திற - குறும்படத் திரையிடல் & திறனாய்வு - வாழ்த்துகள் பிரின்சு!
>> Tuesday, December 22, 2009
கடந்த 17ஆம் தேதி மாலை ருஷ்ய கலாச்சார மையத்தில் நண்பன் பிரின்சு என்னாரெசு பெரியாரின் “திற” குறும்படம் திரையிடல் மற்றும் திறனாய்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் திரு.வீரமணி, திரைப்பட இயக்குனர் திரு S.P. ஜனநாதன், திரு. ‘நக்கீரன்' கோபால், திரு. சுப.வீ, வழக்குரைஞர் அருள்மொழி மற்றும் பலர் கலந்துகொண்டு குறும்படத்தைத் திறனாய்வு செய்தனர். அவர்கள் பேசியதை பதிவாக்கினால் 3 அல்லது 4 பதிவாகப்போடலாம்! ஆதலால் இங்கே, ஒரு நண்பனாய் மட்டுமே கலந்துகொண்ட என் பார்வையும், சில நினைவுப்பகிர்தல்களும் மட்டும்!
“திற” குறும்படத் திரையிடல் நிகழ்வில் கலந்துகொண்டது எனக்கு மிக நெகிழ்வான ஒரு தருணம். அரங்கினுள் இருந்தபோது எங்களது கல்லூரிக்காலத்தை - எல்லோருக்கும் போலவே வசந்தகாலமாய் இருந்த பருவத்தை - இனி என்றுமே திரும்பாத நாட்களை நினைவில் உணரத் தொடங்கினேன். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ‘Intercollege competition’ல் 120 கல்லூரிகளுடன் போட்டியிட்டு மூன்று கோப்பைகளை வென்று ‘Zone D Champions’ என்கிற அடையாளத்தோடு தல்லாகுளம் பகுதியை அலறவிட்ட அன்று என்ன உணர்வு இருந்ததோ அதே உணர்வில் இன்றும் இருந்தேன். கல்லூரி சரித்திரத்திலேயே கிட்டியிராத அந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த எங்கள் மூவரையும் பார்த்து “இந்த காலெஜோட தூண்கள்டா நீங்க, எழுதி வச்சுக்கங்க, நீங்க மூணு பேரும் மிகப்பெரிய இடத்துக்கு வருவீங்க. அன்னைக்கும் இதே வார்த்தையை நான் திரும்பவும் சொல்வேன்” என்று உணர்ச்சி மேலிட்டு கட்டிக்கொண்ட தமிழாசான் முனைவர். முருகேசன் கண்களில் நிழலாடினார். மூவரில் குரு- icici வங்கியின் 24 x 7 ஊழியனாயும், நான் கடலியலில் பவளப்பாறை ஆராய்ச்சியாளனாய் மாறி கடலுக்குள் குதித்துக்கொண்டும் இருக்கிறோம். முருகேசன் அய்யா ஆசைப்பட்டது போல பிரின்சு மட்டுமே இன்று கலைத்துறையில் ஒரு இடத்திற்கு வந்திருக்கிறான்.
திறனாய்வின் போது பிரின்சுக்குக் கிடைத்த ஒவ்வொரு பாராட்டுக்கும் அவனும், அவனது படைப்பும் தகுதியானவையே! மறைந்த பாகிஸ்தானிய எழுத்தாளர் சதத் ஹஸன் மாண்டோ அவர்களின் “கோல் தோ”(Open it) சிறுகதையை எடுத்துக்கொண்டு அதற்கு திரைக்கதை அமைக்கும் சவாலான வேலையை மிக நேர்த்தியாக செய்துள்ளான். இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக் கலவரத்தின்போது தன் தந்தையைப் பிரிந்துவிட்ட மகளுக்கு ஏற்படும் அவலமும், கதை நெடுக தன் மகளைத் தேடித்திரியும் தந்தையும்தான் கதைக்கரு. இதை மாண்டோ சிறுகதையில் நேர்த்திக்காட்டிய விதம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. ஒவ்வொரு கலவரத்தின் போதும், போரின் போதும் பெண்கள் மீது செலுத்தப்படும் வன்முறை உலகெங்கும் பொதுவானது, அதற்கு சாதி, மத, இன ரீதியிலான அடையாளங்கள் கிடையாது என முகத்தில் அறைந்து சொல்லும் கதை. அதிலும் கதையின் முடிவு நம்மை உறையவைக்கக்கூடியது.
‘கோல் தோ’ சிறுகதையின் மூலம் மட்டுமின்றி மாண்டோ படைப்புகள் மூலமாக தங்கள் முகமூடிகள் கிழிவதைச் சகியாத மதவாதிகளும், பிற்போக்குவாதிகளும் மாண்டோ மீது செலுத்திய அடக்குமுறை கொடுமையானது. இன்று அந்தப் பிற்போக்குவாதிகளில் யாரும் உயிரோடிருக்க வாய்ப்பில்லை. ஆனால் தன் படைப்புகளின் வழியே மனிதநேயத்துக்கும், அன்புக்கும் ஆதரவாக; வன்முறைக்கும், அடக்குமுறைக்கும் எதிராக தீராத பிரகடனங்களைப் பரப்பியபடி இருக்கும் மாண்டோ, பிரின்சு போன்ற அடுத்த தலைமுறை படைப்பாளிகள் மூலம் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக் கலவரத்தின் பின்னணியில் நடக்கும் கதையை பிரின்சு குஜராத் - கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து நடந்த கலவரப் பின்புலத்தில் நடப்பதாகக் காட்டியுள்ளான். அந்த சிறுகதை எழுதப்பட்டு 50 வருடங்கள் கடந்தபின்பும் அப்படியே இன்றும் பொருந்திப் போவதுதான் வரலாற்று சோகம். “கிழிக்கப்படும் யோனிகளின் சப்தம் தூங்கும் கடவுளர்களை எழுப்புவதற்கான இசை” என்ற அய்யனாரின் வரிகள் படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது நினைவுக்கு வந்து குற்றவுணர்வைக் கூட்டியது.
மாற்றுத் திறனாளர்களுக்கான ஒரு திரைப்படத்தை இயக்கிவரும் இயக்குனர் பாத்திமாபீவி அழுதுகொண்டே இக்குறும்படம் குறித்து தன் கருத்துக்களை பதிவு செய்த வேறொரு அரங்கில் நானும் இருந்தேன். சூலாயுதங்களைக் கொண்டு வயிற்றைக் கிழித்து கருவை எடுத்துத் தீயிலிட்ட கொடூரத்தை அவர் உடல் நடுங்கியபடி விவரித்தபோதும், நேர்மையான அணுகுமுறைக்கு நன்றி என்று சொல்லியபோதும், இப்படம் அவர் மனதை எந்தளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது.
தனது D.F.Tech ப்ராஜெக்ட் ஆக இத்தகைய ஒரு கதையை தேர்வு செய்யவே ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும். அதுவும் கொடுக்கப்பட்ட மிகக்குறைந்த வசதிகளை வைத்துக்கொண்டு 4 நாட்களில் மொத்த ஷெட்யூலையும் முடித்து சிறந்த ஒரு குறும்படத்தைக் கொடுத்திருப்பது உன் மீதான நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் அதிகப்படுத்துகிறது நண்பா! சராசரியான ஒன்றிரண்டு க்ளிஷேக்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் 14 நிமிடங்களில் ஒரு பார்வையாளனுக்கு இப்படம் உண்டாக்கும் மனக்குமைச்சல் அதிகம். நிச்சயம் ஒரு சமூகமாற்றத்தை உண்டாக்கும் இக்குறும்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்காக தமிழக அரசின் விருது என்பது குறைந்த மதிப்பீடே. இயக்கம் உட்பட மற்ற துறைகளிலும் இக்குறும்படத்திற்கு சிறப்பான ஒரு இடம் தரப்பட்டிருக்க வேண்டும்.
நீ சிகரங்கள் தொடவேண்டும் நண்பா... வாழ்த்து சொல்லிக்கொள்வது நமக்குள் வழக்கமில்லை... எனினும் என் உணர்வுகளைப் பகிரவேண்டும் எனத் தோன்றியதால் இந்தப் பதிவு.
3 comments:
வாழ்த்துகள் பிரின்சு!விரைவில் அடுத்த தளத்திற்கு நகர்ந்திடுவாய் என நம்புகிறேன்..
உங்களின் பகிர்வுக்கு நன்றிகளும், உங்களின் நண்பருக்கு வாழ்த்துக்களும்...
நண்பருக்கு என் வாழ்த்துக்கள்.
குஜராத் கலவரங்கள் தொடர்பான விசாரணையில் ஒன்பது வருடங்கள் கழித்து மோடி சென்ற வாரம் நேரடி விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார். என்னே, நம் நீதித் துறை, காவல் துறையின் வேகம்!
Post a Comment