இங்கே ஒரு காதல் கதை 6
>> Monday, December 13, 2010
“எல்லாம் யோசிக்கும் வேளையில் உண்பதும் உறங்குவதுமாக முடியும்” என்கிற தாயுமானவரின் தத்துவத்தில் இன்றைய விடியல் நிலை கொண்டது. நேற்றைய மதுவின் போதை நிகழ்வை ஒத்திவைக்கவில்லை. குரூரமான இரவும்... நீட்சியாய் விடியலும். உண்மையான அன்பு என்றோ ஆத்மாவின் தேடல் என்றோ ‘காதல்’ என்கிற சுயநலத்தை ஒருபோதும் வகைப்படுத்த முனைந்ததில்லை. ஆனால் நீ என்கிற போது மட்டும் புலன்களின்/ அறிவின் கட்டுப்பாடுகள் மயன் நிர்ணயித்த நகரின் பழியெனப் பற்றி எரிகிறது.
நிரந்தரமான கூடு என்றோ அல்லது உண்மையான காதல் என்றோ நான் கூறிக்கொண்டலைவது எனது தோற்றமாயையாய்தான் இருக்கமுடியும். நிரப்பப்படாத இடைவெளி, எதுகொண்டும் சமனாகாத மனதின் வெற்றிடம், இன்னொருத்தனை/ஒருத்தியை தீண்டாத உதடுகள் போன்றவை இப்பேரண்டத்தின் பிரம்மாண்டத்தின் முன்பு போலிப்பிம்பங்கள் அன்றி வேறில்லை.
என்றாலும் சகி, நீளும் கடைத்தெருக்களில் உனது பிரிய விரல் கோர்த்தல்களையும், வெம்முலைகளின் நடுவேயான பனிக்காலத் திளைத்தல்களையும்,இதழ்களினூடாக மேல்தாடையினுள்ளோடித் துழாவும் நாவின் குழைவுத் தீண்டல்களையும், உனக்கேயான கீழ் உதட்டின் சிவப்பையும், அகன்ற நிம்மதியின் ஆலென வீற்றிருக்கும் உன் மடியினையும், கருணையின் யோனியையும் இழந்து நிற்கும் இந்த நாள் நரகமாய் இருக்கிறது. நீ காட்டிச்சென்ற பேரன்பின் நாட்களை ஜனித்த குழந்தையின் நேசத்தோடும், முலைப்பால் பற்றோடும், நன்றியோடும் நினைவு கூர்கிறேன்.
தீர்மானங்களின் நிழலில் வாழும் பூஞ்சையை விருட்சமென கற்பனை செய்துகொள்வது எனது கற்பிதமாய்தான் இருக்க முடியும்...எனினும், எஞ்சிய நாட்களுக்கான புன்னகையை, வன்மத்தை, கிளர்வுகளை, கொடுந்தனிமையை, காதலைத் தந்தவாறு வற்றாத ஜீவநதியென எனக்குள் ஓடிக்கொண்டே இருப்பாய்.
கிரியா ஊக்கிகளால் மாற்றவியலாத நம் வாழ்வின் சமன்பாட்டில், நாம் ஒருபோதும் சந்தித்து விடாதிருக்கவும், அவரவர்க்கு விதிக்கப்பட்ட வாழ்வை வாழவும் எல்லாம் வல்ல இயற்கை ஆசிர்வதிக்கட்டும். அழகே! என்றென்றும் என் காதல் உனக்கு!
7 comments:
நல்லாருக்குங்க பாஸ் :)
நல்லா இருக்குங்க
அருமை பாராட்டுக்கள்
எழுத்துக்கு எல்லாம் அழகு தான் ஆனால் வாழ்க்கைக்கு
Nesan, Paarthasarathy, Thamizthottam,
Lawanya - Thanks :)
அழகா, அற்புதமா இருக்கு சந்த்ரு!
Subramanian - Thanks :)
Post a Comment