இங்கே ஒரு காதல் கதை 7 - 11

>> Wednesday, December 29, 2010




2009ன் இறுதி மாதங்களில் ஒன்று

நீண்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு நெருங்கிய கல்லூரி நண்பனை சென்னையின் புகழ்பெற்ற சனநெருக்கடி தெருவில் யதார்த்தமாய் சந்தித்தேன். பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு ‘ஷீ இஸ் மை வொய்ஃப்’ என குழந்தையுடன் வந்து கொண்டிருந்த பெண்ணைக் காட்டி அறிமுகப்படுத்தினான். ‘வணக்கங்க’ ‘வணக்கம்’. திரும்பி நண்பனைப் பார்த்தேன். ‘ரொம்ப டஸ்டா இருக்கு மாப்ள இந்த தெரு’ என்று கண்களில் தூசு விழுந்த பாவனைகளுடன் திரும்பிக்கொண்டான். கல்லூரி காலத்தில் இருவரும் பகிர்ந்துகொண்ட நேவி கட்டின் சாம்பல் இங்கு வந்திருக்க நியாயமில்லை. ‘ஈவ்னிங் மீட் பண்ணுறோம் மாப்ள’ என்றவாறு எண்களைப் பரிமாறிக்கொண்டோம். ‘அண்ணா, வீட்டுக்கு வாங்கண்ணா” வெள்ளந்தியாய் சிரித்தது அந்தப் பெண். ‘ கண்டிப்பா வர்றேம்மா, இப்போ கொஞ்சம் வேலை இருக்கு.’

மாலை. நான்கு ரவுண்ட் மார்ஃபியஸும் சில சிகரெட்டுகளும் கரைந்து மதுக்கூடத்தின் கூரை வழியே கசிந்துகொண்டிருக்கும் மெல்லிய இசையை உணரத்துவங்கிய நேரம். வந்ததில் இருந்து நிலவிய மெளனத்தை நொறுக்கி உடைந்து மெலிதாய் அழத்துவங்கினான்.

‘மச்சி, என் மேல தப்பு இல்லடா’

‘ங்கோத்தா... முதல்ல இப்டி ஸ்கூல் பையனாட்டம் பேசுறத விட்று. எம்மேல தப்பில்ல. அவதான் காரணம்னு எஸ்கேப் ஆகி ஓடுறத நிறுத்து.’

‘உண்மையிலயே மச்சி. எம்மேல...’

‘கேனக்..., நிறுத்துடா. அவ உன்னை எவ்வளோ லவ் பண்ணானு எனக்குத் தெரியும்’

‘நானுந்தான் பண்ணேன்’

‘அப்புறம் என்ன மயித்துக்கு இன்னொரு பொண்ண...நல்லா வாயில வருது. பாவம்டா அந்தப் பொண்ணு. அப்பாவியா இருக்குடா. அட்லீஸ்ட் அவகிட்டயாது புருஷனுக்கான அன்போட இரு’

‘அப்படிதான் மச்சி இருக்கேன். இன்னொரு லார்ஜ் சொல்லு’

‘தாங்குவியா?’

‘யேய் மயிரு, பரங்கிப்பேட்டைல ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ஃபுல்லை முடிச்சுட்டு நைட்டெல்லாம் சரக்கு தேடி அலைஞ்சதை மறந்திட்டியா?’

‘நான் ஒன்னும் பழச மறக்கிறவன் இல்ல’

‘ இங்க பார்றா. டபுள் மீனிங்ல பேசுறாராம். டேய் பாடு..டேய் இங்க பாரு, நான் ஒன்னும் அவள வேணான்னு சொல்லல. த்தா, அவதான் எதுவுமே வேணாம்னு சொன்னா.’

‘எப்போ?’

‘நீ ஃபாரின் போய்ட்ட. எங்க யாரையும் ஒரு மயிருக்கு மதிச்சுக் கூட போன் பண்ணல. என்ன நடந்துச்சுன்னு எதுவுமே தெரியாம பெரிய புடுங்கியாட்டம் அவளுக்கு வக்காலத்து வாங்கிக்கிட்டு என்னப் புடிச்சு காய்ச்சுற?’

‘சரிடா. என்ன ஆச்சு? நல்லாதான இருந்தீங்க’

‘தெர்லடா. திடீர்னு ஒரு நாள் வீட்ல கூப்பிடுறாங்கன்னு ஊருக்குப் போயிட்டு வந்தா. டிபார்ட்மெண்டுக்கு காலையிலயே வரச்சொன்னா. போனேன். இது சரியா வராது. வேணாம். விட்ரலாம்னு சொன்னா. செம கடுப்பாயிட்டேன். வாக்குவாதம் முத்திடுச்சு. இனிமேல் என்கிட்ட வரம்பு மீறிப் பேசுனா ஈவ்டீசிங் கம்ப்ளைண்ட் கொடுத்துருவேன்னு சொல்லிட்டு எந்திரிச்சுப் போயிட்டே இருந்தா மச்சி..!’

‘ம்,ம். அப்புறம் என்ன ஆச்சு?’

‘அத்துக்குச்சு. நானும் எவ்வளவோ ட்ரை பண்ணினேன். ஒன்னும் சரியா வரலை. ப்ராஜக்ட் முடிச்ச அடுத்த மாசமே நல்ல வெயிட்டான பார்ட்டி ஒருத்தனை கல்யாணம் பண்னிக்கிட்டு செட்டில் ஆயிட்டா.’

‘ஓஹ்’

‘மாப்ள, ..த்தா அவளுக்காக நான் M.Tech சீட்டை வேணாம்னு சொன்னவன்டா’

‘சரி மாப்ள. ஃப்ரீயா விடு. அதான் நீயும் குடும்பம், குழந்தைனு செட்டில் ஆகிட்டல்ல.
ஓநாயா இருந்து பார்த்தாத்தான் குழந்தையை சாப்பிட்டதுக்கான தர்க்க நியாயங்கள் புரியும்’

‘திரும்ப அவளுக்கு சப்போர்ட் பண்றியா?’

‘மாப்ள, என்னோட கோபம் என்னங்குறது உனக்குப் புரியல. எனக்கு நீயும் ஃபிரெண்ட், அவளும் ஃபிரெண்ட். ரெண்டுபேரும் லவ் பண்ணீங்க. சேர்ந்து வாழ்ந்துட்டு இருப்பீங்கன்னு இவ்வளவு நாள் நம்பிட்டுருந்தேன். “அப்படிலாம் எதிர்பார்க்காத ராசா”னு வாழ்க்கை பொட்டுல அடிச்சுப் புரிய வச்சுருக்கு. ஒன்ஸ் அகைய்ன் ஐ காட் தி ஃப்ரூஃப். நிரந்தரமானது, புனிதமானதுனுலாம் ஒரு மயிரும் கிடையாது. வாழ்க்கையோட நடப்பையும், இயல்பையும் சொன்னா அவளுக்கு சப்போர்ட் பண்றதா அர்த்தமில்லை.’


டிசம்பர் இறுதி, 2003 - நண்பனின் டைரியில் இருந்து...

நூறு மீட்டர் தூரத்தில் ஓவியத்தின் அமைதியுடன் தளும்பிக்கொண்டிருக்கும் கடல். பெயர் தெரியாத கண்டம் தாண்டும் பறவைகளின் கலவையான ஒலியில் மிதக்கும் முகத்துவாரத்தின் அருகிலுள்ள ஆலமரத்தடியில் நின்று கொண்டிருக்கிறேன். தூரத்துக் கடலில் புள்ளியாய் நகர்ந்து செல்லும் சில வத்தைகள். என்னைத் தவிர துறை வளாகத்தினுள் யாரும் இல்லை.

பல்கலைகழகத்தேர்வுகள் முடிந்து விடப்பட்டிருக்கும் ஒரு வார விடுமுறையை ஊருக்குப் போகாமல் ‘ப்ராஜக்ட்’ குறித்தான கலந்துரையாடலில் கழிப்பதாய் வகுப்பு தோழர்கள் யாவரும் முடிவு செய்திருந்தோம். என்னால் அதில் முழுமையாகக் கலந்து கொள்ள முடியாது. GATE நுழைவுத் தேர்வு இருக்கிறது. நாளை இரவு சென்னை கிளம்பவேண்டும். அதற்கு முன்னால் இன்றே வந்து சந்திக்கும்படி உன்னிடமிருந்து திருப்பதி கம்பெனிக்கு போன். நான் வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாயிற்று. இதோ “பறந்து விடுவாளோ!” என எண்ணத் தோன்றும் தேவதையாய், பறக்கும் கூந்தலுடன் கடற்கரை மணலில் பாதங்கள் புதைய புதைய நடந்து வருகிறாய்.

‘சாரிடா குட்டி. லேட் ஆய்டுச்சு’

‘இன்னும் கொஞ்சம் லேட்டா வந்துருந்தேன்னா என்னைச் சுத்தி விழுது விட்ருக்கும்’

‘ஒஹோ, சார் கொஞ்ச நேரம் கூட காத்திருக்கமாட்டீங்களோ?’

‘ரொம்ப சிலிர்த்துக்காதடி, சும்மாதான் சொன்னேன்’

‘அந்த பயம் இருக்கட்டும். நாளைக்குதான சென்னைக்கு?’

‘ஆமா, நாளைக்கு நைட்’

‘தங்குறது கன்ஃபார்மா?’

‘ம், நம்ம சீனியர் நளினி வந்து கூப்பிட்டு போறேன்னு சொல்லிருக்காங்க. ஒன்னும் பிரச்னை இல்ல’

‘அவ வீட்ல தங்குறதோட நிறுத்திக்கோ. அவ கூட சுத்துனதா தெரிஞ்சுச்சு... அறுத்துறுவேன்’

‘ஏய், ஏன்டி அசிங்கமா பேசுற?’

‘ஓ! அவள சொன்னோன்னே சாருக்கு கோபம் வருது? என்ன?’

‘சீ, அப்படிலாம் இல்லை. நீயா ஏன் சும்மா..?’

‘டேய் தெரியும்டா. நீ மெட்ராஸ்ல என்னென்ன ப்ளான் வச்சுருக்கேன்னு.’
‘இப்படி கூப்பிட்டு வச்சு கடுப்படிக்கதான் காலங்காத்தால போன் பண்ணி வரச்சொன்னியா?’
‘ஹேய், சாரிடா குட்டி. சும்மா விளையாட்டுக்கு... வம்பிழுத்தேன்டா. சரி, செலவுக்கு காசு வச்சிருக்கியா?’

‘ 700 ரூபா இருக்கு. போதும்னு நினைக்கிறேன்.’

‘இந்தா. இதையும் வச்சுக்கோ’ என்றவாறு என் கைகளில் 200 ரூபாயைத் திணித்தாய். அது முழுக்க உனது உள்ளங்கை வியர்வையில் நனைந்திருந்தது. சாதாரண பணத்தாளின் மீது கூட உனது பிரத்யேகமான வாசத்தைப் பரிமாற்றம் செய்யும் விரல்கள் நிச்சயம் வரம் பெற்றிருக்கக்கூடும்.

‘இதெல்லாம் வேணான்டி. நீயே வச்சுக்கோ. ஒரு நிமிசம் இரு, முந்தாநேத்து கூட செலவுக்குப் பணம் இல்லைனு சொல்லிட்ருந்த. இப்போ எப்படி?’

‘இல்லடா, அம்மா மெஸ்பில்லுக்கு பணம் அனுப்பிருக்காங்க. அதுலயிருந்துதான் கொடுத்தேன். வார்டன்கிட்ட அடுத்த மாசம் சேர்த்து கட்டுறேன்னு சொல்லிருக்கேன்’

பெண்ணின் சுயநலமில்லாத அன்பு ஒரு ஆணை எப்படி பொறி கலங்கவைத்து பித்தாக்கும் என்பதற்கு அன்று இடம், பொருள், ஏவல் மறந்து உன்னை இழுத்து, திரும்பிப் பார்த்த சில கடற் பறவைகளுக்கு முன்பாக முத்தமிட்டதே சாட்சி.

‘டேய், எக்ஸாம் நல்லாப் பண்ணு. நீ ரெண்டு வருசத்துக்குள்ள M.tech முடிச்சு, காம்பஸ்ல செலக்ட் ஆகணும். நானும் நெக்ஸ்ட் இயர் M.Phil போட்டேன்னா ஒன்றரை வருஷத்தை இழுத்துருவேன். அதுக்கு மேல தாங்காதுடா. ப்ளீஸ், என்னைய கைவிட்றாத. செத்துருவேன். எக்ஸாம் எழுதும் போது என் முகத்தை ஞாபகத்தில வச்சுக்கோ.’

‘ஏய் லூசு ஏன்டி இப்படிலாம் பேசுற. கண்டிப்பா ரெண்டு வருசத்துல நம்ம கல்யாணம் நடக்கும். இப்போ அழுகாம சிரிச்சுக்கிட்டே டாட்டா சொல்லு பாப்போம்’

நவம்பர் 2010

நண்பனுடனான சந்திப்புக்கு சுமார் ஓராண்டுக்குப் பிறகு பெங்களூருவின் இதயப்பகுதியில் அமைந்திருக்கும் உணவகம் ஒன்றில் தோழியைப் பார்த்தேன். என்னைக் கடந்து கணவனுடன் கிட்டத்தட்ட ஓடிக்கொண்டிருந்தாள். பார்த்தாளா இல்லை பார்க்காதது போல் செல்கிறாளா என்கிற சந்தேகத்துடன் திரும்பி பார்த்தபொழுது இரண்டு டேபிள் தள்ளி அமர்ந்திருந்தவள், அந்த கணம் மாத்திரம் கண்களில் ஒரு சிரிப்பை காட்டிவிட்டு சடுதியில் தன்னைப் பூட்டிக்கொண்டுவிட்டாள். அப்போது தோன்றியது, “தேவகுமாரர்களுக்கு மட்டுமில்லை, தேவதைகளுக்கும் ஆயுள் குறைவுதான்.”


செப்டம்பர் 2005, நண்பனின் டைரியில் இருந்து...

பொங்கிப் பரவும் வியர்வை மணத்துடனும், சுமக்கவியலா பாரத்துடனும் ஏதேனும் ரூபாய் நோட்டு உங்கள் பழைய டைரியிலோ, வேண்டுமென்றே சாவி தொலைக்கப்பட்ட மேசை டிராயரினுளோ இருக்குமாயின் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள். உங்களுக்கு ஒருபோதும் இளைப்பாறுதல் கிடையாது.

6 comments:

vinthaimanithan December 29, 2010 at 1:06 PM  

இந்தத் தனித்த பனிமூடிய இரவில் ஏன்தான் இதைப் படித்தேனோ? மனசை அறுக்கும் கூர்மை... ஆம்! வாழ்வின் யதார்த்தத்துக்குப் புனிதத்துவங்களை உடைத்து உடைத்துக் கட்டுவதுதான் விளையாட்டு போல!

Mohan December 29, 2010 at 11:05 PM  

உங்கள் எழுத்து நடை மிகவும் அருமையாக உள்ளது.கதை முன்னும் பின்னும் பயணித்தது மிகவும் நன்றாக இருந்தது.

PRINCENRSAMA January 23, 2011 at 1:53 AM  

//வாழ்வின் யதார்த்தத்துக்குப் புனிதத்துவங்களை உடைத்து உடைத்துக் கட்டுவதுதான் விளையாட்டு போல!//

புனிதம் என்றெதுவுமில்லை என்று உடைத்துக் காட்டுகிறது.

PRINCENRSAMA January 23, 2011 at 1:53 AM  

//வாழ்வின் யதார்த்தத்துக்குப் புனிதத்துவங்களை உடைத்து உடைத்துக் கட்டுவதுதான் விளையாட்டு போல!//

புனிதம் என்றெதுவுமில்லை என்று உடைத்துக் காட்டுகிறது.

chandru / RVC January 27, 2011 at 12:34 AM  

விந்தை மனிதன், புனிதம் என்றெல்லாம் எதுவும் இருக்கிறதா என்ன? :)))
மோகன், நன்றி நண்பரே.
பிரின்சு - வி.ஐ.பி பாஸ் கிடைத்தது. :)))) நண்பேன்டா..!

ஸ்ரீதர்ரங்கராஜ் January 28, 2011 at 7:02 AM  

அருமை.நல்ல நடை.

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Romantico by Ourblogtemplates.com 2008

Back to TOP