அடையாளம்
>> Wednesday, July 18, 2007
கண்மாய்க்கரையோரம் நிற்கிறது ஒற்றைப்பனை
தண்டட்டி பெருசுகளுக்கு பாண்டிமுனியாய்
மஞ்சுவிரட்டுக்கு மாடு அவிழ்ப்பிடமாய்
பொட்டல் வெளிச் சூரியனின்
ஒற்றைப் பார்வையாளனாய்
வயல் கூலிகளுக்கு நிழல் கடிகாரமாய்
சோறுண்ணா குழந்தைகளுக்கு
கிலியூட்டும் பேய் பனையாய்
மேலத்தெரு பேச்சிக்கும்
கீழத்தெரு இசக்கிக்கும் சந்திப்பிடமாய்.
புழுதிக் காட்டின் இடையர்களுக்கு புகலிடமாய்
இன்னும் எத்தனையோ உண்டு அடையாளங்கள்…
ஆனாலும் அய்யா சொல்கிறார் பேரனுக்கு
“ஒடஞ்சு போன கள்ளுக்கலையத்தோட நிக்குது பாரு
அதான் ஒத்தப்பனை”
2 comments:
நன்றாக இருக்கிறது
-ஞானசேகர்
நல்ல கவிதை
Post a Comment