘கெண்டக்கால் தெரிய ஏத்திக்கட்டிருக்கிறத ஆயா பாத்தா சூடு வச்சுடும்’

‘வைக்கும், வைக்கும்... வைக்கிறவரைக்கும் நான் வேடிக்கை பார்த்துட்டு இருப்பேன்னு நெனச்சியா?’

‘பின்ன, என்ன பண்ணுவியாம்?’

‘அதப்பண்றப்போ சொல்றேன். இப்போ நீ இடுப்ப ஆட்டாம, நேரா பார்த்து ஓட்டு’

‘ம்ம். நீயும் கொஞ்சம் சீட்டை மட்டும் பிடியேண்டா’

‘ஏன்? என்னாச்சு?’

‘இடுப்புல கை வச்சா கூச்சமா இருக்கு’

‘ஏன் அப்படி?’

‘போடா மக்கு... அது அப்டித்தான்’

4

‘இப்போ என்னடி? உனக்கு என்ன பிரச்சினை?’

‘கொஞ்சம் பாருடா... நான் பாவமில்லையா?’

‘இந்த உலகத்துல மனுசனா பிறந்த எல்லாருமே பாவந்தான்’

‘நான் என்ன கேக்குறேன்... நீ என்ன சொல்றடா? என்னய கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேல்ல?’

‘அப்போ சொன்னேன். இல்லைனு சொல்லலையே. ஆனா சூழ்நிலை மாறிடுச்சு. நிறைய பிரச்சினை இருக்கு எனக்கு. இருக்குற வேலைய காப்பாத்திக்க முடியுமான்னு தெரியல. இதுக்கு நடுவுல தம்பி படிப்பு, அக்கா கல்யாணம் அது இதுன்னு’

‘புளிச்சுப்போன காரணம் சொல்ற. ஏன், என்னயக் காதலிக்கிறப்போ தெரியாதா? உனக்கு ஒரு அக்கா இருக்குறதும், தம்பி படிக்கணும்கிறதும்?’

‘நீ விதண்டவாதம் பேசிட்ருக்க. கெளம்பு. அப்புறமா பாக்கலாம்’

‘அப்புறமா என்ன பாக்கிறதுக்கு இருக்கு?, வேணாண்டா, தாங்கமாட்டேன். செத்துப் போயிருவேன்டா’

‘அதச் செய்யேன்டி முதல்ல. நானாவது நிம்மதியா இருப்பேன்’



Read more...

இங்கே ஒரு காதல் கதை - 1

>> Thursday, April 15, 2010



1

'போகாத, நில்லு'

'எதுக்கு?'

'நான் உன்ன அளவுக்கு அதிகமா காதலிக்கிறேன், புரிஞ்சுக்க'

'அது என்ன, காதல்ல அளவு அதிகமான காதல், குறைவான காதல்னுலாம் இருக்கா என்ன? டேய், காதலிச்சா முழுசா காதலிக்கணும். வெறுத்தாலும் முழுசா வெறுக்கணும். மனசுக்குள்ள கட்டம் போட்டு வச்சுக்கிட்டு போலியா வாழ முடியாது. நீ இன்னும் மெச்சூர் ஆகல. டயலாக் விடாம போய்டு'

'இல்ல, நீ இல்லாட்டி செத்துருவேன்'

'செத்துடு'.

2

'என்னடா, அப்படி பாக்குற?'

'இல்ல, சேலை கட்டிருக்கப்ப இவ்வளவு அழகா இருக்கியே, சேலை கட்டாம..'

'ச்சீய், எப்போ பாரு.. உனக்கு இந்தப் பேச்சுதானா?'

'இல்லம்மா, சேலை கட்டாம-சுரிதார்ல எப்படி இருப்பன்னு சொல்ல வந்தேன்'

'பொறுக்கி, உன்ன எனக்குத் தெரியாது. என்ன பக்கத்துல வச்சுக்கிட்டே ஒருத்திய விடமாட்டே'

'அழகெல்லாம் ரசிக்கப்படணும் கண்ணம்மா'

'ஓ! என்னய யாராவது ரசிச்சா?'

'சே! என் அளவுக்கு மத்தவங்க ரசனையும் மோசமா இருக்காதுன்னு நம்புறேன்...'

'ராஸ்கல்... உன்ன...என்ன பண்றேன் பாரு'

'ஏய், நெஞ்சுல குத்தாதடி... மாரடைச்சு செத்துட கித்திடப் போறேன்'

'செத்துடு'.



Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP