திற - குறும்படத் திரையிடல் & திறனாய்வு - வாழ்த்துகள் பிரின்சு!

>> Tuesday, December 22, 2009


கடந்த 17ஆம் தேதி மாலை ருஷ்ய கலாச்சார மையத்தில் நண்பன் பிரின்சு என்னாரெசு பெரியாரின் “திற” குறும்படம் திரையிடல் மற்றும் திறனாய்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் திரு.வீரமணி, திரைப்பட இயக்குனர் திரு S.P. ஜனநாதன், திரு. ‘நக்கீரன்' கோபால், திரு. சுப.வீ, வழக்குரைஞர் அருள்மொழி மற்றும் பலர் கலந்துகொண்டு குறும்படத்தைத் திறனாய்வு செய்தனர். அவர்கள் பேசியதை பதிவாக்கினால் 3 அல்லது 4 பதிவாகப்போடலாம்! ஆதலால் இங்கே, ஒரு நண்பனாய் மட்டுமே கலந்துகொண்ட என் பார்வையும், சில நினைவுப்பகிர்தல்களும் மட்டும்!

“திற” குறும்படத் திரையிடல் நிகழ்வில் கலந்துகொண்டது எனக்கு மிக நெகிழ்வான ஒரு தருணம். அரங்கினுள் இருந்தபோது எங்களது கல்லூரிக்காலத்தை - எல்லோருக்கும் போலவே வசந்தகாலமாய் இருந்த பருவத்தை - இனி என்றுமே திரும்பாத நாட்களை நினைவில் உணரத் தொடங்கினேன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ‘Intercollege competition’ல் 120 கல்லூரிகளுடன் போட்டியிட்டு மூன்று கோப்பைகளை வென்று ‘Zone D Champions’ என்கிற அடையாளத்தோடு தல்லாகுளம் பகுதியை அலறவிட்ட அன்று என்ன உணர்வு இருந்ததோ அதே உணர்வில் இன்றும் இருந்தேன். கல்லூரி சரித்திரத்திலேயே கிட்டியிராத அந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த எங்கள் மூவரையும் பார்த்து “இந்த காலெஜோட தூண்கள்டா நீங்க, எழுதி வச்சுக்கங்க, நீங்க மூணு பேரும் மிகப்பெரிய இடத்துக்கு வருவீங்க. அன்னைக்கும் இதே வார்த்தையை நான் திரும்பவும் சொல்வேன்” என்று உணர்ச்சி மேலிட்டு கட்டிக்கொண்ட தமிழாசான் முனைவர். முருகேசன் கண்களில் நிழலாடினார். மூவரில் குரு- icici வங்கியின் 24 x 7 ஊழியனாயும், நான் கடலியலில் பவளப்பாறை ஆராய்ச்சியாளனாய் மாறி கடலுக்குள் குதித்துக்கொண்டும் இருக்கிறோம். முருகேசன் அய்யா ஆசைப்பட்டது போல பிரின்சு மட்டுமே இன்று கலைத்துறையில் ஒரு இடத்திற்கு வந்திருக்கிறான்.

திறனாய்வின் போது பிரின்சுக்குக் கிடைத்த ஒவ்வொரு பாராட்டுக்கும் அவனும், அவனது படைப்பும் தகுதியானவையே! மறைந்த பாகிஸ்தானிய எழுத்தாளர் சதத் ஹஸன் மாண்டோ அவர்களின் “கோல் தோ”(Open it) சிறுகதையை எடுத்துக்கொண்டு அதற்கு திரைக்கதை அமைக்கும் சவாலான வேலையை மிக நேர்த்தியாக செய்துள்ளான். இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக் கலவரத்தின்போது தன் தந்தையைப் பிரிந்துவிட்ட மகளுக்கு ஏற்படும் அவலமும், கதை நெடுக தன் மகளைத் தேடித்திரியும் தந்தையும்தான் கதைக்கரு. இதை மாண்டோ சிறுகதையில் நேர்த்திக்காட்டிய விதம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. ஒவ்வொரு கலவரத்தின் போதும், போரின் போதும் பெண்கள் மீது செலுத்தப்படும் வன்முறை உலகெங்கும் பொதுவானது, அதற்கு சாதி, மத, இன ரீதியிலான அடையாளங்கள் கிடையாது என முகத்தில் அறைந்து சொல்லும் கதை. அதிலும் கதையின் முடிவு நம்மை உறையவைக்கக்கூடியது.

‘கோல் தோ’ சிறுகதையின் மூலம் மட்டுமின்றி மாண்டோ படைப்புகள் மூலமாக தங்கள் முகமூடிகள் கிழிவதைச் சகியாத மதவாதிகளும், பிற்போக்குவாதிகளும் மாண்டோ மீது செலுத்திய அடக்குமுறை கொடுமையானது. இன்று அந்தப் பிற்போக்குவாதிகளில் யாரும் உயிரோடிருக்க வாய்ப்பில்லை. ஆனால் தன் படைப்புகளின் வழியே மனிதநேயத்துக்கும், அன்புக்கும் ஆதரவாக; வன்முறைக்கும், அடக்குமுறைக்கும் எதிராக தீராத பிரகடனங்களைப் பரப்பியபடி இருக்கும் மாண்டோ, பிரின்சு போன்ற அடுத்த தலைமுறை படைப்பாளிகள் மூலம் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக் கலவரத்தின் பின்னணியில் நடக்கும் கதையை பிரின்சு குஜராத் - கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து நடந்த கலவரப் பின்புலத்தில் நடப்பதாகக் காட்டியுள்ளான். அந்த சிறுகதை எழுதப்பட்டு 50 வருடங்கள் கடந்தபின்பும் அப்படியே இன்றும் பொருந்திப் போவதுதான் வரலாற்று சோகம். “கிழிக்கப்படும் யோனிகளின் சப்தம் தூங்கும் கடவுளர்களை எழுப்புவதற்கான இசை” என்ற அய்யனாரின் வரிகள் படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது நினைவுக்கு வந்து குற்றவுணர்வைக் கூட்டியது.

மாற்றுத் திறனாளர்களுக்கான ஒரு திரைப்படத்தை இயக்கிவரும் இயக்குனர் பாத்திமாபீவி அழுதுகொண்டே இக்குறும்படம் குறித்து தன் கருத்துக்களை பதிவு செய்த வேறொரு அரங்கில் நானும் இருந்தேன். சூலாயுதங்களைக் கொண்டு வயிற்றைக் கிழித்து கருவை எடுத்துத் தீயிலிட்ட கொடூரத்தை அவர் உடல் நடுங்கியபடி விவரித்தபோதும், நேர்மையான அணுகுமுறைக்கு நன்றி என்று சொல்லியபோதும், இப்படம் அவர் மனதை எந்தளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது.

தனது D.F.Tech ப்ராஜெக்ட் ஆக இத்தகைய ஒரு கதையை தேர்வு செய்யவே ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும். அதுவும் கொடுக்கப்பட்ட மிகக்குறைந்த வசதிகளை வைத்துக்கொண்டு 4 நாட்களில் மொத்த ஷெட்யூலையும் முடித்து சிறந்த ஒரு குறும்படத்தைக் கொடுத்திருப்பது உன் மீதான நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் அதிகப்படுத்துகிறது நண்பா! சராசரியான ஒன்றிரண்டு க்ளிஷேக்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் 14 நிமிடங்களில் ஒரு பார்வையாளனுக்கு இப்படம் உண்டாக்கும் மனக்குமைச்சல் அதிகம். நிச்சயம் ஒரு சமூகமாற்றத்தை உண்டாக்கும் இக்குறும்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்காக தமிழக அரசின் விருது என்பது குறைந்த மதிப்பீடே. இயக்கம் உட்பட மற்ற துறைகளிலும் இக்குறும்படத்திற்கு சிறப்பான ஒரு இடம் தரப்பட்டிருக்க வேண்டும்.

நீ சிகரங்கள் தொடவேண்டும் நண்பா... வாழ்த்து சொல்லிக்கொள்வது நமக்குள் வழக்கமில்லை... எனினும் என் உணர்வுகளைப் பகிரவேண்டும் எனத் தோன்றியதால் இந்தப் பதிவு.Read more...

சிதைவுகளின் நிழல்

>> Monday, December 14, 2009ஒரே கத்தியில் இருந்துதான்
வெளிக்கிளம்புகின்றன
போருக்கான பறையும்
சமாதானத்துக்கான புறாவும்
சம்போகிக்கும்போது பிறப்பு நிச்சயமில்லை
பிறந்துவிட்டால் சாவு நிச்சயம்
சித்தர்மொழி போதையில் பீறிடுகிறது
இருவர் அமர்ந்து ஆடும் ஆட்டங்கள்
சுவாரசியமற்றவை- பெரும் களமும்
கூட்டமும் தேவைப்படுகிறது
வன்முறை வெறியாட்டத்திற்கு
இருப்பதில் எளிதானது
வழக்கொழிந்த மொழியில் கவிதை எழுதுவது
மற்றும் காதலிப்பது
பின்னர் ஒரு கொலையை
சிரித்துக்கொண்டே நிகழ்த்துவது

(எழுதியது-2007ல்)Read more...

தளத்தின் பெயர் மாற்றம்அன்பு நண்பர்களே, 'நெய்தல்' என்ற பெயரில் இயங்கி வந்த எனது இவ்வலைப்பூ இனி
'ஷீலாதமிழ்செல்வி' என்ற பெயரில் தொடர்ந்து இயங்கும் என உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். பெயர் மாற்றத்திற்கு பெரிதாய் எதுவும் காரணமில்லை. வாழ்வே இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாய் சென்று கொண்டிருப்பதுபோன்ற ஒரு தோற்றமாயை..! :) அதனால்தான். (நம்புங்கள்! நியூமராலஜி எல்லாம் இல்லை!)

சில நேரங்களில் வாழ்க்கைக்கான அல்லது வாழ்வதற்கான அல்லது தொடர் இயக்கத்திற்கென தேவைப்படும் கச்சாப் பொருட்கள் இவ்வகையிலான சிறு சிறு மாற்றங்களிலேயே பொதிந்து இருப்பதாய் நம்புகிறவன் நான். எப்போதாவதுதான் எழுதுவது, பதிவிடுவதோ ஆறு மாதங்களுக்கொரு முறை! ஆயினும் எப்போது பதிவிட்டாலும் பின்னூட்டமிட்டோ அல்லது தனி மடலிலோ ஊக்கமளித்து வரும் அனைத்து நண்பர்களின் தொடர் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். நன்றி!Read more...

வசுமதியும் ஒரு மழை நேரத்து மாலை நேரமும்- கமலநாபன்

>> Friday, December 11, 2009

இச்சிறுகதை 20ஆம் நூற்றாண்டின் சிறந்த நூறு சிறுகதைகளுள்(தமிழ்) ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு செண்பகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதே சிறுகதை ஆசிரியரின் "ஒரு மிதமிஞ்சிய நாட்குறிப்பு" சிறுகதைத் தொகுதியிலும் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கதை எழுதியவருக்கும் எங்களுக்குமான உறவு குறித்து பிறிதொரு பதிவில்- விரிவாய்.வசுமதியும் ஒரு மழை நேரத்து மாலை நேரமும்
-கமலநாபன்

கோடையின் அந்த திடீர் மழையை வசுமதி எதிர்பார்க்கவில்லைதான். எதிர்பார்த்திருந்தாலும் குடையை எடுத்துக்கொண்டு வந்திருக்கமாட்டாள். ஏனெனில் அவளுக்கென்று தனியாக ஒரு குடை இல்லை. இந்த மாலை நேரத்தையும் தாண்டிய முன்னிரவில் ஒரு மரணத்தைப்போல முன்னறிவிப்பின்றி இந்த மழை வந்தது தொந்தரவாய்தான் இருந்தது. கடுமையான புழுக்கமும், காற்றின்மையும், கிழக்கத்திய மின்னல்களும் ஒரு நிச்சய மழைக்கு மாலையிலேயே கட்டியம் கூறியிருந்தும் கூட வசுமதியால் இந்த மழையைத் தவிர்த்துக் கொள்ள முடியவில்லை.

இரண்டாம் நம்பருக்காகக் காத்துக் கொண்டிருந்தபோதே தூறல் விழுவதற்கான ‘கவுண்ட்டெளன்’ தொடங்கி, கடமையாய் சிதறிக்கிடந்த, பயணிகளைப் பின்னும் பயம் காட்டி, ஒடுங்கவைத்தது. ஒரு அவசரமான புறப்பாட்டுக்குத் தயாராய் வந்துநின்ற பஸ்சில் இறங்குகின்ற கும்பலை, மோதிப், பிதுங்கி, ஏறி, இடம் பிடித்து வசுமதி உட்கார்ந்த இரண்டாம் நிமிடம் வானைப் பிளந்துகொண்டு நீரம்புவீச்சுகள் தொடங்கிவிட்டன. காரின் ஷட்டர்களை இழுத்து மூடிக்கொண்டதும், நெருக்கமாய் நிறைந்துபோன பஸ்சின் உட்புறமிருந்து வெளிப்பக்கம் சரியாகத்தெரியாமல் போனதும் மழையின் உக்கிரத்தை வசுமதி உணரமுடியாமல் செய்துவிட்டன.

பஸ் சக்கரங்கள் சாலையின் பள்ள நீர்களில் பதிந்து அவற்றை வெளியேற்றிக் கடாசுகிற சப்தமும், தாள கதியுடன் பஸ்மீது பொழியும் ஒலியும் ‘நல்ல மழை’ என்ற விமர்சனங்களைப் பெற்றுக்கொண்டிருந்தது. ஒவ்வொரு நிறுத்தத்தில் பஸ் நின்றுவிட்டுப் புறப்படும்போதும் பாய்ந்து ஏறுகிற பயணிகள் முழுக்க நனைந்து மற்ற பயணிகளின் காட்சிப்பொருளாய் மாறிபோய்க் கொண்டிருப்பது வசுமதிக்கு கவலையைத் தந்தது.

“சே... ஒரு குடை இல்லாதது எவ்வளவு கஷ்டம். இந்த மாசமாவது ஒரு குடை வாங்கிரணும்” அவளும் ஒவ்வொரு மழைக்காலம் வந்து போகும்போதும், தவறாது இந்த நினைப்பையும் நினைத்து விடுகிறாள். ஆனால் காரியத்தில் இறங்க முடிவதில்லை. ஒருமுறை துணிந்து சம்பளம் வாங்கிய அன்றே “இன்னைக்கு எப்படியும் குடை வாங்கிரனும்” என்ற உறுதியோடு அதற்கான பணத்தையும் தனியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். தனியாகக் குடைக் கடைக்குச் சென்றுவர என்னவோ போல இருந்தது.. அதனால் அந்த வாரத்து சனிக்கிழமை மாலையில் உடன் பணிபுரியும் செண்பகத்தையும் அழைத்துக்கொண்டு வந்து குடை வாங்கிவிடத் தீர்மானித்திருந்தாள். செண்பகமும் சம்மதித்திருந்தாள். ஆனால் பாவம் அந்த வாரத்தில் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய், சீனி இவைகளுக்காக ரேஷன் கடைக்குப் போய் சேர்ந்துவிட்டது அந்தப் பணம்.

அவளுக்கு வருகிற வருமானம் ரொம்பச் சொற்பம். நகரத்தைத் தொட்டுக் கொண்டிருந்த கிராமம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த ஒரு பிஸ்கட் கம்பெனி ஒன்றில் வசுமதிக்கு வேலை. வீட்டிலிருந்து புறப்பட்டால் இரண்டு பஸ்கள் மாறி வேலைபார்க்கும் இடத்திற்குப் போக வேண்டும். இந்த வேலையும் நிர்ப்பந்தங்களின் பேரில், இத்தனை தூரம் தள்ளி வந்து பார்க்க நேர்ந்திருக்கிறது. அவள் அப்பாவின் சம்பளத்தைக்கொண்டு, அவளது அம்மா, தனது தம்பி, தங்கைகளின் அன்றாட சாப்பாட்டுக் கடமைகளையும் கழித்து வசுமதிக்கு ஒரு கல்யாணமும் செய்துவைக்க முடியாது என்பதைச் சத்தியம் செய்து சொல்லலாம். பத்தாம் வகுப்பு பாஸ் செய்திருக்கிற வசுமதி, இந்த வயதில் இப்படி வேலைக்குப் போகிற எத்தனையோ பேர்களின் கூட்டத்தில் ஒருத்தியானாள்.
“இந்தக் காலத்துல இதெல்லாம் சகஜம்... சொல்லப்போனா அதுக சம்பாத்தியம் வந்துதான் கொஞ்சமாவது அனுசரிச்சுப்போக முடியுது”
அப்பா சமாதானப்படுத்திக் கொண்டார்.

வயதுக்கு வந்த மகள் வேலைக்குப் போவது வயிற்றில் பயம் கவ்வச் செய்கிறது என்றாலும் மாதாமாதம் மகள் கொண்டுவந்து தருகிற பணம்தான் செலவுகளை ஓரளவு சமாளிக்க உதவுகிறது என்பதால் பேசாமல் இருந்து வந்தாள் அவளது தாய்.

“கல்யாணத்துக்காகப் பணம் சேர்த்துக் கொள்வதற்காகத்தானே வேலைக்குப் போறோம்... அப்பாவுக்குப் பாரமில்லாம இருக்கணும்” என்பது வசுமதியின் எண்ணம். ஆனால் வேலைக்குப் போய் வந்த இந்த ஒரு வருடத்தில் கல்யாணத்துக்கென்று ஒரு பைசா கூட அவளால் சேமிக்கமுடிவதில்லை. மாதந்தோறும் வாங்குகிற சம்பளத்திற்கு தயாராய் செலவினங்கள் எப்போதும் பட்டியலில் இருக்கும். செலவெல்லாம் போக மீந்து போகிற அம்சம் என்றைக்கும் தலை காட்டியதில்லை. வலுக்கட்டாயமாய் இவளும் போஸ்ட் ஆபிசில் ஒரு சேமிப்புக் கணக்கைத் தொடங்கியிருந்தாள். சேமிப்பு திருமணத்துக்கானது, என்று பெயரளவுக்கு இருந்தாலும் இடையிடையே ஏற்படுகிற ஆஸ்பத்திரி செலவுகளும், தம்பி தங்கைகளின் படிப்புச் செலவுகளும், தலைதுக்கி அவளது சேமிப்பைத் தாக்கி சேதப்படுத்திவிடுகின்றன. இதில் ஒரு குடை வாங்குவதென்பது நிச்சயம் தூரமானதுதான்.

டிரைவருக்கு எதிரில் கண்ணாடியில் வழியும் நீர்ப்பிரவாகத்தை வைப்பர்கள் மறுத்து மறுத்து தள்ளும் இடைவெளியில், நீர்ப் பூக்களைத் தார் ரோட்டில் கொட்டிச் சிதறியும், கட்டிட முகப்புகளில் நீர்த்தோரணம் கட்டிக்கொண்டும் பெய்கிற மழையை வெறித்தாள் வசுமதி. பஸ் வைகை ஆற்றைக் கடந்து மழைக்குளியலை அனுபவிக்கும் பெரிய சிலையைக் கடந்து தண்ணீரை சாலையோரங்களுக்கு வாரி அடித்தபடி சென்று நின்றது. லேசாக ஷட்டரை உயர்த்தி, இடுக்கினூடே எந்த இடம் எனப் பார்த்துக்கொண்டாள். தான் இறங்க வேண்டிய இடம் வர இன்னும் பத்து நிமிடங்கள் ஆகும், என்றாலும் அதற்குள் ஓய்வதற்கான அறிகுறியை அந்தக் கோடைமழை காட்டவில்லை என்பதையும் உணர்ந்தாள்.

மனதுக்குள் துளிர்க்கத் தொடங்கிய பதட்டததை மறைத்துக்கொள்ள மறுபடியும் டிரைவரின் முகப்புக்கண்ணாடி வழியே வெளியே பார்த்தாள். தன் குடும்பத்தின் இரவுச்சாப்பாட்டுக்காக அந்தக் கடும் மழையிலும் ரிக்ஷா இழுக்கிற அந்த மனிதனைக் கண்டபோது மனம் கனத்தது.
‘போய்ச் சேருவதற்குள் மழை நின்றுவிட்டால் பிரச்சனையில்லை.’

அவள் கவலையோடு காத்திருந்தாள். பஸ் அவள் இறங்கவேண்டிய நிறுத்தத்தில் நின்றபோதும் மழை கொஞ்சம்கூடக் குறையாமல் இருந்ததைப் பார்த்துக்கொண்டே தயங்கியபடி சகபிரயாணிகளைப் பின் தொடர்ந்து இறங்கினாள். கையில் வைத்திருக்கிற கைப்பையைத் தலைக்கு மேல் கவிழ்த்துக்கொண்டு விருட்டென்று இறங்கிய சுருக்கில் எதிரில் தென்பட்ட ஒரு மிட்டாய்க் கடையின் சார்பில் ஏற்கனவே மழைக்காக ஒண்டிக் கொண்டிருந்தவர்களோடு தானும் போய் ஒட்டிக்கொண்டாள். அதற்குள் அவள், தலை, முகம், தோள், முன்கைகள் இவையெல்லாம் மழைநீர் பரவி, நெற்றிப்பொட்டை லேசாகக் கரைத்துக்கொண்டு மூக்கின்மீது வழிந்தது.

“சே, சரியான மழையில் வந்து மாட்டிக்கொண்டோமே,” என்று மனதுக்குள் கவலைப் பட்டுக்கொண்டே தலையிலும், முகத்திலும் வழிகிற நீரை நனையாமல் வைத்திருக்கிற கைக்குட்டையால் கவனமாகத் துடைத்துக்கொண்டாள். அவளுக்கு இவ்வாறு தன் முகத்தில் தண்ணீர் விழுந்து, மாலையில் லேசாக ஒற்றியிருந்த பவுடர் அழிந்து ஒப்பனை கலைந்து போனதும், தன் ரவிக்கை தோள்புறம் முழுவதுமாக நனைந்துபோனதும் சங்கடத்தைத் தந்தது. சுற்றிலும் நிற்கிற பல ஆண்களும், இவளையும் இவள் கூட நிற்கிற மற்றப் பெண்களையும் இவர்களின் மழையில் நனைந்த கோலம் தந்த சற்று மிகையான கவர்ச்சியினால் ஈர்க்கப்பட்டு வெறித்தார்கள். இவளுக்கு மிகவும் வெட்கமாகப் போய், சற்றுதூக்கிப் பிடித்திருந்த முன்புறச்சேலை முனையை நேர்படுத்தி கால்கள் தெரியாமல் செய்துகொண்டாள். தோளை மறைக்க சேலை முகப்பால் மூடிக்கொண்டாள். சற்றுப் பாதுகாப்பாக உணர்ந்தாள்.

கையில் கைக்கடிகாரம் இல்லாததால் சுற்றும் முற்றும் பார்த்து, பக்கத்தில் தெரிந்த சைக்கிள் கடையின் மேஜையின்மேல் இருந்த கடிகாரத்தில் மணி பார்த்து ‘ஏழு’ என்று அறிந்துகொண்டாள்.
“ஐயயோ, ஏழாச்சு போல இருக்கே... ரொம்பநேரமாச்சு... இப்படி மழை வரும்னு தெரிஞ்சா ஓவர்டைம் கூடப் பார்த்திருக்கவேணாம்...சே..” இப்படி சலித்துக்கொண்டாள் அவள்.

வழக்கமாக அவள் நான்கு மணிக்கு வேலை முடிந்ததும் புறப்பட்டு 5 மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிடுவது வழக்கம். சமீபகாலமாக அவள் வேலை பார்க்கிற அந்த பிஸ்கட் கம்பெனி அதிகமான உழைப்பை அவளிடமிருந்து எதிர்பார்க்கிறது. ஆறு மணி வரை ஓவர்டைம் செய்யவேண்டியிருந்தது. அப்படி அந்த இரண்டு மணிநேர அதிகபட்ச வேலை செய்ய மனம் விரும்பவில்லைதான். இருந்தாலும், இதனால் கிடைக்கிற உபரி வருமானத்துக்காகவாது அவள் அந்த ஓவர்டைம்களை ஏற்றுக்கொள்கிறாள். இன்னும் அதிகமான நேரம்கூட அவள் வேலை பார்க்கத்தயார். ஆனால் அந்த தொழிற்சாலை இருக்கும் பகுதியிலேயே குடியிருக்க முடிந்தால் அப்படிச்செய்திடுவாள். அவள் அப்பாவிற்கோ ஒரு வாடகைக் குடியிருப்பை அந்த இடத்தில் ஏற்படுத்திக்கொள்வது என்பதை நினைத்துக் கூடப்பார்க்கமுடியாது.

வசுமதிக்குத் திடீரென்று ஒரு எண்ணம் பிறந்தது. வீட்டிலிருக்கிற அவள் அம்மாவோ, அல்லது அவள் தம்பியோ ஒரு குடையுடன் அவளைத்தேடி வந்து பஸ் நிறுத்தத்தில் காத்திருப்பார்களோ என்று எதிர்பார்த்து சுற்றிலும் தேடிப்பார்த்தாள். அப்படி யாரும் நிற்காதது கண்டு அவள் மிகுந்த வருத்தமும் ஏமாற்றமும் அடைந்தாள். அப்படி இவளுக்காக அவள் தாயோ, தம்பியோ அல்லது அவள் தந்தையோ வந்து நின்று இவளை அழைத்துச்செல்ல வேண்டும் என்று இவள் மனம் எதிர்பார்த்திருந்தது. அதனால் ஏற்பட்ட ஏமாற்றம் சற்றுக்கோபத்தையும் தந்தது.

மணி இப்போது ஏழரை ஆகியிருந்தது. வானம் இருட்டுக்குள் ஒளிந்துகொண்டு நீரை வாரி இறைத்தது. மழையின் உக்கிரம் சற்றுக் குறைந்திருப்பதாகத் தெரிந்தது. ஆனால் உடன் நின்றுவிடும் சாத்தியம் தென்படவில்லை. அவள் அருகே நின்றிருந்த நாலைந்து பெண்களையும் சில இளைஞர்களையும், அவர்கள் வீட்டிலிருந்து யாராவது குடையுடன் வந்து அழைத்துச் சென்றுவிட்டார்கள். அந்தச்சிறிய கடையின் முன் மழைக்காக ஒதுங்கியவர்களில் பெண் என்று அவள் மட்டுமே நின்றிருந்தாள். அதற்கு அருகில் வேறு கடைகள் இல்லை. சற்றுத்தள்ளி இருந்த ஒரு கடையில் சில பெண்கள் ஒண்டி நிற்பதைக் கண்டாள். தற்போது நின்று கொண்டிருக்கும் கடையிலேயே தொடர்ந்து நின்றிருக்க அவளுக்குக் கூச்சமாகவும், அவமானமாகவும் இருந்தது. தன்னை மட்டும் குடையுடன் வந்து யாருமே அழைத்துச்செல்லாதது, அந்தச் சூழலில் தன் மதிப்பைக் குறைத்துவிட்டதாக உணர்ந்து அதனால் ஏற்பட்ட அவமானத்தினால் துடித்தாள். அவள் அந்த இடத்தை விட்டுச் சட்டென்று அகல எண்ணம் கொண்டு மழையில் இறங்கி இருபுறமும் மழைக்கு ஒதுங்கிக்கொண்டிருந்த மனித முகங்களையும் இவளுக்காகப் பரிதாபப்பட்டும், அவள் அவசியமில்லாமல் இப்படி அதிகப்பிரச்ங்கித்தனமாக மழையில் நனைந்து கொண்டே செல்வதுபற்றி விமர்சித்தும் பார்க்கிற கூட்டத்தையும் மனிதர்களையும் லட்சியம் செய்யாமல் தனது கையில் பிடித்திருந்த கைப்பையால் தலைக்குமேல் பெய்கிறமழையில் ஒரு பகுதியை மட்டும் மறைத்தபடி ‘விடு விடு’ என்று வீடு நோக்கி நடக்கத்தொடங்கினாள்.

அந்த பஸ் நிலையத்திலிருந்து அவளுடைய வீடு எட்டு முதல் பத்து நிமிட நடையிலிருந்தது. ரோட்டிலேயே அரை பர்லாங் தூரம் சென்று வலது பக்கம் திரும்பி, புதிதாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் உருவாகும் கட்டிடங்களைக் கொண்ட காலனியின் கடைசிப்பகுதியில்தான் இவள் குடியிருக்கும் தெருவும் இவளது வீடும் இருந்தன. இவள் ரோட்டில், தனியாக, முழுவதும் நனைந்து போய் முகத்திலிருந்து வழிகிற நீரை துடைத்துவிட்டபடியே நடந்து, அந்தப் பரந்த சாலையிலிருந்து காலனிக்குப் பிரிகிற கிளைச்சாலையில் அவள் திரும்புவதற்கும் மின் தடை ஏற்பட்டு ‘குப்’பென்று முழு இருட்டு சூழ்ந்துகொள்வதற்கும் சரியாக இருந்தது.

அதிர்ந்து போனாள் வசுமதி. மிகப்பயமாக உணர்ந்தாள். இப்படி ஒரு நாளும் அனுபவித்தறியாத பய உணர்ச்சியும், மிகையான கற்பனைகளும் அவளுக்கு மிகவும் பலவீனத்தைக் கொடுத்தன. அவள் ஒரு சிறு குழந்தையின் மனநிலைக்கு இறங்கிக் கொண்டிருந்தாள். பளீரிடுகிற மின்னலும், முனை மழுங்கிய ஊசிக்கும்பலாய் முகத்தில் விசிறியடிக்கிற மழையும் இன்னும் பயத்தையும் கவலையையும் தந்தன.

தனியாக மழைவிடுமுன் தான் இப்படி நடக்கத் துணிந்தது குறித்து விசனப்பட்டாள். திடீரென்று தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் இழந்துவிட்டு அம்மணத்தில் நிற்பதுபோல் பாதுகாப்பின்மையை உணர்ந்துகொண்டபோது அழுகையாய் வந்தது. நடையை எட்டி எட்டி வைக்கத்தொடங்கினாள். முன்புறத்துச் சேலையை, இருட்டு தந்த தைரியத்தில் முட்டுக்குக் கீழ்வரை தாராளாமாக உயர்த்திக்கொண்டாள்.

சற்றுதூரம் நேரே நடந்துபோய் இடதுபுறமாய்த் திரும்பி, அந்தப் புது வீடுகளைக் கடந்து வலதுபுறம் திரும்பினால் தெரியும் சிறிய வீடுகளும், குடிசைகளும் இருக்கும் பகுதியில்தான் அவள் குடியிருப்பு. அந்தக் குடியிருப்பில் அவர்களுக்கென்று இருந்த நிலத்தில் பல வருடங்களுக்கு முன் போடப்பட்டிருந்த மேற்புரம் ஓலை வேய்ந்திருந்த வீடுதான் அவர்கள் வீடு.

காற்று மிகவும் வேகமாக வீசுவது தெரிந்தது. வெறும் வெளியில் தன்மீது படர்ந்த காற்றின் வேகத்தை உணரமுடியாமல் போனாலும் சாலையின் ஓரத்தில் இருந்த தென்னை மரங்கள், பளீர் பளீர் என்று ஒளிர்கிற மின்னல் ஒளியில் தலைவிரித்தாடுவது காற்றின் உக்கிரத்தை உணர்த்தியது. காற்று உடல் மீது ஈரத்துணியை உரசுகிறபோதெல்லாம் சில்லிடுகிற குளிர் அவளை வெறுப்பின் எல்லைக்கே கொண்டு நிறுத்தியது.

இருட்டில் பாதை சரியாகத்தெரியவில்லை. நிறைய மழை நீர் சேர்ந்து தெருப்பள்ளங்கள் நீர் மூடியிட்டுக் கொண்டிருந்தன. வயல்களாய் இருந்த பூமியாதலால், களியும் வண்டலும் கலந்த சேறாய் மழையில் ஊறி நின்று கால்களைக் கவ்விக்கொண்டன.

அஜாக்கிரதையாகவோ, அன்றி சரியாகச் சமன் செய்யாமலோ தரையில் கால்களைப் பதிக்க முயன்றால் வழுக்கும் என்பதை இரண்டு மூன்று தப்படிகளில் தெரிந்து கொண்டதால் ஜாக்கிரதையாக நடக்கவேண்டியிருந்தது. அதனாலேயே நடைவேகம் குறைந்து, மழையின் முழுத்தாக்குதலும், நீராபிஷேகம் போல தலையில் கொட்ட நனைந்துகொண்டே நடந்தாள் வசுமதி.
அவள் பயமும் கவலையும் ஒரு எல்லையைத் தாண்டியபோது மனதில் எரிச்சலும் ஆத்திரமும் உண்டாயின.

தன்னை இப்படித் தனியே தவிக்கவிட்ட தன் தாயையும், அப்பாவையும் தம்பியையும் மனதுக்குள் திட்டினாள். தன் போன்ற வயதுக்கு வந்த பெண்ணை வாழ வைத்துப் பார்க்காமல் இப்படி வெயிலிலும் மழையிலும் தவிக்கவிட்டு தன் சம்பாத்தியத்தை உறிஞ்சிக்கொள்கிறார்கள் என்று நினைத்தாள். தனக்குச் சரியான வயதில் கல்யாணம் நடந்திருந்தால் தான் அவதிப்பட நேர்ந்திருக்காது என்று என்ணினாள்.

திடீரென்று செருப்பு, சேற்றுக்குள் நன்றாகச் சிக்கிக் கொண்டது. ஒரு காலை நன்றாக ஊன்றி, அதை வெளியில் இழுக்கச் செய்த முயற்சியில் சற்று சரிந்தபோது தோளில் மாட்டியிருந்த பை கழன்று சேற்றுக்குள் விழுந்தது. அதை மீண்டும் எடுத்துக் கொண்டு நிமிர்ந்தபோது, அந்த ‘ஸ்லிப்பை’ நினைத்து அவமானம் பொங்கிவர அழுகை பீறிட்டது. வசுமதி ஓசையின்றி அந்த மழையினூடே குலுங்கிக் குலுங்கி அழுதாள். இப்பொழுது மீண்டும் மின் இணைப்பு ஏற்பட்டு வெளிச்சம் தோன்றியது.

இப்படி ஒரு இரக்கமற்ற வீட்டில் தான் பிறந்திருக்கவேண்டாம். “:எல்லோரும் தான் தின்றிகள். இந்த அம்மாவும் அப்பாவும்... வரட்டும் பார்த்துக்குறேன்” என்று குமுறியபடி வீட்டை நெருங்கிகொண்டிருந்தாள். அந்த இருட்டிலும், மழையிலும் வீட்டுப்பகுதில் ஏற்பட்டிருக்கிற ஜனசந்தடி அவளுக்குள் திடீரென்று ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தி அவள் மனதில் ஒரு பயம் திடீரென்று கப்பிக்கொண்டது. ஏதோ ஒரு அசாதாரணம் தென்பட்டவுடன் அவள் மனக்குமுறலும், மழையும், இருட்டும் மறந்து போய் படபடபோடு எட்டி நடைபோட்டு வீட்டை அடைந்தாள். அங்கே-

அவள் தாயும், தங்கையும், தம்பியும், தந்தையும் ஆளுக்கொரு பொருளாக, வீட்டினுள் புகுந்திருந்த வெள்ளத்தினின்றும் அப்புறப்படுத்திப் பாதுகாப்பதில் ஈடுபட்டிருப்பதைக் கண்டாள். வெகுநாட்களாக மாற்றப்பட்டிராத அந்த வீட்டின் மேற்கூரையில் பாதி முழுவதுமாகப் பிய்ந்து பறந்துபோய் வெறும் சுவர்களுடன் வீடு பாதி மொன்னையாய் நின்றிருந்தது.

விக்கித்துப்போய் நின்றுவிட்டாள் வசுமதி. இதுவரை தோன்றியிருந்த துயரம் எல்லாம் வடிந்துபோய் புதிய வேதனை நெஞ்சில் தோன்றி இதயம் கனத்தது அவளுக்கு.Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP