நாவலோ நாவல்
>> Wednesday, December 22, 2010
காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில், மதுரை செல்லும் பேருந்து நிற்பதற்கான மேடை. மழை தூறிக்கொண்டிருந்த அந்த சோம்பேறியான நண்பகலில் மாடுகள் துள்ளல் நடைபோட்டுக் கொண்டிருந்தன. சென்ற வாரம் உள்துறை அமைச்சர் வந்த போது ஒட்டப்பட்டிருந்த தரமான தாளில் அச்சடிக்கப்பட்ட வரவேற்பு போஸ்டரை ஒரு மாடு நக்கி மேய்ந்துவிட்டு உற்சாகமாக ‘ம்ம்ம்மாஆஆஆ’ சத்தம் எழுப்பியபடி இருந்தது. நல்ல நிறைவான மதிய உணவுக்குப் பின்னர் தூக்கம் தூக்கும் நொடியில் நம்மிடமிருந்து ஆசுவாசமான சாந்திப் பெருமூச்சொன்று வருமே, அதன் ஒத்ததிர்வு. காஷ்மீர் கலவரம்- நக்சல் போராளிகள், என்று உரலுக்கும் உலக்கைக்கும் இடையில் தலையைக் கொடுத்து மாட்டிக்கொண்டிருக்கும் அமைச்சருக்கு தான் ஒரு கால்நடைக்காவது உதவியாய் இருப்பது தெரிந்தால் உணவளித்த திருப்தியும், புண்ணியமும் கிடைக்க எல்லாம் வல்ல அன்னையிடம் பிரார்த்திக்கவும் கூடும்.
கலவையான ஒலிகளோடும், அடித்த ஹாரனில் கலவரமாகி சிதறிய மக்களின் வசைகளோடும் மதுரை செல்லும் சோமு வந்து நின்றது.
‘மைய்ரை’ ‘மைய்ரை’ ‘மைய்ரை’...
முன்னால் நின்ற ஆளில்லாத அரசுப்பேருந்தை எக்கித்தள்ளி முழுமையான ஆக்கிரமிப்பு.
நிற்க... ‘மைய்ரை’ என்பது ‘மதுரை’ என்று வழங்கப்படும் மூவாயிரமாண்டு தொல்நகரின் ‘நடத்துனர் மரூஉ’ என்று அறிக. நடத்துனர்களின் மொழி எப்போதும் அலாதியானது. எப்பேர்ப்பட்ட ஊரின் பெயரும் இவர்களிடம் அதன் அப்ரிவேஷனைக் கண்டடைந்துவிடும். ‘கான்ஸ்டாண்டிநோபிள்’ போன்ற நகரின் பெயர்களும் இவர்களுக்கு விலக்காகாது என்பது என் அனுமானம். சமயங்களில் வில்லங்கங்களும் நிகழ்ந்தேறும். தஞ்சாவூர் - ஏர்வாடி தர்ஹா லைனுக்கு புதிதாய் வந்த நடத்துனர் அனுபவமின்மையாலோ, வாலிப முறுக்கை சிலேடைப் பரப்பில் வெளிப்படுத்தும் முகமாகவோ தர்ஹாவை விடுத்து ஊர்ப்பேரை மட்டும் உரத்து அடுக்குமொழியில் விளிக்க செவிட்டில் விழுந்தது அறை.
சோமுவில் ஏறியாயிற்று. பின் இருக்கை முழுவதும் காலியாய் இருந்தாலும், முதுகெலும்பின் நலன் கருதியும், மழைக்கால தமிழ்நாட்டு சாலைகளில் நம்பிக்கை வைத்தும் நடு இருக்கை ஒன்றைத் தேர்வு செய்தேன். சன்னலோரம்,குழந்தைமையின் விருப்பம். ‘நாம் எந்த இருக்கையில் அமரவேண்டும் என நாமல்ல, நமது நடத்துனரே முடிவு செய்கிறார்’ என்கிற தத்துவ அடிப்படையில், அகவை அறுபது கடந்த பெண்மணிக்காக (கவனிக்கவும், உடன் வந்த பேத்திக்காக அல்ல) இரண்டு இருக்கைகள் முன்னால் இடமாற்றம் செய்யப்பட்டேன். அந்த சன்னலோரத்தின் குழந்தைமை ஏற்கனவே அனுபவப் பாத்தியதையில் இருந்தது. ஒன்றைரை நபர்கள் மட்டுமே அமரக்கூடிய அந்த இருவர் இருக்கையில் கம்பியைப் பிடித்தவாறு ஆள் பாதி கால் மீதியாக அமர்ந்த கணம் ஒரு சபிக்கப்பட்ட சர்க்கஸ் தருணம்.
அருகில் இருந்தவருக்கு சுமார் முப்பந்தைந்து வயது இருக்கலாம். நேர்த்தியாய் உடையணிந்து நெடுநெடுவென்று இருந்தார். பேருந்து கிளம்பியதில் இருந்து என் இடது கையையே பார்த்துக்கொண்டிருந்தார். உற்றுநோக்குகையில் அவரது மையல் என் கைக்கடிகாரத்தின் மீது என்பது தெளிவாயிற்று. மெல்ல என்னிடம் பேச்சுக்கொடுத்தார். அப்போது கடிகாரத்தில் நேரம் சரியாகவும் எனது நேரம் சரியில்லாமலும் இருந்ததை நான் உணரவில்லை. பயணங்களில் நிறைய சுவாரசியமான மனிதர்களை சந்திக்க முடியுமென்பதால் பதிலுக்கு நானும் திருவாய் மலர்ந்தருளினேன்.
‘வாட்ச் நல்லாயிருக்கு. எங்க வாங்கினீங்க?’
‘சிங்கப்பூர்ல’
‘எவ்வளவு சார்?’
‘ம்ம்ம், சிங்கப்பூர்ல 140 டாலர் வந்துச்சு’
‘ஐ ஆம் ...........’ என்றவாறு தனது கார்டை நீட்டினார்.
‘ஐ ஆம் சந்திரசேகர்’ என்றவாறு கையை நீட்டினேன். என்னிடம் லைசன்ஸ் மட்டுமே இருக்கிறது.
‘ஓக்கே சார், இங்க இந்த வாட்ச் கிடைக்குமா?’
‘இதே பிராண்ட் கிடைக்குமான்னு தெரியல. டைட்டன்ல மெட்டல் சீரிஸ் இருக்கு. இதே டைப் வாட்ச்தான் அதுவும். ட்ரை பண்ணிப் பாருங்க’
‘அப்படியா, என்ன ஒரு ஃபைவ் ஹன்ட்ரட் தெளஸண்ட் இருக்குமா?’
500ஐயும் 1000ஐயும் பெருக்கி மலைத்தவனாக உஷாரானேன். இவருடனான எஞ்சிய பயண நேரத்தை எண்ணி பீதியுற்றவனாக பேச்சை மேலும் வளர்க்க விரும்பாமல், ‘தெரியலை, விசாரிச்சு பாருங்க’ என்றவாறு திரும்பி பேகில் வைத்திருந்த உபபாண்டவம் நாவலை வாசிக்க எடுத்தேன். அடுத்த நாற்பத்தைந்து மணித்துளிகளுக்கான துன்பியல் நிகழ்வுகளுக்கும், ஒரு வாரத்திற்கான மனக்குமைவுக்கும் அந்த நொடியும், செயலுமே ஆதுரமாய் இருந்தது.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்பது ரசனையாயின் இவர் உரிமையும் உண்டு என்ற கொள்கையாளராய் இருந்தார். கிட்டத்தட்ட என் கையில் இருந்த உபபாண்டவம் பறிக்கப்பட்டது. கையறு நிலையில் பயணத்தின் மன அமைதிக்காக மெளனம் காத்தேன்.
‘நிறைய புக்ஸ் படிப்பீங்களா?’என்றவாறு பதிலுக்குக் காத்திராமல் அந்தப் புத்தகத்தை எடை போடும் தொனியில் உள்ளங்கையில் வைத்துப்பார்த்தார். புத்தகத்தைப் பிரித்து சில பக்கங்களை புரட்டினார். ‘ம்ம்’ என்று ஏதோ சொல்ல வாயெடுத்து மீண்டும் பக்கங்களைப் புரட்டினார். அவ்வப்போது தேர்ந்த நில அளைவைக்காரனின் முகபாவங்களை வெளியிடவும் தவறவில்லை. உபபாண்டவம் நாவல் குறித்து அவர் எந்த தர அறிக்கையும் வெளியிட்டுவிடக்கூடாது என்ற அச்சத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையில் இறங்கினேன்.
‘யாரு இந்த ராமகிருஷ்ணன்?’
‘இவரு தமிழில் முக்கியமான எழுத்தாளர்’
‘ஓஹோ, நமக்கு இவரைத் தெரியாதே’ என்றவாறு ‘பேக்ல என்ன? அதுவும் புக்ஸா?’ சனி ஜாதகத்தில் உச்சமாய் இருக்கலாம், நாவில் இருந்தால்... ‘ஆமாம்’ என்றுதான் சொல்லவைக்கும்.
‘எங்க இப்படி கொடுங்க பார்போம்’ இப்போது எஞ்சிய இரண்டு புத்தகங்களும் அவர் கையில். ‘புயலிலே ஒரு தோணி’ - ப.சிங்காரம் ‘நரகத்திலிருந்து ஒரு குரல்’ - சாரு..!
புயலிலே ஒரு தோணியை அவர் புரட்டத்தொடங்குகையில் ஜப்பானிய துருப்புகள் கெர்க் ஸ்ட்ராட் வழியே இந்தோனேஷியாவுக்குள் நுழைந்தபோது ஹாலந்து நாட்டவர் என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள் என்று ஊகிக்க முடிந்தது. நடுக்கம்! நைசாக ‘ஒரு நிமிஷம்’ என்று சொல்லி சாருவை கவர்ந்தேன். ஏற்கனவே எஸ்.ரா, ப.சிங்காரம் இருவரும் இவரின் தராசில் இடமின்றி நின்று கொண்டிருக்கையில் சாருவையும் அதில் ஏற்ற விருப்பமில்லை.
அட்டையின் தடிமன், அட்டைப்படம், சிங்காரத்தின் வழுக்கை போன்ற சிலபல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ஒருவழியாக புத்தகத்தை திரும்ப தந்தார். எனது தலையைச் சுற்றி பறந்து கொண்டிருந்த பறவைகள் கூடடைந்தன. மாசிப்பச்சைக்கு குலதெய்வத்தை தரிசிக்கலாம்.
‘நான் இந்த மாதிரி புக்ஸ்லாம் படிக்கிறதில்லை. பிசினஸ்தான் நமக்கு. அதனால, நெறய தன்னம்பிக்கை புத்தகங்கள், சுயமுன்னேற்ற புக்ஸ் எல்லாம் படிப்பேன். ஒரு லைப்ரரியே வைக்கலாம்...அவ்வளவு புக்ஸ் இருக்கு, ஹா ஹா ஹா’
‘அவ்வளவு புக்ஸ் படிச்சும் தன்னம்பிக்கையோ, முன்னேற்றமோ ஏற்படலீங்களா?’
‘என்ன?’
‘இல்லிங்க, ஏற்பட்டுருந்தா அடுத்த புத்தகம் வாங்கவேண்டிய அவசியம் இருந்திருக்காதே? அதுக்கு சொன்னேன்’.
லேசான முறைப்புடன் அவர் தலைக்கு மேலே சுட்டிக்காட்டி ‘அந்த பேகை எடுங்க, ஒன்னு காட்றேன்’ என்றார். அங்கே இருந்தது ஹெச்.பி லேப்டாப் கேரிங் கேஸ். ‘அந்த கேரிங் கேஸா’ ‘இல்லிங்க, அந்த ப்ளாக் கலர் லெதர் பேக்’. எனது பொறுமையின் நாணயம் உறைகல்லில் ரத்தம் வர தோய்க்கப்பட்டுக்கொண்டிருந்தது.
உள்ளேயிருந்து ‘பணம் சம்பாதிப்பது எப்படி?’ போன்ற தலைப்பைச் சூடிய ஒரு தமிழாக்கத்தை எடுத்தார். மடித்து அடையாளம் வைத்திருந்த பக்கத்தைப் பிரித்து ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். அஃது நான் செல்லும் பேருந்தில் பில்கேட்ஸ் ஓட்டுனராகவும், லட்சுமி மிட்டல் நடத்துனராகவும் வந்து கொண்டிருப்பது போன்ற ஜிகினாத்தோற்றங்களை உண்டாக்கிற்று. பிரசங்கம் முடிந்தவுடன் சுவிஷேசக்கூட்டத்தின் பிரச்சாரகர் அனைவரையும் கருணை ததும்பப் பார்ப்பாரே, அப்படி ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் பேகிற்குள் கையை விட்டார். இம்முறை பில்கேட்ஸின் வங்கிக் கணக்குப் புத்தகம் வந்தாலும் ஆச்சரியப்படக்கூடாது என்கிற உறுதியுடன் இருந்தேன்.
அவர் கையில் இப்போது ‘ப.ச.எ?’ புத்தகத்தின் ஆங்கிலப்பதிப்பு. எனது கண்கள் ஒருமுறை இருண்டு மீண்டன. ‘இது எதுக்கு சார்?’ ‘இல்ல, எனக்கு இங்கிலீஷ் அவ்வளவா தெரியாது. அதனால தமிழ், இங்கிலீஷ் ரெண்டுமே வாங்கிருவேன்.’
‘இங்கிலீஷ் ஒரு மொழிதான சார். உங்களை மாதிரி ஆட்கள் ஈசியா கத்துக்கலாம்’ என்று சொன்னபின்னரே சொல்லியிருக்ககூடாது எனத் தோன்றியது.
‘ஆமா, அதுக்கும் நிறைய புகஸ் வச்சிருக்கேன்... ... ... ... ... ... ... ... ... ... ...’
‘சார், ஒன் செகண்ட். ஏதோ கால் வருது’ என்று தப்பித்து செல்பேசியில் ஆழ்ந்தேன். எப்படிப்பட்ட உரையாடலும் முடிவுக்கு வரவேண்டுமே, வந்தது. உடன் பருந்தெனப் பாய்ந்து பற்றிக்கொண்டார்.
இம்முறை ப்ரம்மாஸ்திரம் ஏவப்பட்டது. ‘நான் புக்ஸ் (புக் அல்ல புக்ஸ்) எழுதிட்ருக்கேன். இன்னும் ஆறு மாசத்துக்குள்ள முடிஞ்சுடும்’
‘ஓ, நைஸ்’
‘ இந்த மாதிரியான பிசினஸ் புக்ஸ்ல இருந்து நிறைய பாய்ண்ட்ஸ் எடுத்து வச்சிருக்கேன். அப்படியே கோர்த்தம்னா ரெண்டு புக் கூடப் போடலாம்.’
‘நல்லாப் போடலாம்’
‘நான் ஆம்வே பிசினஸும் பண்றேன். அது எப்படி பண்றதுன்னா...‘
‘இல்ல சார். வேணாம். நாட் இன்ட்ரஸ்டட்’
‘பரவாயில்ல. ஆமா,சிவகாசில நிறைய பப்ளிஷர்ஸ் இருக்காங்கள்ல?’
‘ஆமா, தெருவுக்குத் தெரு’. பிரிண்டிங் பிரஸ் ஓனருக்கும் பப்ளிஷருக்கும் ஒரே அந்தஸ்தை நல்கும் அவரை எதில் சேர்ப்பது என்றே புரியவில்லை.
‘இப்போ உங்களைப் பார்த்தோன்னே இன்னொண்னும் முடிவு பண்ணிருக்கேன்’
‘என்னன்னு?’
‘இப்போ நீங்க காட்டுன நாவலும் பார்த்தேன். ஒன்னுமே நல்லாயில்லை. பேசாம நானே அந்த மாதிரி நாவல் எழுதலாம்னு ... ... ....’அடுத்தடுத்த வார்த்தைகள் கேட்கவில்லை. உலகமே தட்டாமாலை சுற்றுவது போல இருந்தது. ஒருமையுள் ஆமை போல ஐந்தடக்கல் ஆற்றுவது இனியும் சாத்தியமில்லை எனத்தோன்றியபோது திருப்பத்தூர் பேருந்து நிலையம் வந்துவிட்டது. திரும்பிப் பார்த்தேன். கடைசி இருக்கை காலியாய் இருந்தது. தெறித்து ஓடிப் போய் அமர்ந்துகொண்டேன். வாந்தி எடுப்பதுபோன்ற பாவனைகளுடன் குனிந்தவன் நிமிர்ந்து பார்க்கவேயில்லை. அது மாட்டுத்தாவணிக்குள் வண்டி நுழையுமுன் வேகத்தடையிலேயே இறங்கித் தப்பியது வரை தொடர்ந்தது.
ஏர்போர்ட் சென்று அண்ணனை வழியனுப்பிவிட்டு ஒன்பது மணிக்கே மாட்டுத்தாவணி வந்துவிட்டிருந்தாலும் நண்பன் அழகுராசாவுக்காக காத்திருந்து அழுது புலம்பிவிட்டு, அவரது விசிட்டிங் கார்டை சுக்கல் சுக்கலாய் கிழித்தெறிந்து தலையை சிலுப்பிக்கொண்டு சொன்னது இது ,” நாமளும் சீக்கிரம் நாவல் எழுதணும்டா”
14 comments:
சூப்பர் :))))))))))))
சுவராஸ்யமான பகிர்வு :)
சிங்கப்பூர் போயிட்டு வந்தது ஒன்னும் பிரயோசனப்படலைன்னு கவ்லைப்பட்டியே நண்பா... பார்த்தியா உனக்கு எவ்வளவு பெரிய அனுபவத்தைக் கொடுத்திருக்கு!
//நாமளும் சீக்கிரம் நாவல் எழுதணும்டா”//
நண்பேண்டா...
//தஞ்சாவூர் - ஏர்வாடி தர்ஹா லைனுக்கு புதிதாய் வந்த நடத்துனர் அனுபவமின்மையாலோ, வாலிப முறுக்கை சிலேடைப் பரப்பில் வெளிப்படுத்தும் முகமாகவோ தர்ஹாவை விடுத்து ஊர்ப்பேரை மட்டும் உரத்து அடுக்குமொழியில் விளிக்க செவிட்டில் விழுந்தது அறை//
இன்னும் புத்திசாலித்தனமாக ஒரு கண்டக்டர் " மிதிபடுது, மிதிபடுது, ஆச்சி, சேலைய தூக்கிங்குங்க, ஐயா ஏறுங்க, ரைரைய்ய்ய்ய்ய்ட்" என்று அப்போதைய காரைக்குடி பழைய பஸ்ஸ்டாண்ட் முழுவதையும் சிரிக்க வைத்தாராம்
அதுசரி, எப்போ உங்களோட அந்த நாவல் வருது?
Senshe, Ahamad, Prince, Majeed - Thnaks guys :)))
இந்த மாதிரி வலிய வந்து பேசுற ஆட்கள், MLM ஆட்களாத்தான் இருப்பாங்கன்னு யூகிச்சேன். சரியாப் போச்சு.
உங்களுக்கு நகைச்சுவை நல்லா வருது.
ராட்சசனய்யா நீர்! சாமீய்... தொவச்சித் தோரணம் கட்றீரே! நான் உம்ம பரம ரசிகனாயிட்டேன். நாவல் கீவல் எழுதுனா ஏங்காதிலயும் கொஞ்சம் சேதியப் போடும்.
Raj & Subramanian - Thanks guys
:)
Eagerly waiting to read your novel ;-)
ஜோ, ஏன் இந்த கொ.வெ? :)))
உபபாண்டவம்..? அவ்வ்வ்...
அட்டேய் மாபாதகான்னு அவன் மூஞ்சி மேல ஒரு குத்து குத்தணும் போல இருக்கு சந்துரு..
நல்லா எழுதி இருக்கிங்க சாமி..
//அவ்வப்போது தேர்ந்த நில அளைவைக்காரனின் முகபாவங்களை வெளியிடவும் தவறவில்லை//
சூப்பர்..:-))
இம்முறை பில்கேட்ஸின் வங்கிக் கணக்குப் புத்தகம் வந்தாலும் ஆச்சரியப்படக்கூடாது என்கிற உறுதியுடன் இருந்தேன்....
இம்முறை பில்கேட்ஸின் வங்கிக் கணக்குப் புத்தகம் வந்தாலும் ஆச்சரியப்படக்கூடாது என்கிற உறுதியுடன் இருந்தேன்.....
இம்முறை பில்கேட்ஸின் வங்கிக் கணக்குப் புத்தகம் வந்தாலும் ஆச்சரியப்படக்கூடாது என்கிற உறுதியுடன் இருந்தேன்....
Post a Comment