அக்டோபர் 2 - மழையில் கரைதல்
>> Sunday, October 3, 2010
1.
எனக்கும், பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கும் அவ்வளவாக ஆகாது. அதற்காக அவர் மீதிருந்த காழ்ப்புணர்ச்சியைத் தீர்ப்பதற்கு நான் கால இயந்திரம் ஏறிச்செல்ல முடியாது. ஒளியின் வேகத்தில் முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ சென்று காலத்தை வெல்வதில் ஐன்ஸ்டைனுக்கு இருந்த ஆர்வமும், பிரக்ஞையும் எனக்கு இல்லாததால் திரு.காந்தியை சந்தித்து, சண்டையிட்டு சார்பியல் தத்துவத்தை உலகிற்கு நிறுவும் பாக்கியமும் வாய்க்காமல் போய்விட்டது. ஒருவேளை திரு.காந்தியின் இரத்தம் தோய்ந்த துணிகளைப் பார்த்தால் நான் அவர்பால் கொண்டிருக்கும் முரண்களை சரி செய்துகொள்ள முடியும் எனத் தோன்றியதால், கெளதமின் கிடையில் இருந்து இரண்டு ஆடுகளைத் திருடி எல்.எஃப்.ஆர்.சி ஆசிரியர், ஃபாதர் சற்குணத்திடம் விற்று அந்த பணத்தில் மதுரை காந்தி மியூசியம் சென்றேன். இருந்த 27 கேள்விகளின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துதான் அந்தப் பயணத்தின் பலன். இது நடந்தது பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு. இப்போது இன்னும் வளர்ந்திருக்கிறேன். கூடவே கேள்விகளும், முரண்களும்.
2.
சர்ச்சை ஒட்டியிருந்த பாரின் காம்பவுண்ட் சுவரில் எழுதியிருந்த வாசகம்
‘ஆசிர்வதிக்கப்பட்டவர்களே, நினைத்துப் பாருங்கள். நிறமின்றி, நிறையின்றி மிதக்கும் அறைக்குள் பீறிடும் மதுவோடும், தளும்பும் இசையோடும் நீங்கள் அமர்ந்திருப்பதாய்!
அப்படி ஓர் இரவை உங்களுக்கு அளிக்கவேண்டுமென சித்தம் கொண்டுள்ள...’
இதற்கு மேல் பெயிண்டும் சிமெண்டும் உதிர்ந்து செங்கல் விகாரமாய் தெரிகிறது.
3.
எனக்கும் அவருக்குமான பிரச்னைகளை இங்கேயே எழுதினாலும் எழுதுவேன், அல்லது பிறிதொரு இடத்தில், பிறிதொரு தருணத்தில். இப்போது சல்மாவைப் பற்றி கொஞ்சம்...
மாற்றவியலாத ஆற்றாமைகளின் பட்டியலின் மீதான எரிச்சலை சனநாயகத்தை அடியொற்றி தீர்த்துக் கொள்வதென்று முடிவு செய்தேன். ஆனால் எப்படித் தீர்ப்பது? யோசனையுடன், மழை மேகங்கள் சூழ்ந்து அந்திக்கு முன்பாகவே இருளை பாவிக் கொண்டிருந்த நகரத்திற்கு வெளியே இலக்கின்றி நடந்தபோது எதிரில் தெரிந்தது மதுக்கடை. தீர்வு கிடைத்தாயிற்று. பிரபஞ்சத்தின் எளிய தீர்வு. மூன்று நாட்களாய் பெருகி வரும் குற்றவுணர்ச்சியைக் கொன்றுவிடலாம், அது உற்ற சிநேகிதனைக் கொல்வது போன்ற உணர்ச்சியைத் தருவதாய் இருந்தாலும், செய்யத்தான் வேண்டும். ஹாஃப் ஷட்டர் திறந்து, முழுக் கூட்டத்துடன் இயங்கிக் கொண்டிருந்த அரசு இயந்திரத்தின் ஒரு பகுதி எனக்கும் தன் அரை கதவைத் திறந்தே வைத்திருந்தது. ஹாட்ஸ் ஆஃப் டு மிஸ்டர் காந்தி.
‘ஒரு ஹாஃப் மேஜிக் மொமென்ட்ஸ் வோட்கா’
‘என்னாது? மாமியார் ஊடாட்டம் வெரைட்டி கேக்குற? MC ஹாஃப் மட்டும்தான் இருக்கு, 300 ரூபா’
‘என்னய்யா இது அநியாயம், 300 ரூபாயா?’
‘ப்ளாக்குல வாங்குறதுக்கு வந்துட்டு இன்னா ஸீனு? த்தா, பீக் அவர்ல தொல்ல பண்ணிக்குனு, நவரு’
‘சரி, ஃபுல் ஒன்னு கொடுய்யா’
4.
அறையில் நுழைந்ததும் முதல் வேலையாக புத்தக அலமாரியில் இருந்த இரண்டு புத்தகங்களை கவனமாக பிரித்தெடுத்தேன். இவற்றை அறையில் இருந்து நீக்குவதென்ற முடிவுக்கு அவற்றின் தலைப்பு மட்டுமே காரணம் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்கிறேன். காரணங்களை பொதுவில் தெரிவிப்பது சனநாயகத்தின் தலையாய பண்பும் கூட. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வகித்த சென்ஸார் போர்ட் மெம்பர் பதவி இந்த சூட்சுமங்களைக் கைவரவைத்தது.
காந்தியை கொன்றது தவறுதான் - ரமேஷ் பிரேதன்
My Experiments with Truth - M.K. Gandhi
இரண்டு புத்தகங்களிலும் ‘நேரில் காணுமன்று உங்களை கொலை செய்ய விருப்பம்- முத்தங்களுடன்’ எனக் கையெழுத்திட்டு முகமறியாத் தோழிகளுக்கு பரிசாய் அனுப்பினேன். இப்போது அறை சுத்தமாய், அதன் இயல்பான நிறத்துடன் இருப்பதாய் தோன்றிற்று. சத்தம் போட்டு சிரித்தேன், சிரித்துக்கொண்டிருக்கும் போதே என் மனநிலை குறித்த அச்சம் எழவே சிரிப்பின் இழை பட்டென்று அறுந்து போயிற்று, மீண்டும் ஒட்டவைக்க முடியவில்லை. மனம் புன்னகைத்தாலும் அறிவின் ஓட்டம் புன்னகையை நிறுத்தியது. சல்மாவின் புகைப்படத்தை வெறிக்கத் துவங்கினேன். பெர்ஷிய ஜீன்களின் கொடை அவள்.
5.
மழை ஒர் சகோதரனைப் போல மகிழ்ச்சியோடு நகரைத் தழுவிக்கொண்ட நேற்றைய இரவை பொன்நிற மதுவாலும் வெகு நாட்களுக்குப் பிறகு இசையாலும் நிரப்பினேன்.
நான் தேடும் செவ்வந்திப்பூவிது...
அழகே, அழகா...
உறவுகள் தொடர்கதை...
தெய்வீக ராகம்...
கம்பன் ஏமாந்தான்...
ஐந்து பாடல்களும் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் ஓடின! மறுபடி மறுபடி கேட்டபோதும் தெய்வீக ராகம் பாடலில் ஓர் ரகசியக் கனவைப் போல படிந்திருந்த அமானுஷ்யம் பிடிபடாமலேயே நழுவிக்கொண்டிருந்தது. சற்றே ஏறத்துவங்கிய போதையில் விழிகள் இலக்கில்லாமல் வெறிக்க, கசியும் விழிகளுடன், வாய் பாடல் வரிகளை முணுமுணுப்பது அனிச்சையாய் நிகழ்ந்தது.
ஒரு கட்டத்தில் ‘உறவுகள் தொடர்கதை’ பாடலை பாடியே தீர வேண்டுமென தாங்கவொணா மனவெழுச்சி ஏற்பட்டது. அவ்வாறு பாடாமல் மீதியிரவை கடக்க இயலாதென்றும் தோன்றிற்று. பியானோ இருந்தால் பாடல் முழுமை பெறும். பியானோ இருந்த அறையின் மூலை வெறுமையாய் இருந்தது. அந்தப் பியானோவை விற்று சல்மா தன் சர்வாதிகார நாட்டில் தடை செய்யப்பட்ட இலக்கியங்களை வாங்கியிருந்தாள். வெளவால் தொங்குவது போல பூர்வகுடிகளின் மொழியில் எழுதப்பட்டிருக்கும் அந்தப் பிரதிகளை நான் பார்த்துமிருக்கிறேன். இதுவரையில் புரிந்துகொள்ள முயற்சித்ததில்லை. இந்த ஒன்பது வாரங்களில் அவள் அதைப் பற்றி விளக்கியதுமில்லை. கணிதத்திற்கு டியூஷன் வைப்பது போல இரகசிய இலக்கியத்திற்கு விளக்கம் சொல்வதும் அபத்தமானது என்று ஒரு தேநீர் காலையில் சிகரெட்டின் சாம்பலை தன் உள்ளங்கையில் தட்டியவாறே சொன்னாள். நான் எழுந்துசென்று அவள் இதழ்களைக் கவ்விக் கொண்டேன்.
6.
சுவற்றில் மாட்டியிருந்த கிதாரை எடுத்து, முடுக்கி இசைக்கத் தொடங்கியபொழுது, கொட்டப்படும் முரசின் பரப்பில் விழுந்த மணல் துகள்களைப் போல மனம் திம் திம்மென்று அதிர்ந்தவாறு இருந்தது. பழைய காதலிகளை நினைத்துக் கொண்டேன், குரல் கட்டுப்பட்டது. கடிவாளம் பூட்டப்பட்ட குரலில் ஏற்ற, இறக்கங்கள் எளிதில் சாத்தியப்பட்டது.
உன் கண்களின் ஓரம்
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம், வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்...
கண்களை மூடி குழைவாய் நெகிழ்ந்து பாடிக் கொண்டிருந்தபோது முரசின் ஓசை தலைக்குப் பின்னே வெகு சமீபமாய் கேட்டது. கதவு தட்டப்படும் சப்தம். திறந்தபொழுது, சல்மா முழுக்க நனைந்து வந்திருந்தாள். ’நல்ல மழை’ என்றவாறே உள்நுழைந்து ஆடைகளைக் களைந்து கொண்டிருந்தாள்.
‘விஸ்கி?’
‘சரி, ஆனா இங்கே வேணாம்டா. மாடிக்குப் போயிடலாம்’.
‘யுவர் விஷ்’
நானும் ஆடை களைந்து நிர்வாணமானேன். பிரம்மாண்டமான கருவானத்திலிருந்து பொழிந்து கொண்டிருந்த நீர்ப்பிரவாகத்தின் கீழே இருவரும் அருகருகே படுத்திருந்தோம்.
‘மிக்ஸிங் ஒன்னும் எடுத்துட்டு வரலை. மறந்துட்டேன்’
‘பரவாயில்ல’ என்றவாறு இரண்டு கோப்பைகளையும் மொட்டை மாடி தரையில் வைத்தாள். தூய மழைத்துளிகள் க்ளக் க்ளக் சப்தம் எழுப்பியவாறு கோப்பையில் இருந்த திரவத்தை நீர்க்கச் செய்தது. தனக்கேயுரிய பிரத்யேக சிரிப்புடன் என்னைப் பார்த்தவாறு ‘சியர்ஸ்’ என்றாள். அவள் வெண்ணிறக் கழுத்தின் வழியே அந்த பொன்நிற திரவம் இறங்குவது தெளிவாகத் தெரிந்தது. அரைப்போத்தலுக்குப் பிறகு புரியாத மொழியில் புலம்பத் தொடங்கினாள். அவள் பூர்வீக மொழி. முதன்முதலாக இவளை ஒரு பாரில் சந்தித்த அன்றும் இதைப்போலவே புலம்பிக்கொண்டிருந்தாள். அமைதியாக அவதானித்ததில் அடிக்கடி அவள் ‘ஃபக் யூ ‘ என்று எங்கோ வெறித்த கண்களுடன் முணுமுணுப்பது தெரிந்தது. இன்றும் அதே.
‘ஹி ஸ்பாய்ல்ட் மை நேஷன். அந்த ஆளாலதான் நாங்க இன்னிக்கு இப்படி இருக்கோம். சுரணை இல்லாம! சுய சிந்தனை இருக்குற மக்கள் எங்க நாட்டுல குறைவு தெரியுமா?’ என்றாள்.
‘நோ மோர் பொலிடிகல் டாக்ஸ். நீ நெறய குடிச்சுட்ட. போதும்’
‘சரி,பேசலை. கம் பேபி, லெட்ஸ் மேக் லவ்’
‘இல்ல, வேணாம். யூ ஆர் லுக்கிங் ரெஸ்ட்லெஸ். ‘
‘கமான் மேன். உன்னைப் போல இல்ல நான். உன்னாலதான் தோல்விகளோட சமரசம் செஞ்சுக்க முடியாது. நாங்க தோல்விக்கு எங்களைப் பழக்கிக்கிட்டு 45 வருசம் ஆயிடுச்சு. என்னால தோல்வி, துரோகம் ரெண்டையும் இயல்பா ஏத்துக்க முடியும்’
‘நான் அப்படி சொல்ல வரலை. வீ ஆர் ட்ரங்கன் உனக்கு ஆர்கஸம் வரலைனா நான் கில்டியா ஃபீல் பண்ணுவேன்’
‘உனக்குதான் கில்டி கான்ஷியஸ் பிடிக்குமே’ என்றவாறே வெடித்து சிரித்தாள்.
‘மந்திரிச்சு விட்டமாதிரி வீக்டேஸ் முழுக்க திரிவ, ஃப்ரைடே ஈவ்னிங் வரை புலம்பிட்டே இருப்ப. அதான் எரிச்சலா இருக்கும். கொஞ்சம் பாவமாவும் இருக்கும்’
‘ஆமா, எனக்கு கில்டி கான்ஷியஸ் தேவைப்படுது, அப்போதான் வீக் எண்ட்ல அந்த மைண்ட் செட்டோட குடிக்க முடியும். காரணமில்லாம குடிச்சா அது இன்னும் வேதனைய அதிகப்படுத்துது.’ நானும் சிரித்தேன்.
‘நல்லா ரீஸன் சொல்றடா’ என்றவள் என்னைத் தள்ளிவிட்டு மேலே படர்ந்தாள். “ஆக்சுவலா, பாட்டு நல்லா இருந்துச்சு, நல்லாவே பாடுற. ‘நதியிலே புதுப்புனல், கடலிலே கலந்தது...’ செம லைன்ல. ஐ லைக் தட், தமிழ் ரொம்ப லைவ்வான லேங்வேஜ்” என்றவாறே கழுத்தின் பக்கவாட்டில் வாய் வைத்து உறிஞ்சத் தொடங்கினாள். தொலைவில் ஒரு மின்னல் கிளைத்துப் படர, மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது.
6 comments:
டிராகுலா வாழ்க்கையில் இன்னும் எத்தனை எத்தனை டிராகுலாக்கள் என் பக்கவாட்டு கழுத்தில் பல் பதிக்க காத்திருக்கிறதோ தெரியவில்லை.
இவனது எழுத்துகளை வெளியிடும் உரிமையை எப்படியாவது இவனிடமிருந்து வாங்கிவிட வேண்டும். வாங்குவது என்பதற்கு பணம் கொடுத்து வாங்குதல் என்பது பொருளல்ல.. மழை முடிந்து சல்மா இவன் மீதிருந்து விலகிய தருணத்தில் அவளின் வேண்டுகோள் இதுவாக இருக்கலாம். இவனுக்குப் புரியாத அவளின் தாய்மொழி எழுத்துகளை அவள் வாங்கியதைப் போல, இவனது தாய்மொழியிலேயே பலருக்குப் புரியாத எழுத்துகளை விற்றால் நிச்சயம் நான் இலக்கியப் பணி செய்தவனாவேன். இப்போதைக்கு இவனை இலக்கியக் களத்தில் நிறுவுதல் முக்கியமாகிறது.
பிறகு என்றேனும் ஒரு நாள் சல்மாவுக்கும் இவனுக்குமிடையிலான இலக்கியக் குடிமிப்பிடியைக் கூட தனிப் புத்தகமாக்கிக் கொள்வேன். இவ்வாறாக இவன் எழுத்தாளனாவதை நான் விரும்புகிறேன். நானே வெளியிட்டுவிட்டு நானே அதை விமர்சனமும் செய்யலாம். அப்போது அவனது கருத்துரிமைக்கு நான் உயிர்தருவதாயும், அதே நேரத்தில் எனது கருத்துரிமைக்குப் போராடுவதாகவும் நான் கருத்து தெரிவிக்க முடியும்.
புரிஞ்சிக்கவே கொஞ்ச நேரம் எடுக்கும் போலிருக்கு சந்துரு.
chandru unnoda malaiyil karidahal padichanda superda.tamil-in inimai irudhadu,enakku nee +2 padikumbodhu oru kavidhai elidi kodutha unaku gnabagam irukka?theiyala?title:kaanavanam.ippo adhai nenaichupakren.
Aravinth, Prince, Lavanya, Ganesan - Thanks
deep too deep
Post a Comment